பெண்ணே நீ வாழ்க


!செப்., 25-நவராத்திரி ஆரம்பம்


குடும்ப உறுப்பினரிடையே மதிப்பு, மரியாதை யாருக்கு அதிகம் என்றால் அது அம்மாவுக்கு தான். ஆண்களால் தனித்து இயங்குவது சிரமம்; பெண்களுக்கு அந்த சக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அம்மன்களுக்கு என தனிக்கோவில்கள் இருந்தாலும், சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மூலவர் மட்டும் தனித்து இருப்பதில்லை; அருகிலேயே அம்மன் சன்னிதியும் உண்டு. சக்தி இல்லாத ஜீவன், தனித்து இயங்க முடியாது என்பது இறைவனே ஒப்புக் கொண்ட விஷயம்.
பிருங்கி முனிவர் எப்போதும் சிவபக்தியில் திளைப்பவர்; சிவனை தவிர, வேறொருவரை வணங்க மறுப்பவர். ஒருமுறை இவர் கைலாயம் சென்ற போது சக்தியைத் தவிர்த்து, சிவனை மட்டும் வணங்கினார். சிவனை வலம் வந்தால், சக்தியையும் சேர்த்து வலம் வர வேண்டுமே என்பதற்காக, வண்டு வடிவெடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து, சிவனை மட்டும் சுற்றினார்.
ஜீவனும், சக்தியும் ஒன்றில் ஒன்று கலந்திருப்பதே படைப்பின் ரகசியம் என்பதை பிருங்கி முனிவருக்கு உணர்த்த, சிவன், சக்தியை தன் இடப்பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளித்து, இருவரும் ஒன்றே என்பதை பிருங்கிக்கு உணர்த்தினார். 'அர்த்தம்' என்றால், பாதி. 'நாரி' என்றால், பெண். பெண்ணைத் தன்னில் பாதியாகக் கொண்டவர் சிவன். அதாவது, இறைவன் ஆணும், பெண்ணுமாய் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம்.
ரிக் வேதத்தில், பெண்ணை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிட்டுள்ளனர். நவராத்திரியை ஒட்டி சிறுமிகளையும், 'சுவாசினி' எனப்படும் மூத்த சுமங்கலிகளையும் வழிபடுவது வழக்கம். முதல் பூஜையை கன்னிபூஜை என்றும், அடுத்ததை, 'சுவாசினி பூஜை' என்றும் குறிப்பிடுவர். இந்த வழிபாடு இன்று நேற்றல்ல, மகாபாரத காலத்திலேயே நடைபெற்றுள்ளது. 'அனுசான பர்வத்தில்' பெண்களை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வைத்திருக்காத நாடு முன்னேறாது என்று சொல்லப்பட்டுள்ளது.
பார்வதிதேவி துர்க்கையாக அவதாரம் எடுத்து தேவர்களைத் தொந்தரவு செய்த மகிஷாசுரனை அழித்தாள்; இதனால், 'மகிஷாசுரமர்த்தினி' என்ற பெயர் பெற்றாள். அக்காலத்தில், பெண்கள் வீராங்கனைகளாகவும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த குறிப்புகளையும் வரலாற்றில் பார்க்கிறோம். மதுரையை ஆண்ட தடாதகைபிராட்டி (மீனாட்சி) உலகையே வென்றிருக்கிறாள். அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதா மாபெரும் வீராங்கனையாகத் திகழ்ந்துள்ளாள்.
பெண்கள் கல்வியிலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு உதாரணமாக, கார்க்கி என்ற பெண் ஞானி, யாக்ஞவல்கியர் என்ற மாபெரும் அறிஞரிடம் வாதம் செய்த காட்சிகளை உபநிஷதங்களில் காண முடிகிறது. ஆக, பெண்மைக்கு என்றுமே நம் நாடு மதிப்பளித்து வந்துள்ளது. அந்தப் பெண்மைக்கு ஒன்பது நாள் விழா எடுக்கும் விதத்திலேயே நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பூமிக்கு பூமாதேவி, நீருக்கு கங்காதேவி, செல்வத்திற்கு லட்சுமி, கல்விக்கு சரஸ்வதி, வீரத்திற்கு துர்க்கை என பெண்களையே வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்கு தலைவிகளாக ஆக்கியுள்ளனர் நம் முன்னோர். நவராத்திரி நன்னாள் துவங்கும் இந்த நல்லவேளையில், நம் வீட்டிலும், நாட்டிலும் உள்ள பெண்களுக்கு மதிப்பளிப்போம்; பெண்மையை வாழ வைப்போம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தி.செல்லப்பா