Announcement

Collapse
No announcement yet.

சிவபக்திக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிவபக்திக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந

    உதரபரணமாத்ரம் ஸாத்ய முத்திச்ய நீசேஷு
    அஸக்ருதுபநிபத்தாம் ஆஹிதோச்சிஷ்டபாவாம் |
    அஹமிஹ நுதிபங்கீம் அர்ப்பயித்வோபஹாரம்
    தவ சரண ஸரோஜே தாத ஜாதோபராதீ || 48 ||


    (பொருள் : ஸ்வாமி! நான் இங்கு உன்னைத் துதிக்கும் முன் எவ்வளவோ அதமர்களை இந்த வாக்கினால் துதித்திருக்கிறேன். வயிறு வளர்ப்பதற்காக அல்பர்களைத் துதித்த வாக்கினால் உன்னைத் துதிப்பது பெரிய அபராதமாகும். நிந்திக்கத்தக்க காரியத்தில் ஈடுபட்டிருந்த என் வாக்கு அசுத்தமாகிவிட்டது. அதை இப்போது உன் விஷயத்தில் பிரயோகிப்பதனால் நான் செய்யும் அபராதத்தை நீ க்ஷமித்துக் கொள்வாயா?)


    அப்பைய தீட்சிதர் (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவி யிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.


    15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொண்டை நாட்டை சின்னவீரப்ப நாயக்கர் எனபவரின் புத்திரர் சின்னபொம்ம ராஜா என்பவர் ஆண்டு வந்தார். அவர் தனது நாட்டில் வசித்து வந்த ஸ்ரீரங்கராஜாத்வரி என்கிற சாஸ்திரம் அறிந்த பண்டிதரை ஆதரித்து வந்தார்.
    ஸ்ரீரங்கராஜாத்வரியின் விவாஹமாகி இல்லறம் நடத்தி வரும்போது குழந்தை பிறக்கவில்லையே என்று மிகவும் வருந்தி, ஸ்ரீ மரகதவல்லி ஸமேத ஸ்ரீமார்க்க ஸஹாயரேஸ்வரரை வேண்டினார். சிவபெருமான் ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ மார்க்கஸஹாயர் என்ற பெயருடன் விரிஞ்சீபுரம் என்ற க்ஷேத்திரத்தில் அருள் பாலிக்கும் மூர்த்தியாக விளங்குகின்றார். பிள்ளைப் பேறுவேண்டிய ஸ்ரீரங்கராஜாத்வரிக்கு பரம கருணையுடன் ஸ்ரீமார்க்கஸஹாயர் அசரீரியாக “குழந்தாய் ரங்கராஜ! சிதம்பரத்தில் உனக்கு அருள்புரிகின்றேன். நீ அங்கு வருவாயாக” என்று அருளிச்செய்தார். இந்த அசரீரி வாக்கைக் கேட்ட ஸ்ரீரங்கராஜாத்வரி ஆனந்தத்தில் மூழ்கினார்.
    உடனே மனைவியுடன் சிதம்பரம் சென்றார். அவர்கள் சிதம்பரம் சென்றவுடன் அந்த தம்பதிகள் தினந்தோறும் சிவகங்கையில் ஸ்நானம் செய்து மூன்று வேளைகளிலும் சிவதரிசனம் செய்து ஸ்ரீநடேசப்பெருமானை ஆராதனம் செய்தார்கள். இப்படி ஐந்து வருஷம் சென்றது. நாள்தோறும் நடராஜ மூர்த்தியின் சன்னிதியில் இருந்து இந்த தம்பதிகள், “ஹே ப்ரபோ! எங்களிடம் எப்போது கருணைவைக்கப்போகிறீர்கள்” என்று மனமுருக வேண்டினார்கள்.


    ஒருநாள் இம்மாதிரி மனங்கரைந்து திருவருளைவேண்டிய பிரார்த்தித்து நின்ற அந்த தம்பதிகட்கு திடீரென்று ஆகாசத்தில் ஒரு சத்தம் கேட்டது. “ஹே பக்தசிகாமணியே! உன்னுடைய தவத்தினால் நான் மனம் மகிழ்ந்தேன். உனக்குச் சீக்கிரமாகப் புத்திரர்கள் இருவரும், பெண் ஒருத்தியும் பிறக்கப் போகிறார்கள்” என்று அருளிச்செய்தார். இதனைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ஸ்ரீரங்கராஜாத்வரி தனது இல்லம் சேர்ந்து அன்று இரவு இருக்கும்போது ஸ்ரீநடராஜப் பெருமான் பூஜகர் உருவத்தில் வந்து பகவானின் அபிஷேக தீர்த்தம் என்று கூறி பழரசத்தைச் சாப்பிடும்படி ஸ்ரீரங்கராஜாத்வரியின் பத்தினியிடம் கொடுத்து மறைந்தார். அந்தப் பழரசத்தை அந்த அம்மையார் சாப்பிட்டதும் சிவபெருமானின் திருவருளால் கர்ப்பம் ஏற்பட்டது.
    அப்பைய தீட்சிதர் வடாற்காடு வேலூருக்கு அப்பால் திரிவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520 ல் பிறந்தார். தந்தை இரங்கராஜ தீட்சிதர். இளம்வயதில் சிவதீட்சை பெற்று சிவமூல மந்திரத்தை முறைப்படி ஓதுபவராயிருந்தார்.


    அப்பைய தீட்சிதர் வடமொழியில் உள்ள பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறு வயதிலேயே வேதாந்தம், இயல், இலக்கணம் யாவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம், இவைகளில் ஆய்வுகள் அனேகம் செய்து, பெரிதும் சிறிதுமாக 104 நூல்கள் எழுதியதாகத் தெரிகிறது. அவைகளில் இன்றும் 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன. அவருடைய உயர்ந்த கவித்திறன் அவரது படைப்புகளில் தெரிகிறது. அவர் எழுதிய நூல்களின் தரத்தையும் அவை உணர்த்தும் பொருளின் ஆழத்தையும் தான் கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர எண்ணிக்கையை அல்ல.
    தீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ, அவர் ஒரு துண்டின்மேல் அந்த வலியை தன் மந்திர வலுவால் ஈர்த்து வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம். அப்பொழுது அத்துண்டு இப்படியும் அப்படியும் குதித்துக்கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் திரும்ப அந்த வலியை வாங்கிக் கொள்வாராம். தொல்வினையை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பதை நம்பினவர் அவர். (இது பற்றி நாம் ஏற்கனவே கடவுள் VS கர்மா தொடரில் விளக்கியிருக்கிறோம்.)
    அப்பைய தீட்சீதருக்கு எல்லா சாஸ்திரங்களும் தெரியும். அவர் மாதிரி எல்லா சாஸ்திரங்களுக்கும் பாஷ்யம் எழுதினவர் ஒருவரும் இல்லை. அத்தகைய பெரியவருக்குத் ஒருமுறை சந்தேகம் வந்தது. “ஈசுவரனிடத்தில் நான் பக்தி பண்ணுகிறேனே, என் ஜன்மம் கடைத்தேறுமா ? கடைத்தேறாதா ? நிஜமான பக்தி இருக்கிறதா ? சும்மா வேஷம் போடுகிறோமா ? சமயம் வந்தால் – ஆபத்து வந்தால் ஈசுவரன் நினைப்பு மறந்து போகுமா ? என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. அவருக்குத் தம்மைத் தாமே பரீட்சை செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை. நாம் சுவாமி தரிசனம் செய்கிறோம், மழை வந்தால் ஓடிவிடுகிறோம். இதுதான் நம் பக்தியின் நிலை. நன்றாக இருக்கிற வரைக்கும் பக்தன் என்று நம்மை நினைத்துக் கொண்டிருப்போம். நம் பக்தி சோதனைக் காலங்களில் தளர்ந்து விடும்.
    அப்பைய தீக்ஷிதரும் தம் பக்தியைச் சோதித்துப் பார்க்க முடிவு செய்தார். ஆனால் அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழியோ மிகவும் ஆச்சரியமானது, அபாயமானது. பைத்தியம் பிடித்தால் அந்தச் சமயத்தில் கெட்ட வார்த்தைகள் சொல்லாமல், காம வார்த்தைகள் சொல்லாமல், ஈசுவர பக்தி பண்ணினால் அப்பொழுது நம்முடைய பக்தி மெய்யானதுதான் என்று தெரிந்துகொள்ளலாம், ஆகையால் நமக்குப் பைத்தியம் வந்தால் நல்லது என முடிவு செய்தார். ஊமத்தங்காய் – ஊமத்தம்பூ இவற்றைச் சாப்பிட்டால் பைத்தியம் பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவருக்கு இன்னொரு பயம் வந்தது. பைத்தியம் பிடித்திருக்கும்போது நாவில் ஈசுவர நாமங்கள் வந்தால் குற்றமில்லை மாறாக கெட்ட வார்த்தைகளோ அல்லது காம வார்த்தைகளோ வந்துவிட்டால் அப்புறம் ஆயுள் முழுவதும் அப்படியே பைத்தியமாகத் திரிய வேண்டியதுதான். ஜன்மம் முழுதும் வீணாய்ப் போய்விடுமே ! திரும்பவும் பைத்தியம் தெளிந்தால்தானே ஈசுவரனிடத்தில் பக்தி பண்ணி ஜனன நிவிருத்தி பண்ணிக்கொள்ளலாம் ? என்று எண்ணினார்.
    பைத்திய நிவர்த்திக்காக இன்னொரு மருந்தையும் சித்தம் பண்ணி வைத்துக்கொண்டார். சிஷ்யர்களைக் கூப்பிட்டுப் பக்கத்தில் வைத்துக்கொண்டு “நான் சொல்வதையெல்லாம் எழுதுங்கள்” என்று கூறினார். பின்னர் பைத்தியம் பிடிக்கிற மருந்தைச் சாப்பிட்டார். அவருக்குப் பைத்தியம் பிடித்தது. உடனே உளற ஆரம்பித்தார். அவர் சொன்னதையெல்லாம் சிஷ்யர்கள் எழுதிக்கொண்டார்கள். திரும்ப அந்தப் பைத்தியக் காலத்திற்குள் ஊமத்தம்பூவின் குணத்தை மாற்றக்கூடிய மருந்தைக் கொடுத்தார்கள். பைத்தியம் தெளிந்துவிட்டது அப்பைய தீக்ஷிதருக்கு. அவருக்குப் பைத்தியம் பிடித்திருந்த காலத்தில் என்ன பிதற்றினார் என்று பார்த்தால் ஐம்பது சுலோகங்கள் ஈசுவரன்மேல் பாடியிருந்தார். ” உன் அனுக்கிரகத்தை நான் என்ன சொல்வேன் ! பரம சுலபமான புஷ்பங்களைப் பக்தர்களிடத்திலிருந்து கிரகித்துக்கொண்டு, அவர்களுக்கு நீ எவ்வளவு பெரிய அனுக்கிரகம் செய்கிறாய் ! நான் போடுவது தும்பைப் பூ, நீ எனக்குக் கொடுக்கிறது மோக்ஷம் ” என்று கண்ணிலிருந்து தாரை தாரையாக ஜலம் வர ஸ்தோத்திரம் செய்தார். அந்தக் கிரந்தத்துக்கு “ஆத்மார்ப்பண ஸ்துதி” அல்லது “உன்மத்த பஞ்சாசத்” என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம்பூ. ஊமத்தம்பூவைச் சாப்பிட்டுவிட்டுப் பாடிய பாட்டு அது. அவருக்கு நிறைந்த பக்தி இருந்ததால்தான், பைத்தையம் பிடித்தபோதும், அந்த பக்தி மாறவில்லை, பக்தியில் ஈடுபட்டிருந்ததனால் அப்படியே தன்மயமாக இருந்தார். பைத்தியம் பிடித்தபோதுகூடப் புத்தி மாறாமல் ஒரு ஆத்மா இருந்ததானால் அது தான் சாகிறபோதும், என்ன துக்கம் வந்தாலும், வியாதி வந்தாலும் ஈசுவரன் ஒருவனைத்தான் நினைக்கும். மற்றதை நினைக்கக்கூடாது என்று ஈசுவரனையே நினைக்கும்.
