Announcement

Collapse
No announcement yet.

Thirumazhisai azhwar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirumazhisai azhwar

    Courtesy: sri.GS.Dattatreyan


    தெய்வீகக் குழந்தையாகப் பிறந்த அவர் ஒரு சித்தர். பாரதம் முழுதும் சென்று, அட்டமா சித்திகளைப் பெற்றவர். அற்புதங்கள் பல நிகழ்த்திய மகான். இவை எவற்றாலும் மனம் திருப்தியடையவில்லை அவருக்கு. இமயத்திலிருந்து தென்னகம் நோக்கி வந்தவர், பார்த்தசாரதி எழுந்தருளியிருக்கும் திருவல்லிக்கேணிக்கு வந்து சேர்ந்தார். இறைவனின் தரிசனத்துக்குச் சென்றார். கோயிலின் வடபுறத்தில் ஓர் அழகிய நந்தவனம். அங்கு பழுத்த வைணவப் பெரியவர் ஒருவர், பாத்திகளில் செடிகளை வேர்ப்பக்கம் மேலே இருக்கும்படி தலைகீழாக நட்டு, அநேக ஓட்டைகள் உள்ள ஒரு மண்குடத்தில் நீரேந்தி அச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். செடிகளின் மேல் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட விழவில்லை. பாத்தியில்கூட படவில்லை! இருப்பினும் ஒரு தோட்டக்காரனைப் போல உண்மையாகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். கோயிலை வலம் வந்து கொண்டிருந்த சித்தர், பெரியவரின் வினோதச் செயலைப் பார்த்தார். தனக்குள்ளேயே பைத்தியம் என்று சொல்லிக் கொண்டார். அவரிடம் சென்று, பெரியவரே, உமது முயற்சி அனைத்தும் வீண் என்பதையும், பலர் காண பித்தம் பிடித்தச் செயலைச் செய்து கொண்டிருக்கிறோமே என்பதையும் நீர் உணரவில்லையா? என்றார்.
    அந்தச் சித்தரைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அந்தப் பெரியவர், அறிவுச்சுடர் வீசும் கண்களால் அவரை உற்று நோக்கினார். பிறகு, நேரான ராஜபாட்டை இருக்கும்போது கல்லிலும், முள்ளிலும் நடந்து வழி தெரியாமல், உம்மையே ஏமாற்றிக்கொண்டு, எதிர்ப்பட்டவர்களில் சித்து வேலையைக் காண்பித்துப் பொழுதைக் கழிக்கும் உமது செயலை விடவா எமது செயல் பித்தம் பிடித்தது? என்று அமைதியாகக் கேட்டார். இந்த எதிர்க்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத சித்தர், திகைத்து நின்று விட்டார். பல இடங்களில் அலைந்ததும், அஷ்டமா சித்திகளை அடைந்ததும், பொத்தல் குடத்தில் தண்ணீர் பாய்ச்சியது போலத்தான் வீணாகிவிட்டது என்பதை வெகு நாசூக்காகக் குத்திக் காண்பித்து விட்டாரே இவர் என்று உள்ளுணர்வு கூற, தமது தவறை நினைந்து வருந்தினார். இவரே தமக்கு வழி காட்டக்கூடிய ஆசான் என்று உணர்ந்தார். பெரியவர் காலில் வீழ்ந்து தம்மைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி நின்றார். பாகவத தர்மத்துக்கு, வெகு சிறப்பாகத் தொண்டாற்றக்கூடிய ஒரு யோகியைத் திருத்தி விட்டோம். என்ற மகிழ்ச்சியில் பெரியவர் சித்தரை தமது சீடராக ஏற்றுக் கொண்டார். திருமால் திருவடிச் செல்வர்களுள் ஒருவரான பேயாழ்வார்தான் அந்தப் பெரியவர். அவர் சீடனாக ஏற்றுக்கொண்ட சித்தர்தான் மழிசையார் என்ற திருமழிசையாழ்வார்.
Working...
X