Announcement

Collapse
No announcement yet.

அது ஒரு விபத்து!

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • அது ஒரு விபத்து!

  அது ஒரு விபத்து!

  இரவு, மணி, 10:00; டிசம்பர் மாத குளிர். அதனுடன் இணைந்த ரம்மியமான மழை. ஆனால், என்னால் தான் ரசிக்க முடியவில்லை.
  ''வெறுப்பா இருக்குய்யா... இன்னைக்கு தான் கான்ஸ்டபிளா வேலைக்கு சேர்ந்திருக்கேன்; முதல் நாளே, இப்படி ஒரு பிணத்தை பாக்க வேண்டியிருக்கே...''
  பெங்களூரின் பிரதான சாலையிலிருந்து பிரிந்து சென்ற ஆள் நடமாட்டமில்லாத அந்த குறுகிய சாலையில், இளஞ் சிவப்பு நிற ஸ்கூட்டியிலிருந்து விழுந்து கிடந்தாள் அப்பெண். கைகள் ஒரு புறமும், கால்கள் மறுபுறமும் சம்பந்தமில்லாமல் திரும்பி கிடந்தன. முகத்தின் இடது பாதியை, கூந்தல் மறைத்திருந்தது. வலது பாதியில், மழையில் கரைந்து செல்லும் ரத்தம். தலையிலிருந்து பரவிய உதிரம், அவளது வெளிர் நீல நிற சுடிதாரின் மேல் புறத்தை சிவப்பாக்கியபடி இருந்தது.
  சிறிது தூரத்தில், அவள் மீது ஏறி சென்ற அந்த விலையுயர்ந்த வெளிநாட்டு கார் நின்று கொண்டிருந்தது. கையும், களவுமாக அந்த காரை பிடித்து நிறுத்தியிருந்தேன்.
  ''வாய்யா... காரை ஓட்டிட்டு வந்தவன் யாருன்னு பாப்போம்,''என்று கூறி, சக கான்ஸ்டபிள் பசவண்ணாவுடன், காரை நோக்கி நடந்தேன்.
  ''வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே, இப்படி ஒரு இளம் பெண்ணோட பிணத்தை பாக்க வெச்சுட்டானய்யா...'' என்றபடி காரை நெருங்கினோம்.
  எந்த பதற்றமும் இல்லாமல், காரை விட்டு இறங்கினான் அந்த நீக்ரோ மனிதன். ஆறரை அடி உயரம் இருக்கலாம். சுருள் தலை முடி; வழக்கத்தை விட, கொஞ்சம் பெரிய உதடு. அதன் ஓரத்தில் புகையை கக்கி கொண்டிருந்த சிகரெட். அந்த உயரமும், அதிரடியான அவன் உடல் கட்டும், வித்தியாசமாக இருந்தது. அவன் எங்களை அலட்சியமாக நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம், ஏனோ பரிச்சயமானதாக தோன்றியது.
  ''வாட்ஸ் யுவர் நேம்,'' என்று கேட்டு கொண்டே அவன் கார் நம்பரை எழுத ஆரம்பித்தேன்.
  ''நோ... ப்ளீஸ் டோண்ட்...''
  ''ஒய்?''
  ''ஐயம் ஜான் டக்ளஸ்... செலிபிரிட்டி!'' என்று அவன் சொன்ன போது, வாயிலிருந்து உயர் ரக மது வாசனை காற்றில் பரவியது.
  யார் என்று யோசிப்பதற்குள், என்னை ஓரமாக தள்ளி கொண்டு போன பசவண்ணா, ''பலராம்... அவனை உனக்கு தெரியலயா... அவன் தான் டக்ளஸ்; பிரபல குத்துச்சண்டை வீரன்,'' என்றான் பரபரப்பாக!
  ''இருக்கட்டுமே... அதனால என்ன...
  'புக்' செய்வோம்யா!''
  ''எதுக்கும் ராயப்பா சார் கிட்ட சொல்லிடுவோமே.'' என்றான் பசவண்ணா.
  ராயப்பா, என் உயரதிகாரி; முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன், குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்த, அதை மீடியாவிடம் வெளிப்படுத்தி, அரசியல்வாதிகள் பலரை நடுங்க வைத்தவர். அந்த சம்பவம் மூலம், நேர்மைக்கு மறு பெயர் ராயப்பா என்ற பெயரைப் பெற்றவர்.
  ''உனக்கு தெரியுமா... ராயப்பா சார், உடனே, கேஸை, 'புக்'செய்யத் தான் சொல்வாரு,'' என்றேன்.
  ''அதுக்கில்ல பலராம்... ராயப்பா சார் முன்னாள் குத்துச் சண்டை வீரர்; அதுவுமில்லாம அவர் குடும்பத்துல இருக்கிற எல்லாருமே, எங்க குத்துச்சண்டை போட்டி நடந்தாலும் போய் பாப்பாங்க அதான்...'' என்று இழுத்தான் பசவண்ணா.
  அவன் கூறியதை கேட்ட போது, எனக்கு சிரிப்பு வந்தது. ராயப்பாவின் நேர்மையை, அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று, அவரை மொபைலில் அழைத்தேன்; அவர் எடுக்கவில்லை. ஒரு பயிற்சிக்காக புனே சென்றிருந்த அவர், சிறிது நேரம் கழித்து லைனில் வந்து, ''என்ன பலராம்... இந்த நேரத்தில...'' என்றார்.
  ''சார்... சாலையில ஒரு விபத்து; அதான் கேஸ், 'புக்' செய்யலாமான்னு...''
  ''உடனே கேஸ,'புக்' செய்; இதையெல்லாமா என் கிட்ட கேக்கணும்...''
  ''இல்ல சார்... கார் ஓட்டினவன், யாரோ டக்ளஸ்ன்னு ஒரு பாக்சராம்...''
  ''என்ன பேரு சொன்னே...''
  அவரது குரலில் பரபரப்பு.
  ''ஜான் டக்ளஸ்!''
  ''என்ன சொல்றே ராம்...'' என்று அதிர்ச்சியுடன் கேட்ட ராயப்பாவிடமிருந்து, சிறிது நேரம் சத்தமே இல்லை. பின், அவரே, ''பெங்களூர்ல நாளைக்கு நடக்க போற சாம்பியன்ஷிப்புக்காக, அவன் தென் ஆப்ரிக்காவிலிருந்து வந்திருக்கான்; அவன் உலக சாம்பியன். அதுவும், 23 மூணு வயசுல! அதனால, அவனை விட்டுரு,'' என்றார்.
  ''சார்... அவன் குடிச்சுட்டு காரை ஓட்டியிருக்கான்,'' என்றேன்.
  ''குத்துச் சண்டை வீரர்களுக்கு டென்ஷன் அதிகம் இருக்கும். அதுல சில சின்னச் சின்ன தப்பெல்லாம் செய்வாங்க. பாக்சிங்ல எதிரியோட காதைக் கடிக்கிறது, பார்ல சண்டை போடறது, பொண்டாட்டிய அடிக்கிறதுன்னு, நியூஸ் பேப்பர்ல நீ படிச்சதே இல்லயா... அது மாதிரி தான் இதுவும்!''
  எனக்கு ராயப்பா தான் பேசுகிறாரா என்று சந்தேகம் வந்தது.
  ''சார்... உங்ககிட்டேயிருந்து, இந்த வார்த்தைய நான் எதிர்பாக்கல; முன்னாள் அமைச்சரோட மகனையே சட்டத்தின் முன் மாட்டி விட்டீங்களே...'' என்றேன்.
  ''ராம்... அவன் ஒரு போக்கிரி; அவனுக்கெல்லாம் தண்டனை கொடுக்கலன்னா பெரிய அரசியல்வாதியாகி, நாளைக்கு நமக்கே டார்ச்சர் குடுப்பான். அதான் அப்படி செஞ்சேன். ஆனா, இவன் பாக்சிங் சாம்பியன்; நீ இப்ப இவன் பேருல கேஸ் எழுதினா, மீடியாவுக்கு செம தீனி; இதனால இன்னொரு பாக்சிங் சாம்பியன்ஷிப் இந்தியாவுல நடக்காது. மத்த வெளிநாட்டு வீரர்கள், இங்க வர்றதுக்கு பயப்படுவாங்க. அதை விடு... டக்ளஸ், 'அப்செட்' ஆயிடுவான்; நாளைக்கு அவனால மேட்ச்சே விளையாட முடியாது. இவ்வளவு நேரம், அவனை நீ நிக்க வெச்சதே தப்பு; போ... உடனே அவனை அனுப்பி வை!''
  மழையில் கிடந்த அப்பெண்ணைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆனால், எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் இறுகிய முகத்துடன், காரில் சாய்ந்து நின்று, சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் டக்ளஸ்.
  ''சார் யோசிங்க... சின்னப் பொண்ணு...''
