Announcement

Collapse
No announcement yet.

ஒரு உருண்டை சோற்றுக்கு ஒரு பிறவி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒரு உருண்டை சோற்றுக்கு ஒரு பிறவி

    ஒரு ஊரில் சதாசிவம் என்கிற ஒரு மாணவர் பாடசாலை ஒன்றில் வேத சாஸ்திரம் பயின்று வந்தார். ஒரு நாள் அவர் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களை உபசரிப்பதில் அவர் தாய் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அவருக்கு அன்று உணவு கிடைக்க தாமதமானது. அவருக்கோ அகோரப் பசி.
    பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா? பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர் பசி பொறுக்க முடியாமல் யாரிடமும் சொல்லாமல் வீட்டின் பின்பக்கமாக நழுவியவர் அப்படியே சந்நியாசியாகப் போய்விட்டார்.
    ஞானம் அவருக்கு ஒரு கணத்தில் வந்தது. பின்னாளில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்த அவர் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார். தன்னுடைய சந்தேகங்களையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்வார். நம்மைப் போலதானே எல்லாருக்கும் சந்தேகமிருக்கும் என்றெண்ணிய அவர், எல்லாரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு சொல்லித் தருவார்.




    அவரது அக்கறையைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் அனைவரும் குருநாதரிடம் போய், “குருநாதா, இந்த சதாசிவம் எந்நேரமும் பேசிக்கொண்டேயிருக்கிறார். சற்றுநேரமும் வாய் ஓய்வதில்லை. அவரை நீங்கள்தான் கொஞ்சம் கண்டிக்கவேண்டும்” என்றார்கள்.
    குருநாதருக்கு வருத்தம். ரொம்பவும் நல்ல பையன் சதாசிவம். அவனைப் பற்றி குறைகூறுகிறார்களே என்று சற்று கோபமும் வந்தது. சதாசிவத்தைக் கூப்பிட்டார். “ஏண்டா சதாசிவம்… தொணதொணன்னு பேசிக்கிட்டிருக்கியாமே, உன் வாய் மூடாதா?” என்றார்.
    அன்றைக்கு வாயை மூடியவர்தான்; இறுதிவரை அவர் வாயே திறக்கவில்லை. மௌனியாகிவிட்டார்.
    குருநாதரின் உத்தரவையேற்று சதாசிவம் வாழ்நாள் முடியும்வரை பேசவேயில்லை. குருநாதரே அவரிடம், “உன் பெருமை தெரியாமல் பேசிவிட்டேன். வாய் திறந்து பேசு” எனக் கூறினார். ஆனால் அவர் தன் முடிவிலிருந்து மாறவேயில்லை.
    சதாசிவம் சுவாமிகள் நாளாக ஆக ஒவ்வொன்றாகத் துறந்துவந்தார். பேச்சைத் துறந்தார். பின் ஒருநாள் உடையைத் துறந்து திகம்பரராகிவிட்டார். கடைசியில் உணவையும் துறந்தார். நாளைக்கு ஒருவேளைதான் உணவு. யார் வீட்டு வாசலிலாவது போய் நிற்பார். அவர் நிற்பதைப் பார்த்து யாராவது உணவிட்டால் மட்டும் சாப்பிடுவார்.
    அதுவும் மூன்று கவளம் உணவு மட்டுமே.
    அத்தகைய சதாசிவம் சுவாமிகளுக்கு ஒரு சந்தேகம். நமக்கு அடுத்த பிறவி உண்டா, இல்லையா- இதுதான் அவரது சந்தேகம். யாரிடமும் கேட்கவும் முடியாது. அவரைவிட பெரிய ஞானிகளும் அங்கில்லை. தன் கேள்விக்கு விடைதெரியாமல் கடவுளிடம் முறையிட்டார்.
    ஒருநாள் அவர் ஒரு வீதிவழியாக வந்தார். அந்த வீதியில் அவர் பெயருள்ள குடும்பஸ்தர்- அதாவது சதாசிவம் என்பவர் இருந்தார். அவர் திண்ணையில் அமர்ந்திருந்தார். சதாசிவத்தை தூரத்திலேயே பார்த்த அவர் தன் மனைவிக்கு குரல் கொடுத்தார் “”அம்மா, சதாசிவம் தெருமுனை திரும்பிட்டது. ஆகாரம் கொண்டா”.
    அவரது மனைவியும் வெள்ளிக் கும்பாவில் பச்சரிசி சோறிட்டு, பருப்பு ஊற்றி, நெய்யிட்டுப் பிசைந்து உருட்டிக்கொண்டு வாசல் வந்தாள். அன்றைக்கு சதாசிவம் அவள் வீட்டு வாசலிலேயே வந்துநின்றார். அவள் அவரை வணங்கி, உணவுருண்டையை அவர் கையில் எடுத்துவைத்தாள். ஒன்று, இரண்டு, மூன்று….
    வழக்கம்போல மூன்றாவது கவளத்துடன் கையைத் துடைக்கப்போனார். சாப்பிட்டபின் கையை அவர் தன்மேலேயே துடைத்துக்கொள்வதுதான் வழக்கம். அந்தப் பெண்மணி, “நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடுறீங்க. அதுவும் என்னைக்கு, எங்க சாப்பிடுறீங்களோ தெரியாது. இன்னைக்கு எனக்காக இன்னுமொரு உருண்டை சாப்பிடுங்க” என்றபடி இன்னொரு கவளம் சோற்றை வைத்தாள். அவரும் அதை வாங்கி சாப்பிட்டார்.
    அப்போது திண்ணையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியின் கணவன், “டேய் சதாசிவம், உனக்கு அடுத்த ஜென்மம் இருக்கு, போடா” என்று சொன்னார்.
    சந்நியாசி சதாசிவம் அவரைப் பார்த்தார். “என்னடா பார்க்கிற? ஏன் இன்னொரு ஜென்மானுதானே? உன் கணக்கு மூணுதானே. முடிஞ்சதும் கிளம்பிப் போகவேண்டியதுதானே. அவளுக்காக ஒரு உருண்டைச் சோறு ஏன் வாங்கிச் சாப்பிட்ட? இந்த ஒரு உருண்டைக்கு அவளுக்கு நீ கணக்கு சொல்லணும். அதனால உனக்கு இன்னொரு ஜென்மா இருக்குடா” என்றார்.
    அனைத்தையும் துறந்த ஒரு திகம்பர சந்நியாசி பிச்சையில் கூடுதலாக பெற்ற ஒரு உருண்டைச் சோற்றுக்கே ஒரு ஜென்மம் என்றால் நமக்கெல்லாம் எத்தனை ஜென்மம்?
    - திருமதி.தேசமங்கையர்க்கரசி ஒரு சொற்பொழிவில் கூறியது.
    - See more at: http://rightmantra.com/?p=14533#sthash.s9l1Tz8R.dpuf
Working...
X