Courtesy: Tamil Saivites


சைவமா? வைணவமா?
ஒரு சிறப்புப் பார்வை
------------------------------------
அன்றைக்கு சிவராத்திரி. எங்களூர்க் கோயிலுக்கு அருகில், புகழ்பெற்ற கண்ணன் வழிபாட்டு அமைப்பொன்று கீதை முதலான நூல்களுடன் கடை விரித்திருந்தது. சிவராத்திரியாச்சே... சிவபுராணமோ திருவாசகமோ ஏதாவது சிவனை வழிபடும் தோத்திர நூல் கிடைத்தால் வாங்கிப் போய் கோயிலில் படிக்கலாமே என்று அந்தப் பக்கம் போய் எட்டிப் பார்த்த நண்பருக்கு அதிர்ச்சி! முழுக்க முழுக்க கண்ணன் புகழ் பாடும் நூல்களும், குறித்த அமைப்பினரின் மொழிமாற்றப் புத்தகங்களும் மட்டுமே அங்கு அடுக்கப்பட்டிருந்தது.
"புத்தகம் வேணாம்... அட்லீஸ்ட் சிவபெருமானோட ஒரு பாக்கெட் சைஸ் படம் கிடைக்குமா?" நண்பர் ஏமாற்றத்துடன் கேட்டார்.
மிடுக்காக வந்தது பதில்
"நாங்க சிவனக் கும்பிடறது இல்ல!"
வந்ததே கோபம் நண்பருக்கு!
"சிவன் வேணாம், சிவனோட படம் வேணாம், ஆனா நீங்க வியாபாரம் பண்ண சிவராத்திரி வேணும், இல்ல? மரியாதையா இடத்தக் காலி பண்ணுங்க" அவர் சத்தம் போட,
"நீங்க ஒண்ணும் ஆர்டர் போட முடியாது, நாங்க கோயில்ல பர்மிஷன் வாங்கியிருக்கோம்" அவர்களும் முரண்டுபிடிக்க, நண்பர் கோபத்துடன் ஆலயத்துக்குப் போய் தர்மகர்த்தாவை அழைத்து வந்து அவர்களை பெட்டியைக் கட்டச் சொல்ல... ஒரே அல்லோல கல்லோலம்.
அப்போது பக்கத்தில் வேறு இருவர்!
"என்ன தாண்டா நடக்குது இங்க?"
"பாத்தா தெரியல? கமலோட 'தசாவதாரம்' படம் ஓடுது!"
------------------------------
(இனி வருவது, தம் மதமே பெரிது என்றெண்ணி வாதிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு மட்டும்! )
அண்ணன் - தம்பியரைக் கவனித்திருக்கிறீர்களா? பாசம், பரிவு என்று என்ன தான் சொல்லுங்கள். மூன்றாமவனுக்கு விட்டுக் கொடுத்தாலும், தங்களுக்குள் அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சைவமும் வைணவமும் கூட அப்படித் தான்! கிறிஸ்தவம், இஸ்லாமை கவனிக்காமல் அலட்சியமாகச் செல்லும் எத்தனையோ சைவ - வைணவர்கள், தமக்குள் ஒரு போட்டியைக் கண்டால், ஓடிப் போய் "நாவலோ நாவல்!" என்பார்கள்! அப்படி ஒரு சகோதர பாசம்!
இறைவன் உருவமற்றவன், பெயரற்றவன் என்பது உண்மை. "இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாது" என்பார் அப்பர் (6:97:10) "காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்" என்பார் நம்மாழ்வார். (பாசுரம்.2954) ஆனால், அவன் உருவும் பெயரும் கொள்ளும் போது அவனை எப்படி அழைப்பது, என்னென்று காண்பது என்பதே இருவரிடமும் சிக்கல்.
புலித்தோல் உடுப்பதா? பட்டாடை உடுப்பதா?
கொன்றை சூட்டுவதா? துழாய் சாற்றுவதா?
சிவப்பாய்ச் சொல்லுவதா? கருப்பாய்க் கொள்ளுவதா?
மலைமகள் மணாளனா? மலர்மகள் மகிழ்நனா?
சங்கரன் என்பதா? சாரங்கன் என்பதா?
