என் கடமையை செய்யவே எனக்கு நேரமில்லை. இதுல சாமி எங்கே கும்பிடுறது கோவிலுக்கு எங்கே போறது? என்று ஆதங்கப்படுபவர்கள் பலர் உண்டு. உண்மைதான். குடும்ப சுழலில் சிக்கிக்கொண்டு கோவில்களுக்கு செல்ல மனமிருந்தும் மார்க்கமின்றி தவிப்பவர்கள் பலர் உண்டு. குறிப்பாக பெண்கள் ஒவ்வொன்றுக்கும் கணவரிடமோ, பெற்றோரிடமோ அல்லது பிள்ளைகளிடமோ அனுமதி கேட்கவேண்டிய சூழலில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு.
===============================================================
நீ கர்மயோகி. ஒரு வினாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும்!
கடமையைவிட பெரிய வழிபாடு எதுவும் இல்லை என்பதை மகா பெரியவா உணர்த்திய நிகழ்வு இது.
கிராமத்தில் முகாம். விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணி, தரிசனத்துக்கு வந்தாள்.பெரியவாள் எதிரில் கையை கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது.
என்ன வேலை பண்றே?
வயல் வேலைக்கு போறேன் சாமி. ஆறு பசங்கள். மாமியா என்கிட்டே இருக்கு. காலையில சோறாக்கி வெச்சிட்டு போயிடுவேன். இருட்டினப்புறம் தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியை கும்பிடுறது? கோவிலுக்கு போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லை சாமி
தனது ஆதங்கத்தை வெளியிட்டாள்.
பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.
சாமி கும்பிடனும்னு நினைக்கிறாயே. அதுவே சாமி கும்பிட்ட மாதிரி தான்!
காலையில சூரிய உதயம் ஆனவுடனே, கிழக்கே சூரியனை பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வெச்சவுடனே மேற்கு பார்த்து ஒரு கும்பிடு போடு.
நீ கர்மயோகி. ஒரு வினாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும். சகல புண்ணியமும் கிடைச்சிடும்.
பெண்மணி கண்களை துடைத்துக்கொண்டாள். சூரியனைக் கும்பிடு சகல புண்ணியமும் கிடைச்சிடும்! என்ன, ஆறுதல்! என்ன, கருணை!
பெரியவாள் பல வகையான பழங்களை அந்த பெண்மணிக்கு கொடுக்கச் சொன்னார்கள். தீனமாக வந்த மங்கை, திரும்பிப் போகும்போது அரசியாக மங்கையர்க்கரசியாக போனாள். பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும். சகல புண்ணியமும் கிடைச்சிடும்.
காஞ்சி செல்லவேண்டும். பெரியவா அதிஷ்டானத்தை ஒரு முறையேனும் தரிசிக்கவேண்டும் என்று விரும்பினாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒத்துழைக்காததால் செல்ல முடியாதோர் பலர் உண்டு. அப்படிப்பட்டோர் மகாபெரியவாவை நினைத்து தினமும் இருவேளை வணங்கி, தங்கள் கடமைகளை செய்து வாருங்கள். ஒரு நாள் அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
* கடமையை செய்தாலே போதும் தான். ஆனால் அதே சமயம் எதைப் பற்றியும் கவலையின்றி தானும் தன் குடும்பமுமே இந்த உலகம் என்று முடிவு செய்து சுயநல வாழ்க்கையும் வாழக்கூடாது. அவரவர் மனசாட்சிக்கு தெரியும் தங்களுக்கு எதற்க்கெல்லாம் நேரமிருக்கிறது என்று. இயன்ற போது எளிய சேவைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். மேற்படி சம்பவத்தில் வரும் பெண் நமக்கெல்லாம் சோறிடும் விவசாய வேலை செய்து வருபவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைவிட ஒரு பெரிய பொது சேவை இருக்க முடியுமா? எனவே தான் பெரியவா அவர்களை அனுக்ரகித்தார்கள். - See more at: http://rightmantra.com/?p=13911#sthash.okllqHQD.dpuf

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends