ஆவின் பால் டேங்கர் லாரியில் இருந்து, தினமும், 2,000 லிட்டர் பால் திருடப்பட்ட விவகாரத்தில், 'மாஜி' அமைச்சர் மீது வழக்கு பாயுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


சென்னையில் உள்ள ஆவின் பால் பதனிடும் நிலையத்திற்கு, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து, பால் கொள்முதல் செய்யப்பட்டு, டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது.
அரசியல்வாதிகள் அடாவடி:


'டாஸ்மாக்' கடைகளில், பார்களை ஏலம் எடுக்க, அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் அடாவடி செயல்களில் ஈடுபடுவார்களோ, அதற்கு சற்றும் குறையாத வகையில், ஆவின் பால் டேங்கர் லாரி இயக்குவதற்கான ஒப்பந்தமும் எடுக்கப்படும்.அதற்கு அந்த துறையின் தலைமை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, 'கட்டாய கவனிப்பு' இருந்தால் தான் சாத்தியம்.அந்த வகையில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஆவின் நிர்வாகத்திற்கு, பால் கொள்முதல் செய்யும் டேங்கர் லாரிகளை இயக்க, சென்னை, அசோக்நகர், 55வது தெருவைச் சேர்ந்த, வைத்தியநாதன், ஒப்பந்தம் எடுத்தார்.
யார் இந்த வைத்தியநாதன்?


தெற்கு ரயில்வே ஊழியரின் மகனான வைத்தியநாதன், முதலில் சைதாப்பேட்டையில் குடியிருந்தார். ஆந்திராவில் இருந்து, சிறிய அளவில் பால் கொள்முதல் செய்து, சென்னையில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்த அவர், சென்னை, தி.நகரில் உள்ள, ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவரின் கார் புறப்படும் போது, அணிவகுத்து நின்று, வணக்கம் தெரிவிக்கும் ஒருவராக மாறினார். அதன் பயனாக, தென் சென்னை தெற்கு மாவட்ட, ஜெ., பேரவை இணைச் செயலர் பொறுப்பு கிடைத்தது. அதன் பின், உயர் அதிகாரிகளின் ரகசிய நட்பு வட்டத்தில் மிகவும் நெருக்கமானவராக மாறினார்.ஆவின் நிறுவனத்திற்கு பால் ஏற்றி வரும் ஒப்பந்தம் கிடைத்ததும், சிறிய அளவில், பால் திருடும் பணியை துவங்கினார். படிப்படியாக, திருடும் அளவை உயர்த்தியதால், 104 டேங்கர் லாரிகளுக்கு அதிபரானார்.திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் பகுதிகளில் இருந்து, ஒரு டேங்கர் லாரியில், 9,000 - 12 ஆயிரம் லிட்டர் வரை, பால் ஏற்றி வரப்படும்.அந்த லாரிகளை, திண்டிவனம் அருகே உள்ள, கோவிந்தபுரத்தில் நிறுத்தி, 2,000 லிட்டர் வரை பாலை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக, அதே அளவுக்கு தண்ணீரை கலந்து சென்னைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
எப்படி சிக்கினார்?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இப்படி, பால் திருடும் வேலை, கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த போதிலும், கமிஷன் கொடுப்பதில், ஆவின் உயர் அதிகாரி ஒருவருக்கும், வைத்தியநாதனுக்கும் முட்டல் ஏற்பட்டது. அந்த அதிகாரியை, வைத்தியநாதன், தன் அரசியல் செல்வாக்கால், சட்டையைப் பிடித்து அடித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின் தான், இந்த பால் கொள்ளை விவகாரம், அரசின் கவனத்திற்கு போனது.அதன் பின், கட்சியில் இருந்து வைத்தியநாதன் நீக்கப்பட்டார்; அவரது ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.


இந்த முறைகேடு குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:ஆவின் பால் கலப்படம் குறித்து விசாரிக்குமாறு, டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டார். அதன் படி, வைத்தியநாதனை கைது செய்து, அவரது வீட்டில், 'ரெய்டு' நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றிஉள்ளோம்.அவர் அளித்த வாக்குமூலத்தில், அரசியல்வாதிகள் மற்றும் ஆவின் உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார். அவர்களுக்கு கமிஷன் தரவே, பால் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மாதம் தோறும் எவ்வளவு கமிஷன் தொகை என்பதை டைரியிலும் எழுதி வைத்துள்ளார். இந்த மோசடிக்கு, அவரது மனைவி ரேவதி முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரையும் கைது செய்ய இருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


இந்த பால் திருட்டு விவகாரத்தில், 'மாஜி' அமைச்சரின் பெயர் அடிபடுவதால், அவர் மீதும் வழக்கு பாயலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.சி.பி.சி.ஐ.டி., போலீசார், வைத்தியநாதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில், 'மாஜி' மீது வழக்கு போடுவதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதுபோன்ற மோசடிகளை முடிவுக்கு கொண்டு வர, 'மாஜி'யை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
காவலில் எடுக்க முடிவு:


இந்த மெகா மோசடி குறித்து, விரிவாக விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வைத்தியநாதனை, 10 நாட்களுக்கு, காவல் விசாரணையில் எடுக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.பாலில் தண்ணீர் கலந்தால், அதன் தரம் குறைந்து விடும். இப்பிரச்னையைத் தீர்க்க, எஸ்.என்.பி., எனப்படும் பால் பவுடரை கலந்து பாலின் தரத்தை அதிகரிக்கச் செய்வர். 10 ஆண்டுகளாக, இந்த பால் பவுடரை விலை கொடுத்து வாங்கியதால், ஆவின் நிர்வாகத்திற்கு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


- நமது நிருபர் -Dinamalar