விஷ்ணு என்பது, காலத்துக்குக் காலம் மாறுபடும் திருமால் பதவியைப் பெற்ற உயர் ஆன்மா ஒன்றே! மற்றும் படி, ஐந்தொழில்களில் ஒன்றாக காத்தலைச் செய்யும் போது ஈசனே மகாவிஷ்ணு வடிவமேற்கிறார் என்பது சைவரின் கொள்கை. அதாவது, வைணவர் வணங்குவது விஷ்ணு பதவியைப் பெற்ற ஆன்மாவை, சிவசொரூபமான மகாவிஷ்ணுவை அல்ல என்பர் சைவர்!
சிவன் என்பது, திருமாலின் ஆணைக்குக் கீழ் அழித்தற் தொழிலைச் செய்யும் ருத்ர தேவதை. பிரளய காலத்தில் அவரையும் அழிக்கும் மகாருத்ரன், பரந்தாமனே என்பது வைணவர் கொள்கை. அதாவது சைவர் வணங்குவது ருத்ரன் எனும் தேவதையை, பரந்தாமன் கொள்ளும் மகாருத்ர வடிவத்தை அல்ல என்பது வைணவரின் சாராம்சம்!
ரெண்டு பேருமே என்ன சொல்றாங்கன்னா "பெயர் ஒண்ணு தான், ஆனா, அவரு இவர் இல்ல!"
தெளிவாக் குழப்புறேனா?
ஆனால், நாயன்மாரும் ஆழ்வார்களும் குழம்பினார்களா என்றால் இல்லை. அடிமுடி தேடிய கதையைக் கூறிக் கொண்டே "அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,அரனாய் அழிப்பவனும் தானே!" என்று நெகிழ்வார் சேரமான் பெருமாள்(11:08:05).
சிவன் திருமாலைப் போற்றுவதைக் கூறிக் கொண்டே, ""பொன் திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும் இருவர் அங்கத்தால் திரிவரேனும் ஒருவன்"(பாசுரம்.2178) என்று இருவரையும் ஒருவராகவே காண்பார் பொய்கையாழ்வார்.
சைவர்களின் கவனத்துக்கு:
திருமால், சுதர்சன சக்கரத்தைப் பெறுவதற்காக, தன் கண்ணையே மலராக ஈசனுக்கு அருச்சித்தார் அல்லவா?
சிவனடியாரில் தலையாயவர் திருமால்; அடியாரை அவமதிப்பது ஆண்டவனையே அவமதிப்பது அல்லவா? இனியும் திருமாலைத் திட்டுவீர்களா?
வைணவர் கவனத்துக்கு:
பஸ்மாசுரனிடமிருந்து காக்குமாறு, ஈசன் திருமாலைப் பணிந்தாரல்லவா?
மாயவன் அடியாரில் முதன்மையானவர் மகாதேவர். பக்தனை அவமதிப்பது பரந்தாமனையே அவமதிப்பதல்லவா? இனியும் சிவனாரைச் சினப்பீர்களா?
அவரவர் மதத்தில் அவரவர் ஆழ்ந்திருக்கும் வரை பிரச்சனையில்லை... அடுத்தவர் மதத்தை விமர்சிக்கப் புகுவதை தயவு செய்து தவிருங்கள்!
"சாரங்க பாணியார் அஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கம் கொய்த உகிர்வாளர் - பாரெங்கும்
ஏத்திடு மையாகரினதாய் இவர் உம்மைக்
காத்திடுவர் எப்போதும் காண்.
- கவி காளமேகம்.
(இதை சிவனுக்கென்று எடுத்தால்
சாரங்கம் - மானை ஏந்தியவர், ஐந்து அக்கரத்தார் (பஞ்சாட்சரன்),
கஞ்சனை - பிரமனின் தலையைக் கொய்தவர்,
ஏத்திடும் உமையாகர் - உமையம்மையை ஒரு பாகமுடையவர்.
விஷ்ணுவுக்கென்று எடுத்தால்,
சாரங்கம் எனும் வில்லினை ஏந்தியவர்,
அம்+சக்கரத்தர் - அழகிய சக்கரம் கொண்டவர்,
கம்சனைக் கொன்றவர்,
மையாகர் - கருமை நிறத்தினுடையவர்.")

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends