நன்றி சொல்ல வந்தேன்!
''மோகன்... பரசுராம் மாமா ஏதோ ஒரு கம்பெனியில வேலை இருக்குன்னு சொன்னாராமே... போய் பாத்தியா?'' கேட்டாள் நர்மதா.
''போகணும்மா,'' என்றான் சலிப்புடன். எம்.காம்., முடித்து மூன்று ஆண்டுகள் ஆகியும், சரியான வேலை கிடைக்காமல், தடுமாறிக் கொண்டிருந்தான்.
மகனுக்கும் வேலை இல்லை; ஆபீஸ்ல லோன் வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு முன் வாங்கிப் போட்ட இடத்தில், வீடு கட்ட ஆரம்பித்து, பணம் பற்றாமல் பாதியில் கட்டடம் நிற்கிறது. இதற்கிடையில், கணவருக்கு கண்ணில் புரை விழுந்து, ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னதில், செலவுக்கு பயந்து தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள்.
பொழுது விடிந்து, பொழுது போனால் பல பிரச்னைகளும், கவலைகளும் மனதில் அழுத்த, வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது.
பைக்கிலும், காரிலும் வேலைக்கு செல்லும் மோகன் வயசுள்ள பையன்களை பார்க்கும் போது, தன் மகனுக்கு அப்படியொரு வாழ்க்கை அமையவில்லையே என்று மனம் கலங்கியது.
வேலைக்காரி வர, பாத்திரத்தை ஒழித்து போட்டவள், அங்கிருந்த நாற்காலியில் சோர்வாக அமர்ந்தாள்.
''என்னம்மா, புள்ளைக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கலன்னு கவலைப்படறியா... இப்படி மனசு சோர்ந்து உட்கார்ந்திருந்தா என்ன ஆகப் போகுது... பேசாம நம்ம செல்லியம்மன் கோவிலுக்குப் போய், உன் மனக்கஷ்டத்த அந்த ஆத்தாகிட்டே சொல்லு... நிச்சயம் உன் குறைய தீர்த்து வைப்பா,''என்றாள் வேலைக்காரி.
அவள் சொல்வது சரியென பட்டது. கோவிலுக்குச் சென்று வந்தால், மன ஆறுதல் கிடைக்கும் என நினைத்தவளாக, வேலைக்காரி சென்ற பின், கதவை பூட்டி கோவிலுக்குக் கிளம்பினாள்.
கோவிலில் கூட்டம் அதிகமிருந்தது.
ஆயிரம் கவலைகளோடும், பிரார்த்தனைகளோடும் மக்கள் அந்த அம்மனை தரிசிக்க வரிசையில் நின்றிருந்தனர்.
கஷ்டங்கள் வரும்போது, கடவுளைத் தானே நினைக்க வேண்டியிருக்கிறது.
பூக்கடையில் செவ்வரளி மாலை வாங்கியவள், வரிசையில் வந்து நின்றாள். எப்படியும் வரிசை நகர்ந்து, அம்மனை தரிசனம் செய்ய, ரொம்ப நேரம் ஆகும் என்று தோன்றியது.
தனக்கு முன் நிற்கும் பெண்மணியின் அருகில், தவழ்ந்தபடி வரிசையில் நகரும் அந்த இளம்பெண்ணைப் பார்த்தாள்.
இடுப்புக்கு கீழே இரண்டு கால்களும் துவண்டு தனியாகத் தொங்க, புடவையால் மூடிக் கொண்டு தவழ்ந்து தவழ்ந்து வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தாள்.
''என்னம்மா இது... மாற்றுத்திறனாளி பொண்ண வரிசையில் நிற்க வச்சு அழைச்சிட்டு வர்றீங்களே... பிரகாரத்தில் உட்கார சொல்லி, நீங்க அந்த இடத்துக்கு வரும்போது கூப்பிட்டுக்கக் கூடாதா... இப்படி இருக்கிற பொண்ணப் போய் கூட்டத்தில சிரமப்படுத்தறீங்களே,''என்றாள் நர்மதா.
''என் மக அதுக்கு ஒத்துக்க மாட்டாம்மா; 'அந்த அம்மனை மனசார தியானம் செய்தபடி, நானும் வரிசையில வர்றேன் எனக்கொன்னும் சிரமமில்லை'ன்னு சொல்லிடுவா,''என்றாள் அந்தப் பெண்.
கண்மூடி தியானித்தபடி செல்லும் அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் நர்மதா.
''உங்க மக படிக்கிறாளா?'' என்று கேட்டாள்.
''டிகிரி முடிச்சுட்டு, ஸ்கூல் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லித் தர்றா; தினமும் ஐம்பது பிள்ளைக அவளத் தேடி வரும்,'' என்றாள் பெருமையுடன்.
''என்ன செய்றது...கடவுள் ஆளுக்கொரு குறையையும், கஷ்டத்தையும் கொடுத்திடறாரு... மனசும், உடம்பும் பிரச்னைகளால துவளும்போது, அந்த அம்பாளை தேடி வந்து நம்ப கஷ்டத்தைச் சொன்னா மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்,'' என்றாள் நர்மதா
''நான், என் கஷ்டத்தையோ, குறையையோ சொல்ல வரலம்மா; கடவுளுக்கு நன்றி சொல்ல தான் என் மகளோடு வந்திருக்கேன்,''என்றாள் அந்தப் பெண்.
'மாற்றுத்திறனாளி பொண்ண வைத்துக் கொண்டு நன்றி சொல்ல வந்தேன்னு சொல்கிறாளே... அப்படியென்றால், இவள் மனதில் எந்தக் குறையும், பிரச்னையும் இல்லையா... இந்தப் பொண்ணே இவளுக்குப் பிரச்னையாத்தானே இருப்பா...' என்று நினைத்தாள்.
அவள் மன ஓட்டத்தை, அறிந்து கொண்ட அந்த அம்மா, ''நீங்க என்ன நினைக்கறீங்கன்னு எனக்கு புரியுது இப்படி உடற்குறையுள்ள பொண்ண வச்சுக்கிட்டு, எப்படி இப்படி பேசுறாங்கன்னு தானே நினைக்கிறீங்க; எல்லாத்துக்கும் காரணம் என் மகள் தான்.
''பிரேமா... இந்த அம்மா, உன்னோடு பேசணும்ன்னு நினைக்கிறாங்க; மனசிலே கவலைகளையும், கஷ்டங்களையும் சுமந்துகிட்டு, அந்த அம்பாளை தேடி வந்திருக்காங்கன்னு அவங்களைப் பாத்தாலே தெரியுது,''என்றாள்.
அம்பாள் ஸ்லோகத்தை முணுமுணுத்தபடி கண்மூடி இருந்தவள், கண் திறந்து, புன்னகையுடன் நர்மதாவை பார்த்தாள்.
''அம்பாள் கிட்டே கஷ்டத்தைச் சொல்லி, மனசை ஆறுதல்படுத்த வர்றீங்களா... கவலைப்படாதீங்க, எல்லாம் தன்னால தீரும். நடக்கக்கூட முடியாம, இவ எப்படி இவ்வளவு தன்னம்பிக்கையோடு பேசறான்னு பாக்கிறீங்களா... எனக்கு இது பெரிய குறையாகத் தெரியல. அன்பான அம்மா, அப்பாவை கொடுத்து, என்னைச் சுத்தி நல்ல உள்ளங்கள நடமாடவிட்டிருக்காரு அந்தக் கடவுள். நம்மை விட கஷ்டப்படறவங்க உலகத்தில் எத்தனை பேர் இருக்காங்க.
''அடுத்தவங்களைப் பாத்து, இவங்களை மாதிரி நம்மால வாழ முடியலையேன்னு நினைச்சு சுய பரிதாபத்த தேடறத விட, இந்த அளவுக்காவது நல்ல நிலையில இருக்கோமேன்னு மன நிம்மதியைத் தேடக் கத்துக்கணும்மா. எங்கம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு; என்னை பாத்து வேதனைப்பட்டவங்கதான் எங்கம்மா. சிறு பிள்ளையாக இருந்தப்ப, மத்தவங்க மாதிரி என்னால நடக்க முடியலையேன்னு நானும் நினைச்சவதான்.
''வளர்ந்த பின் தான், எங்கம்மா, அப்பாகிட்டே நெருங்கி பழக இந்தக் குறை ஒரு காரணமாக இருந்ததப் புரிஞ்சுக்கிட்டேன். கடைசிவரை அவங்களோடு இருக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. ஆண் மகன் இல்லாத என்னைப் பெத்தவங்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய கொடுப்பினைய, அந்தக் கடவுள் எனக்கு கொடுத்திருக்காரு.
''இந்த ஜென்மத்தில எனக்குக் கிடைச்ச உறவுகளோடு சந்தோஷமாக வாழணும்ன்னு முடிவு செய்து வாழ்ந்திட்டிருக்கேன். இன்னைக்கு இருக்கிற சந்தோஷங்கள இழந்துட்டு, நாளைய கஷ்டங்கள் எப்போ தீரும்ன்னு கவலைப்பட நான் விரும்பலைம்மா.
''இந்த அம்பாள்கிட்டே குறைகளைச் சொல்ல வரல. இப்படி ஒரு அன்பான குடும்பத்தில் என்னை மகளாக படைச்சதுக்கும், அவள் சன்னிதியில் தவழ்ந்து வந்து கும்பிட, என் கைகளுக்கு வலு கொடுத்ததுக்கும், இந்த பிறவியில் கிடைச்ச நிறைகளுக்கு மட்டுமே நன்றி சொல்ல வருவேன்.
''நீங்களும் கஷ்டங்கள நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்காம, எல்லாம் நிவர்த்தியாகுங்கிற நம்பிக்கையோடு அம்பாளை கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்லுங்க,''என்றாள் அந்த இளம் பெண்.
அம்பாளே, அந்தப் பெண் உருவில் வந்து, தன் மனக்கலக்கம் தீர பேசியதாக நினைத்து, அந்தப் பெண்ணைப் பார்த்து மனம் நிறைந்து புன்னகைத்தாள் நர்மதா.


ராஜ் பாலா

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends