தமிழ்நாட்டில் உள்ள திரு என்கிற எழுத்துக்களில் துவங்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பழமை வாய்ந்த ஆலயம் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு ஆலயத்தின் பின்னணியிலும் ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் வரலாறும் இருக்கும். நம் ஆலயங்கள், வெறும் கற்களால் கட்டப்பட்டவை அல்ல. பக்தியும், பொதுநலனும் சேர்த்து கட்டப்பட்டவை. ஆகையால் தான் பழமை வாய்ந்த ஆலயங்களுக்கு செல்லும்போதெல்லாம் ஒருவிதமான அதிர்வலைகளை நம்மால் உணரமுடிகிறது.
அப்படி ஒரு திவ்யமான வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கோவிலைப் பற்றி தற்போது பார்ப்போம்.
அவரவருக்குரிய சம்பிரதாயங்களை தவறாமல் பின்பற்றும் அதே நேரம் மூர்த்தி பேதங்களை ஒழித்து அனைத்து தெய்வங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது கீழ்கண்ட வரலாற்றை படித்தால் உங்களுக்கு புரியும்.
வரம் கேட்ட பக்தனை ஹரியிடம் அனுப்பிய ஹரன் !

உபரிசரவசு என்ற பாண்டிய மன்னன், மதம் பிடித்த ஒரு யானையை வேட்டையாடச் சென்றபோது, தவம் செய்து கொண்டிருந்த ஒரு யோகியைத் தவறுதலாகக் கொன்று விட்டான். அதனால் மனமுடைந்த அவன், தன் அரச பதவியைத் துறந்து, பாவ விமோசனம் வேண்டி, திருப்பேர் நகரில் கடுந்தவம் செய்தவுடன், சிவபெருமான், மன்னன் முன் தோன்றி, அருளாசிகள் வழங்கி, அவ்விடத்தில் பெருமாள் கோயில் ஒன்றைக் கட்டுமாறு பணித்தார்.
ஸ்ரீமன் நாராயணன், அவனுக்குப் பாவ விமோசனம் அளிக்கும் வரை, தினம் பெருமாளைத் தொழுது, பிராமணர்களுக்கு அப்பத்தையும், பாயசத்தையும் பிட்சையாக வழங்குமாறும் சிவபெருமான் கூறினார். அதன்படி, திருப்பேர் நகரில் கோயில் கட்டிய உபரிசரவசு, தினம் அவ்வாறே பிட்சை வழங்கி வந்தான். ஒரு நாள், பெருமாள் ஓர் ஏழை பிராமணர் உருவில் மன்னன் முன் வந்து, தான் நெடுந்தூரத்தில் இருந்து வருவதாயும், கடும்பசியில் உள்ளதாயும் கூறி, உணவளிக்குமாறு வேண்டினார். நூறு பேருக்கான உணவை (அப்பங்களை) உண்ட பின்னரும் பெருமாள் தன் பசி தீர்ந்தபாடில்லை என்றுரைத்ததால், மேலும் உணவு சமைத்து வழங்க சற்று நேரம் ஆகுமென்பதால், பெருமாளை தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு மன்னன் வேண்டினான்.அதே நேரத்தில், தன் பக்தனான மார்க்கண்டேயரின் முன் தோன்றிய சிவபெருமான், திருப்பேர் நகரில், ஒரு ஏழை பிராமணர் வடிவில், பெருமாள் வந்து தங்கியிருக்கும் விஷயத்தை (மார்க்கண்டேயர் தனது 16-வது வயதில் மரணம் அடைவார் என்று விதிக்கப்பட்ட காரணத்தின் பேரில்) அவரிடம் கூறி, அவருக்கு இறவா வரம் கிடைக்க, பெருமாளின் அருளாசியைப் பெறுவதே ஒரே வழி என்று கூறி மறைந்தார்.
மன்னனின் வீட்டுக்குச் சென்ற மார்க்கண்டேய ரிஷி, சயன கோலத்தில், ஒரு கையில் அப்பக்குடத்துடன் இருந்த ஏழை பிராமணரை நூறு முறை பணிந்தெழுந்தார். உடனே பெருமாள் அவருக்குத் தன் சுயரூபம் காட்டி, வலக்கையை உயர்த்தி அவரை ஆசிர்வதித்து, இறவா வரமளித்தார். உபரிசரவசுவுக்கும் சாப விமோசனம் வழங்கினார்.
மார்க்கண்டேயருக்கு ஆசி வழங்கிய அத்திருக்கோலத்திலேயே, திருப்பேர் நகரில் மூலவர் காட்சியளிக்கிறார். பெருமாளுக்குத் தினமும் இரவில் அப்பம் பிரசாதமாக நைவேத்யம் செய்வதும் மரபானது. மார்க்கண்டேய ரிஷி இத்திருத்தலத்தில் இறவா வரம் வேண்டிப் பெற்றதால், அவர் தினம் ஸ்நானம் செய்த குளம் மிருத்யு விநாசினி என்று போற்றப்படுகிறது.
- See more at: http://rightmantra.com/?p=14458#sthash.IlIqgytD.dpuf

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends