Announcement

Collapse
No announcement yet.

அனைத்திலும் பிரம்மத்தை கண்ட சுகப்பிரம்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அனைத்திலும் பிரம்மத்தை கண்ட சுகப்பிரம்&#

    )
    குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் கொண்டிருந்தார். அப்போது, கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர், தான் ஒரு தபஸ்வி என்பதையும் மறந்து அவளது அழகில் மனதைப் பறி கொடுத்தார்.
    கிருதாசீயும் அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டாள். தவசிரேஷ்டரின் மனதில் சபலம் ஏற்பட்டால், சாபத்திற்கு நாம் ஆளாவோமே என்ற பயத்தில் தப்பியோட முயன்றாள். நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தைப் பெறும் கிருதாசி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். கிளிகள் கூட்டமாக ஓரிடத்தில் பறந்து சென்றுகொண்டிருந்தன. உடனே தானும் ஒரு பச்சைக் கிளியாக மாறினாள். கிளிக்கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள். அவள் கிளியாக மாறிய பின்னும்கூட, வியாசரால் அவளை மறக்க முடியவில்லை. அவரது அந்த நினைவே, அந்தக் கிளியை கர்ப்பமாக்கியது. மீண்டும் சுயவடிவமெடுத்த கிருதாசீ தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தாள். அவளுக்கு கிளி முகத்துடன் ஒரு பிள்ளை பிறந்தான். அப்பிள்ளை தான் சுகபிரம்மர்.
    சுகப்பிரம்மரின் பிறப்பு பற்றி இன்னொரு சம்பவமும் சொல்லப்படுகிறது. ஒரு முறை ஜனன-மரண ரகசியங்களை உமையன்னைக்கு ஈசன் சொல்லிக் கொண்டிருந்த போது உமை கண்கள் அசர, அருகே மரத்தில் அமர்ந்திருந்த கிளிக்குஞ்சு ஈசனின் உபதேசத்தை ம் கொட்டிக் கேட்டது. ம் கொட்டியது கிளி என்பதை அறிந்த ஈசன், அதைப் பிடிக்க முற்பட, அது வியாசரின் மனைவியின் கர்ப்பத்தில் அடைக்கலமானது. ஈசன் கிளியே வெளியே வா என அழைக்க கிளி முகத்தோடு சுகர் தோன்றினார். சிவ ரகசியத்தை எவரிடமும் கூறாமல் பிரம்மமாக இரு. உன் ஜன்ம தினத்தன்று என்னையும் உன்னையும் வணங்குபவர்கள் வாழ்வு சிறக்கும் என ஆசி வழங்கினார் ஈசன். சுகப்பிரம்மரை வணங்கி வாழ்வில் வளங்கள் யாவும் பெறுவோம்.


    (*ரிஷிகள் தரிசனம் தொடரைப் பொருத்தவரை, நமது தளத்திற்க்கென்றே நமது ஓவியரை கொண்டு பிரத்யேகமாக ஓவியம் வரையப்படுவது நீங்கள் அறிந்ததே!)
    சுகம் என்றால் கிளி. தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர். குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவேண்டுமா? வியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. எதையும் குருமுகமாக அறிய வேண்டும் என்ற நியதிப்படி வேதவியாசருடைய தவப்புதல்வர், பிரகஸ்பதியின் சீடனானார்.ஞானக்குழந்தையாக அனைத்தையும் அறிந்த தெளிவுடன் தேஜஸுடன் வளர்ந்து வந்த சுகருக்கு உரிய வயது வந்ததும் பரமேஸ்வரர் உமையுடன் வந்து உபநயனம் செய்வித்தனர். பால பிரம்மச்சாரிக்கு வேண்டிய தண்டமும் மான் தோலும் வான் வெளியிலிருந்து அவரருகே வந்து விழுந்தன. சுகஹா என்னும் வடமொழி சொல்லுக்கு கிளி என்று பொருள். எவரும் கற்றுத்தரவில்லை என்றாலும் இயல்பாகவே வேத வேதாங்கங்களைச் சுகப்பிரம்மரிஷி அறிந்திருந்தார்.
    சுகபிரம்மத்தின் பெருமையை நமக்கு தெரியச் செய்த பெருமை பரீட்சித்து மகாராஜாவையே சாரும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் பேரன் இவர். பரீட்சித்துவின் தந்தை அபிமன்யு. இந்த மன்னன் பிறவியிலேயே விஷ்ணுவின் அருள்பெற்றவன். பாண்டவர்களின் வம்சத்தை அழிக்கும் எண்ணத்தில் இருந்த கவுரவர்கள், அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது, விஷ்ணு தன் சக்கரத்தால் அதை தடுத்து நிறுத்தினார்.
    பிறக்கும் முன்பே விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட பரீட்சித்து, ஒரு சமயம் காட்டில் வேட்டைக்குச் சென்ற இடத்தில் தாகம் உண்டானது. தண்ணீர் தேடிச் சென்ற போது, வழியில் சமீகர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். வாசலில் நின்று தண்ணீர் கேட்டார். ஆனால், காதில் வாங்கிக் கொள்ளாமல் நிஷ்டையில் இருந்தார் சமீகர்.கோபம் கொண்ட மன்னன் பரீட்சித்து, காட்டில் கிடந்த செத்த பாம்பினை குச்சியால் எடுத்து மாலைபோல் அவருடைய கழுத்தில் போட்டார். பரீட்சித்தின் பாதகச் செயலை, அங்கு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சமீகரின் பிள்ளை சிருங்கி பார்த்து விட்டான். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஏ! மன்னனே! நிஷ்டையில் இருந்த என் தந்தையை அவமதித்த நீ இன்னும் ஏழுநாளில் பாம்பால் அழிவாய், என்று சபித்துவிட்டான்.
    உடனடியாக பரீட்சித்து தன் மகன் ஜன்மேஜயனுக்குப் பட்டம் கட்டி நாட்டுக்கு மன்னனாக்கினான். கங்கைக்கரையில் தவம் செய்து தன் உயிரைவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். விருப்பப்படியே கங்கையின் மத்தியில் அழகிய மண்டபத்தை அமைத்து அதில் தங்கினான். தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினான். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவபூஜை செய்தபடியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 16. சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.
    உயிர்பிரிய ஒரு வாரமே இருக்கும் சந்தர்ப்பத்தில், சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினான். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது, கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகபிரம்மர், அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார். அதுவே பாகவதம் என்னும் நூல் ஆயிற்று. எனவே பாகவதம் தந்தவர் சுகப்பிரம்ம மகரிஷியே!
    சுகப்பிரம்மரின் பெருமையை உணர்த்தும் வகையில் பல சுவையான சம்பவங்கள் கூறப்படுகிறது. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.
    வேகமாக ஒலித்த அன்னதான மணி !
    பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜசூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒருலட்சம் பேர் சாப்பிட்டால் அதை தெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும். அதைக் கொண்டு ஒருநாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள். திடீரென்று ஒருநாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒருலட்சம் தானே கணக்கு!இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு, குறித்துக் கொள்ள முடியாதபடி தொடர்ந்து மணி அடித்துக் கொண்டிருந்தது. என்ன அதிசயம்! வேகம் தாளாமல் மணி அறுந்து விழுந்துவிட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை. அனைவரும் திகைத்து நின்ற வேளையில், எச்சில் இலைகளைப் போட்ட இடத்தில் பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் ஒரு சில பருக்கைகளைக் கொத்திவிட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டாலும், அவரது பெயரால் அன்னதானம் நடத்தினாலும் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும்.
    நீராடும் பெண்கள் சுகப்பிரம்மரை கண்டதும் செய்தது என்ன?
    மகாபாரதத்தை உலகிற்கு அளித்த வியாசரின் புதல்வர் சுகமுனிவர். கிளி முகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார். தவவாழ்வில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்ந்தார். ஒரு நதிக்கரை வழியே தந்தையுடன் சுகப்பிரம்மர் சென்றபோது, நீராடும் தெய்வப்பெண்களைக் கண்டார். அவர்கள், வயோதிகரான வியாசரைக் கண்டதும் நாணத்தால் எழுந்து ஆடையால் உடலை மறைத்தனர். ஆனால், வாலிபரான சுகரைக் கண்டு வெட்கப்படவில்லை. உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்? என வியாசர் கேட்க, எல்லாவற்றையும் சுகப்பிரம்மர் தெய்வீகமாக காண்பது தான், என விடையளித்தனர். இவர் இயற்றிய பாகவதத்தை சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மழை என்று பாராட்டுவர்.
    சுகப்பிரம்மரை கூப்பிட்டால் மரம் செடி கொடிகள் கூட பதிலளிக்கும் அதிசயம்!
    மகாபாரதம் தந்த வியாசரின் புத்திரர் சுகபிரம்மர் பிறந்ததில் இருந்து தந்தையை விட்டுப் பிரிந்ததில்லை. ஒருநாள், திடீரென காட்டுக்குள் ஓட ஆரம்பித்தார். பின்னால் ஓடிய வியாசர் “மகனே! மகனே’ என கூவி அழைத்தார். உடனே அங்கிருந்த மரங்களெல்லாம் “என்ன என்ன’ என்று கேட்டதாம். அதாவது சுகபிரம்மர் வேறு, தாங்கள் வேறு அல்ல என்று காட்டிக் கொண்டன. மரங்கள் மட்டுமல்ல, அங்கிருந்த பறவைகள், விலங்குகள், மலைகள், நதிகளும் “என்ன என்ன’ என்றதாம். சுகப்பிரம்மரும் தாங்களும் ஒன்றே என்ற மனநிலையை கொண் டிருந்தன.
    அதனால், அவரது பிரதிநிதியாக அவை பதிலளித்தன. இந்த உலகிலுள்ள “எல்லாமே அவர்’ என்ற வகையில் அவர் மேம்பட்ட நிலையில் இருந்தார். “சர்வபூத ஹ்ருதயர்’ என்று அவரை அழைத்தனர்.
    இறவா வரம் பெற்ற சிரஞ்சீவி மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது பிரதான சீடர் ஆதி சங்கரர். இதிலிருந்து சுகப்பிரம்மரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
    சுகப்பிரம்ம காயத்ரி :
    ஓம் வேதாத்மஹாய வித்மஹே
    வியாச புத்ராய தீமஹி;
    தந்நோ சுகர் ப்ரசோதயாத்!
    கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பில்லாலி தொட்டியில் சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடம் உள்ளது. இங்கு சுகப்பிரம்மருக்கு தனி சன்னதி உண்டு.
    வியாசர் மகாபாரதத்தை சுகருக்கு உபதேசித்த பிறகே தம் சிஷ்யர்களான வைசம்பாயனர் போன்றோருக்கு உபதேசித்தார். பஞ்சபூதங்களைப் போன்ற மன உறுதி படைத்த சுகரின் புகழ் என்றும் நிலைத்ததாகும்.
    ==============================================================
    ஸ்பெஷல் தகவல் :


    சென்னையில் சுகப்ரம்ம மகரிஷி ஆஸ்ரமம்!
    சுகப்பிரம்ம மகரிஷியை போற்றி, அவரை ஆராதிப்பதற்கென்றே சென்னை தி.நகரில் சுகப்ரம்ம மகரிஷி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. குமார குருஜி என்பவர் இதை நிர்வகித்து வருகிறார். சுகப்ரம்ம – மார்கண்டேய ஜீவ நாடி ஜோதிடம் இங்கு மிகவும் பிரபலம். மற்ற நாடி ஜோதிடம் போலல்லாமல் இவர்கள் பார்க்கும் முறையே வேறு. ஆனால் தற்போது நாடி ஜோதிடம் பார்ப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.
    இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சுகப்ரம்ம மகரிஷியின் ஜெயந்தி வரும் தினத்தன்று (ஆனி மாதம் – திருவோணம் நட்சத்திரம்) மூன்று நாட்கள் இங்கு கொண்டாட்டம் களைகட்டும். வேத விற்பன்னர்கள் அது சமயம் கௌரவிக்கப்படுவார்கள். ஹோமங்கள் யாகங்கள் நடைபெறும். அன்னதானமும் உண்டு.
    இன்றும் ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திரத்தன்று சுகப்பிரம்மருக்கு பூஜையும் ஆராதனையும் இங்கு நடைபெறுகிறது. ஆன்மீக சொற்பொழிவும் நடைபெறும். முன்னதாக விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடைபெறும். பூஜையில் கலந்துகொள்பவர்களுக்கு மந்திரோபதசனை செய்யப்பட்டு இறுதியில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சில சமயம், சர்ப்ரைஸாக கேள்விகள் கேட்கச் சொல்லி, அவற்றுக்கு பதில் அளிக்கப்படுகிறது.
    இது தவிர தினமும் மாலை சுகப்பிரம்மருக்கு பூஜை உண்டு. (ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் காலை 11.00 மணிக்கு). கலந்துகொண்டு சுகப்பிரம்மரின் அருளை பெறுங்கள்.
    ஒரு முறை இந்த ஆஸ்ரமத்துக்கு சென்று VISITORS BOOK ல் உங்கள் பெயரையும் அலைபேசி எண்ணையும் பதிந்துவிட்டு வந்தால், ஆஸ்ரமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் உங்களுக்கு அனுப்புவார்கள்.
    முகவரி :
    சுகப்பிரம்ம மகரிஷி ஆஷ்ரமம்,
    8/22, அருளாம்பாள் தெரு, (கர்நாடக சங்க பள்ளி அருகே),
    தி.நகர், சென்னை – 600017.
    * தொலைபேசி : 044-28342483.
    (* சிரத்தையும் பக்தியும் இருந்து, நிச்சயம் அங்கு போகவேண்டும் என்று கருதுபவர்கள் மட்டும் மேற்படி தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை கேட்டு பெறவும். ஆர்வக்கோளாறு காரணமாக சும்மா அழைக்கவேண்டாம்!)
    ரிஷிகள் தரிசனம் தொடரும்….
    - See more at: http://rightmantra.com/?p=12200#sthash.liLQz4ed.dpuf
Working...
X