    இதுவல்லவா பக்தி… நாமெல்லாம் மிகப் பெரிய பக்திமான்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். நாம் இப்படி ஒரு பரீட்சை செய்து கொண்டால் அப்போது தெரியும் நம் உண்மை சங்கதி. பித்துப் பிடித்த பின்னும் ஈஸ்வரனையே பாடும் அவர் எங்க, உறக்கத்தில் வரும் கனவில் கூட நல்ல நினைவுகள் எட்டிப்பார்க்காத நாம் எங்கே…
    சைவத்தை நிலைநிறுத்த அப்பைய தீட்சிதர் பலவித சவால்களை சந்திக்கவேண்டியிருந்தது. அதில் சிலவற்றை பார்ப்போம்.
    தொண்டை நாட்டை ஆண்டு வந்த சின்ன பொம்ம ராஜன் என்கிற மன்னன், அப்பைய தீட்சிதரின் மேல் பெரும் பக்தியுடனும் மரியாதையுடனும் இருந்தது தாத்தாச்சாரியார் என்கிற வைஷ்ணவருக்கு துளியும் பிடிக்கவில்லை. தாதாச்சாரியார் அவ்வப்போது அப்பைய தீட்சிதருக்கு பல இடையூறுகள் செய்து வந்தார். எப்படியும் அரசனுக்கு அவர் மீது உள்ள மதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணங் கொண்ட தாதாசாரியார் தீக்ஷிதர் மீது ஒரு குற்றம் சாட்டினார். ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அரசனை ஆசீர்வதிக்கும் போது எப்பொழுதும் இடது கையில் ஆசிர்வதிப்பார். இதையே அரசனிடம் குற்றமாகக் கூறி அப்பய்ய தீக்ஷிதர் உங்களை இடது கையினால் ஆசீர்வதிப்பது அவரது செருக்கினைக் காட்டுகிறது என்று கூறி அவனது மனதைக் கலைக்க முயன்றார். அரசனும் இதை தீக்ஷிதரிடமே கேட்டு விட்டான். மறுநாள் சபையில் இதைப் பற்றிய விசாரம் வரும் போது மற்றைய பண்டிதர்கள் அனைவரும் மெளனமாக இருந்தார்கள். தீக்ஷிதேந்திரர் உடனே எழுந்து சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வண்ணம் உண்மையான ஒரு பிராமணனின் வலதுகையில் அக்னி இருப்பதால் அந்த பிராமணன் தனது இடதுகையினால் தான் ஆசீர்வதிக்க வேண்டும். எந்த வஸ்துவை நோக்கி அந்த பிராமணனின் கை தூக்கப்படுகிறதோ அது அவனது கையின் அக்னியால் எரிந்து விடும் என்று கூறினார். இந்த விளக்கத்தை ஏற்க மற்றையோர் தயக்கம் காட்டினர். அத்தகைய அக்னி தீக்ஷிதரின் வலது கரத்தில் இருக்கிறதா என்று அறிய விரும்பினர். ஸ்ரீதீக்ஷிதர் உடனே அரசனைப் போன்று ஒரு படம் ஒன்றை ஒரு வஸ்திரத்தில் எழுதி வரச் சொன்னார். அங்ஙனமே ஒரு வஸ்திரத்தில் அரசனின் படம் எழுதி சபைக்குக் கொண்டு வரப்பட்டது. தீக்ஷிதர் அந்த உருவத்தினை நோக்கித தனது வலது கரத்தினைக் காட்டினார். உடனே அந்த வஸ்திரம் எரிந்து சாம்பலாயிற்று. நெருப்பின் வேகத்தைத் தாங்க முடியவில்லை. உடனே அரசன் தீக்ஷிதரை வணங்கி அக்னியை அடக்கிக் கொள்ளும்படிச் செய்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அரசனுக்கு தீக்ஷிதரிடம் பக்தி மிகவும் அதிகமாகியது.


    ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்களின் பெருமை இங்ஙனம் மேலும் மேலும் விருத்தி அடைவதைக் கண்டு பொறுக்காதவராகி, தாதாசாரியார் மிகவும் பண்டிதராயிருந்தும் பொறாமையினால் மதி மயக்கங்கொண்டு ஸ்ரீதீக்ஷிதேந்திரரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று எண்ணினார்.
    அரசனது முத்திரை மோதிரத்தை எப்படியோ திருடி அரசசாஸனம் போன்ற உத்திரவைத் தயாரித்து தீக்ஷிதர் அன்று இரவு இரண்டாம் யாமத்தில் அங்கு வரும் போது அவரைக் கொன்று விட வேண்டும் என்று அரசனின் முத்திரையைச் சேனாதிபதியிடம் காண்பித்தார். இந்தக் காரியத்தைச் செய்ய சேனாபதி மனம் புழுங்கினாலும், அரசனின் முத்திரையைக் காண்பித்து தாதாசாரியார் மிகவும் கடுமையாகத் தூண்டியதால் ஒருவாறு துணிந்தான். அரண்மனை வாயிலுக்கும் தீக்ஷிதர் இல்லத்திற்கும் இடையே உருவின வாட்களுடன் சேனா வீரர்களை நிற்க வைத்து தீக்ஷிதர் வருகையை எதிர்நோக்கியிருந்தான். இரவு நேரத்தில் இம்மாதிரி ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு தாதாசாரியார் ஒரு கட்டியங்காரனை அனுப்பி, அரசன் உங்களை அழைக்கின்றார் என்று இரண்டாவது யாமத்தில் தீக்ஷிதரிடம் கூறினான். பரமசிவாவதாரமான நமது தீக்ஷிதமணியானவர் அரசனுக்கு ஏதோ இந்த நள்ளிரவில் ஆபத்து வந்து விட்டது என்று எண்ணி மார்க்கஸஹாய ஈச்வரரை வழக்கம் போல் தியானம் செய்து கொண்டு அரண்மனைக்குக் கிளம்பினார்.
    “ஒரு மலையை ஒத்ததும், கண கண என்று சப்திக்கும் மணியை கழுத்தில் கொண்டதுமான நந்தியின் மீது ஆரோஹணித்து ஸகல லோகபாலகர்களாலும் துதிக்கப்படுபவரும், ஆனந்த ஸாகரமும், பர்வதராஜன் புத்திரியான பார்வதி தேவியைப் பக்கத்திலே கொண்டுள்ள ஆனந்தமாகிற அம்ருதக் கடலும், ஸகல தேவர்களுக்கும் அரசருமான பரமேச்வரன் என் முன்னால் தோன்றட்டும். நம் குல தெய்வமான மார்க்கஸஹாயேச்வரரே நமது தாபத்தைப் பரிகரிக்கின்றவர். எவ்விடத்திலும் சம்புவின் பெயர் ஒன்றே எனக்குத்துணை” என்று இவ்வாறெல்லாம் தியானித்துக் கொண்டு, மார்க்கஸஹாயேச்வரர் தமக்குப் பாதுகாவாலாகத் துணைவருகின்றார் என்ற உறுதியுடன் சிஷ்யர்களோ வாஹனமோ ஒன்றுமில்லாமல் அரசன் அரண்மனையை நோக்கி பரமசிவ பக்தமணியாகிற ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்கள் நடந்து சென்றார். வழியிலே உருவின கத்திகளுடன் நின்று கொண்டிருந்த வீரர்களைப் பார்த்துக் கொண்டே சென்றார். அங்ஙனம் தனியாக வரும் பொழுது தீக்ஷிதேந்திரர் அறியாது அவரைச் சுற்றி மஹா வீரர்கள் வருவதைக்கண்ட அரசனின் சேனா வீரர்களும் சேனாபதியும் நடுங்கினவண்ணம் தூண் போல் நின்று செயலற்றவர்களாய் நின்று விட்டார்கள். தீக்ஷிதேந்திரர்கள் அரசனது அந்தப்புரத்தை வந்தடைந்தார்கள். தீக்ஷிதருடைய வருகையை அந்த அரசன் எதிர்பார்க்கவேயில்லை. எனவே, தீக்ஷிதர் தனியாக வந்துள்ளதை அறிந்து, அவரது கால்களில் விழுந்து வணங்கி, “இது என்னே பாவம்! யான் என்ன குற்றம் புரிந்தேன். இந்த நேரத்தில் தாங்கள் இங்கு எழுந்தருளக் காரணம் யாதோ” என வேண்டி நின்றான். இவ்விதம் அரசன் கேட்டதும் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் நடந்தது அனைத்தும் தாதாசாரியாரின் சூழ்ச்சியாலேயே என்று உணர்ந்து கொண்டார். அரசனை நோக்கி, அரசே தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதவர். நடந்ததனைத்தும் ஒரு துஷ்டனால் செய்யப்பட்ட காரியம், காலகாலனான பரமேச்வரன் உமக்கு ஒரு குறையும் இன்றிக் காப்பாற்றுவார். எல்லா விஷயமும் நாளை காலை உமக்குத் தெளிவாகத் தெரியும் என்று கூறி, அவனை ஆசீர்வதித்து விட்டு தமது இல்லம் வந்து சேர்ந்தார்.
    மறுநாள் காலையில் அரசன் கோட்டை வாசலில் வந்து உருவின கத்திகளுடன் அசையாது நிறுகும் தனது சைனியத்தையும், சேனாபதியையும் பார்த்து இது என்ன விபரீதம்? என்று நினைத்தவனாய், பயத்துடன் மெள்ள மெள்ள காலால் நடந்துகொண்டே தீக்ஷிதரின் இல்லத்தை வந்தடைந்தான். கருணாமூர்த்தியான தீக்ஷிதர் அரசனை வரவேற்று அவனின் மனோநிலையைப் புரிந்துகொண்டு, அரசனுடன் அந்தப்புரம் வந்து சேர்ந்தார். அங்கு சேனையையும், சேனாபதியையும் பார்த்து சிவபெருமானைத் தியானித்துக் கொண்டே கருணை கடாக்ஷத்தைச் செலுத்தினார். அதுவரை அசைவற்று தூண்போல நின்ற சேனாபதியும், மற்றைய வீரர்களும் தீக்ஷிதரை நோக்கி, “கருணைக்கடலான ஐயனே! பரமாத்மாவே! அரசன் ஆணை என்று கபடமாகக்கூறி எங்களை இந்த பெரும் அபராதத்துக்கு தாதாசாரியார் ஆளாக்கிவிட்டார். நாங்கள் நிரபராதிகள்” என்று கூறி தாதாசாரியாரின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினான். அரசன் கடுங்கோபம் கொண்டு தாதாசாரியரைத் தண்டிக்க முற்பட்டான். தீக்ஷிதேந்திரர் அவனைத் தடுத்து, விஷவ்ருக்ஷமானாலும் நாம் வளர்த்தால் அதைவெட்டுவது முறையல்ல என்று நீதிசாஸ்திரம் கூறுகிறது. சிசுபாலனிடம் கிருஷ்ணன் நூறு குற்றங்கள் பொறுத்தது போல நாமும் இவரிடம் பொறுப்போம். காலம்வரும் வரை பொறுப்பதே முறை என்று அரசனைச் சமாதானப்படுத்தினார். மஹானுடைய அறிவுரையை சிரமேற்கொண்டு அரசன் மிக்க சந்தோஷத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் ஏற்றி அவரைப் பட்டணப்பிரவேசம் செய்வித்து பெருமளவில் கெளரவித்தான். அன்று முதல் அரச காரியங்களை அரசன் தானே நேரில் கவனிக்க ஆரம்பித்தான்.
    இப்படி அப்பைய தீட்சிதரின் வாழ்வில் நடைபெற்ற பல சம்பவங்கள் அவரது பெருமைக்கும் புகழுக்கும் எடுத்துக்கட்டுக்ககளாக திகழ்ந்தன.
    இறுதியில் ஸ்ரீநடராஜப் பெருமானின் குஞ்சிதசரணார விந்தத்தையடைந்த ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதேந்திரரின் பெருமை ஏட்டில் அடங்காதது. இந்த மஹான் பிறக்கவில்லையானால் சிவத்தின் பெருமையை உள்ளவாறு அறியாது இந்த உலகம் துன்பப்பட்டிருக்கும். சிவகிருபையால் தான் வாழ முடியும். சிவப்பிரஸாதம் மனிதனாய்ப் பிறந்தான். சிவபக்தி என்ற தனது கடமையைச் செய்யாவிடில் பெரும் நஷ்டத்திற்கு ஆளாவான். ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தமது கடைசிக்காலத்தில் பந்து மித்திரர்களுக்கு உபதேசித்ததாகக் கூறப்படுவது யாதெனில் “இக்காலத்தில் யாகாதிகள் செய்து பரமசிவனைத் திருப்தி செய்வது இயலாத காரியம். அதற்கு வேண்டிய திரவியமும் வசதிகளும் கிடைப்பதரிது. அதற்காக நாம் சும்மா இருந்து விடவும் கூடாது. மிகச் சுலபமான காரியங்களாலேயே சிவபெருமானின் கிருபையைப் பெற்று விடலாம். மனம், வாக்கும் காயம் என்ற மூன்றையும் சுத்தமாக வைத்துக் கொண்டு மனதினால் தியானித்தும், வாக்கினால் ஸ்தோத்ரங்கள் செய்தும், சரீரத்தினால் வந்தனம், அர்ச்சனம், ஆலயதரிசனம் முதலியன செய்து கொண்டும் வருவோமேயானால் நமக்கு நல்லகதி கிடைப்பது நிச்சயம். எனவே அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த இந்த மனிதப் பிறவியை வீணாக்காது ஈச்வரனைப் பூஜித்து இறைவன் அருளைப் பெறவேண்டும்!” என்பதே.
    இத்தகைய அரிய உபதேசங்களை மனதில் கொண்டு சிவபக்தி செய்து வாழ்வோம். தீக்ஷிதேந்திரர் சரிதம் இம்மட்டோ என்று எண்ணலாகாது. சிவநேசச் செல்வர்களுக்கு ஓரளவு விருந்தாக இது தரப்பட்டது என்று எண்ணி இச்சரிதத்தைப் படித்து, சிவபக்தியைப் பெற்று எல்லோரும் இன்புற்றிருக்க சிவபெருமான் அருள் பாலிக்கட்டும்.
    அப்பைய தீட்சிதரிடம் இருந்த மற்றொரு அருங்குணம் யாதெனில், சிவனை கண்கண்ட கடவுளாக பாடியவர் என்றாலும், விஷ்ணுவையும் துவேஷம் காட்டாது தொழுது வந்துள்ளார். இத்துணைக்கும் தாத்தாச்சாரியர் உள்ளிட்ட இவரின் சமகால வைஷணவர்கள் இவருக்கு பலவிதங்களில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஆனாலும் இவர் நாராயணனை நிந்தித்ததில்லை. திருமலை, திருவரங்கம், காஞ்சி உள்ளிட்ட பல ஷேத்ரங்களில் எழுந்தருளியிருக்கும் திருமாலை தரிசித்து பக்தி செய்திருக்கிறார். திருவரங்கம் வந்தபோது இவரின் பக்தியை மெச்சிய அரங்கன் சிவபெருமானாக இவருக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
    அந்த மகானின் மலரடியை பணிவோம். வாழ அவர் புகழ். ஓங்குக சைவ நெறி.
    - See more at: http://rightmantra.com/?p=14488#sthash.b5JMsIHc.dpuf
Working...
X