  ''அதான் போயிருச்சே... நீ டக்ளஸை கைது செய்தா மட்டும் அந்தப் பொண்ணு உயிரோட வந்துடுவாளா... உனக்கு இது முதல் கேஸ்ங்கிறதால இப்படி பேசுற... முதல்ல இந்த ஓவர் செண்டிமென்ட விடு. இது ஒரு சாதாரண விபத்து; தெரியாம, அந்தப் பொண்ணு மேல காரை ஏத்திக் கொன்னுட்டதா, நாளைக்கு காலையிலே ஒரு டிரைவரை சரண்டராக சொல்றேன். இன்ஸ்யூரன்ஸ்ல கிடைக்காத ஒரு பெரிய தொகைய, அவ குடும்பத்துக்கு டக்ளஸ்கிட்ட இருந்து நானே முயற்சி எடுத்து வாங்கி தர்றேன் போதுமா...'' என்றார்.
  என் எதிரில் நின்றிருந்த பசவண்ணாவுக்கு அந்த வார்த்தைகள் கேட்டிருக்க வேண்டும். தான் சொன்னது தான் நடந்தது என்ற நினைப்புடன், அவன் என்னைப் பார்த்து, ஏளனச் சிரிப்பு சிரித்தான்.
  ''பலராம்... போனை டக்ளஸ்கிட்ட குடு!'' என்றார் ராயப்பா.
  என் கையிலிருந்து நீண்ட அலைபேசியை, ஒற்றைக் கையால் வாங்கி, தன் பெரிய காதில் வைத்தான் டக்ளஸ்.
  ராயப்பா அவனிடம் ஆங்கிலத்தில் கூறினார்...
  'சார்... நானும் ஒரு பாக்சர் தான்; என் குடும்பத்துல எல்லாரும் உங்க ரசிகர்கள். இந்தக் கேஸ்ல இருந்து, உங்களை நான் விடுவிக்கிறேன்; நீங்க கவலைப்படாதீங்க... ஒரு சின்ன வேண்டுகோள்... நாளை இரவு சாப்பாட்டுக்கு, நீங்க, என் வீட்டுக்கு வர முடியுமா?'
  'ஓகே... ஐ வில்...' என்று சொன்ன டக்ளஸின் உதட்டோரத்திலிருந்து, சிகரெட் இன்னும் அகலவில்லை.
  'தேங்க் யூ சார்...' என்று ராயப்பா முடித்ததும், டக்ளஸ் என்னிடம், ''கேட்ச்!'' என்று சொல்லி அந்த மொபைலை தூக்கிப் போட்டான். அடுத்த வினாடி அவனுடைய கார் விர்ரென்று பறந்து, சாலை முனையை தாண்டியது.
  என்னை யாரோ நிர்வாணமாக்கி, மழையில் கட்டிப் போட்டு அடிப்பதைப் போல உணர்ந்தேன். பல கனவுகளுடன் நான் சேர்ந்த இந்தக் கான்ஸ்டபிள் வேலை, முதல் நாளே கசந்தது.
  ''ஓகே... நாம வழக்கமான நடைமுறைகளை கவனிப்போம்,'' என்று மெதுவாக பசவண்ணாவிடம் சொன்னேன்.
  அதற்குள் அந்தப் பெண்ணின் கை அருகே கிடந்த ஹேண்ட் பேக்கில், மொபைல் ஒலித்தது. உதிரத்தில் மூழ்கியிருந்த அந்த பேக்கை திறந்து மொபைலை எடுத்து, ஆன் செய்தேன்.
  நான் ஹலோ சொல்வதற்குள், அந்தப் பக்கத்திலிருந்து உற்சாகமான ஒரு ஆண் குரல்...
  ''மோனிகா... அப்பா, உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்லப் போறேன்... உனக்கு பிடிச்ச குத்துச்சண்டை வீரர் ஜான் டக்ளஸ், நாளை இரவு, நம்ம வீட்டுக்கு டின்னருக்கு வர்றார்; நம்ப முடியலேல்ல... நெஜம்மா...''
  என் கையிலிருந்த அலைபேசி நழுவியது. அதற்கு மேல் ராயப்பா பேசியதை கேட்க முடியவில்லை.


  பெயர்: பா.உமா மகேஸ்வரி,
  சொந்த ஊர்: மதுரை.
  பொழுதுபோக்கு: கதை, கவிதைகள் எழுதுவது. இவரது சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.

 • #2
  Re: அது ஒரு விபத்து!

  அது !............
  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

  http://eegarai.org/apps/Kitchen4All.apk

  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

  Dont work hard, work smart

  Comment

  Working...
  X