சூரபத்மனை, முருகப் பெருமான் ஆட்கொண்டதற்காக கந்தசஷ்டி விழாவை, கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். சிவனின் நெற்றிக்கண்ணில் பிறந்த பொறிகளில் இருந்து உருவானவர் முருகன் என்பர். ஆனால், ராமாயணக் கதையில், முருகனின் பிறப்பு பற்றி சற்று வித்தியாசமாக சொல்கிறார் விஸ்வாமித்திரர்.
ஒருசமயம் சிவன், தன் சக்தியை வெட்ட வெளியாக இருந்த பூமியில் விட்டார். அந்த சக்தி, காடு, மலை, நதி, ஏரி, நாடு என, பல வகையில் உருப்பெற்றது. இதனால், பூமியின் பாரம் அதிகரித்தது. இனியும் அவரது சக்தியைத் தாங்க முடியாதென்ற நிலையில், அக்னி மற்றும் வாயுவின் உதவியை நாடினர் தேவர்கள். அவர்கள், சிவனின் சக்தியைத் தாங்கினர்.
அக்னி தாங்கிய சக்தி மலையாக மாறியது; அந்த மலையில், நாணற்புல் உருவானது. அங்கே இருந்த கிருத்திகைப் பெண்களுக்கும், அக்னிக்கும் புத்திரனாக ஸ்கந்தர் அவதரித்தார் என்று ராமாயணத்தில் அத்தியாயம், 36ல் இந்த வரலாறு உள்ளது.
அத்தியாயம், 37ல் சற்று வித்தியாசமான கதை உள்ளது. சிவனின் சக்தியை தாங்கிய அக்னிதேவன், அந்த சக்தியை பார்வதியின் சகோதரியான ஆகாச கங்கையிடம் செலுத்தினான். அவளால், அந்த கர்ப்பத்தை தாங்க முடியவில்லை; எனவே, இமயத்தில் வெள்ளை மலையாக இருந்த சிவனிடமே அதைச் சேர்த்து விட்டாள்.
அந்த சக்தி ஒரு குழந்தையாகி, ஆறு முகங்களுடன் விளங்கியது. அதற்கு கிருத்திகை பெண்கள் பால் கொடுத்து வளர்த்தனர். கர்ப்பத்தில் இருந்து விழுந்ததால் கந்தன் என்றும், கிருத்திகைப் பெண்களால் பால் தரப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் பெயர் பெற்றார்.
இந்தக் கதையை நமக்கு அளிக்கும் விஸ்வாமித்திரர், 'இந்த புண்ணிய சரித்திரத்தை நம்பிக்கையுடன் கேட்பவர்களும், சிவனின் சக்தியான குமாரசுவாமியிடம் பக்தி வைப்பவர்களும் பேரன், பேத்திகளுடன் சுகமாய் வெகுகாலம் பூமியில் வசித்து முடிவில் கந்தலோகத்தை அடைவர்...' என்றும் பலன் சொல்லி முடிக்கிறார்.
முருகன் பிறந்ததன் நோக்கம், சூரபத்மன் மற்றும் அவன் குலத்தவரால் துன்புறுத்தப்பட்ட தேவர்களைக் காப்பதற்காக!
கந்தசஷ்டி எல்லா முருகன் தலங்களிலும் நடந்தாலும், சூரசம்ஹாரத்திற்கு சிறப்பு பெற்றது திருச்செந்தூர். இங்கு கந்தசஷ்டி விழாவை ஒட்டி, அறுகோண வடிவ ஹோம குண்டம் அமைக்கப்படுகிறது. முருகனின் வெற்றிக்காக துவக்கப்படும் யாக குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தரிஷிகள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்களை கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். ஆறாம் நாளன்று, கடற்கரையில் எழுந்தருளும் ஜெயந்தி நாதர், சூரனை சம்ஹாரம் செய்து வெற்றி வேலனாக காட்சியளிப்பார்.
கந்தசஷ்டியன்று அதிகாலை, 4:30- - 6:00 மணிக்குள் நீராட வேண்டும்.
அன்று பகலில் சாப்பிடாமல், 'ஓம் சரவணபவ' 'ஓம் சரவணபவாய நம' 'ஓம் முருகா' ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை, பகல் முழுவதும் ஜெபிப்பதுடன் திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முககவசம் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.
மாலையில், முருகன் கோவிலுக்குச் சென்று, சூரசம்ஹார நிகழ்ச்சியைத் தரிசித்து வந்த பின், நீராட வேண்டும்; பின், கோவிலுக்கு சென்று விளக்கேற்றி முருகனை வழிபட வேண்டும்.
கந்தசஷ்டி விரதம் இருப்போருக்கு புத்திரதோஷம் விலகும்; மழலை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும்; நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தி.செல்லப்பா
Dinamalar