Announcement

Collapse
No announcement yet.

Lord Murugas Disciples

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Lord Murugas Disciples

    Lord Murugas disciples

    முருகப் பெருமானின் சீடர்கள்


    முருகப் பெருமானின் பேரருள் பெற்றவர்கள்!

    யதார்த்த உலகில் பலருக்கும் அந்த இறை அனுபவம் கிட்டியிருக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில மகான்களின் வாழ்க்கைச் சம்பவங்களே அவனருளுக்குப் பெரிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
    அந்தப் பெருமை பெற்ற சில மகான்களைப் பற்றி, இங்கே:

    அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை.

    அகத்தியர்தான் முருகப்பெருமானின் முதல் சீடர். தமிழை வளர்த்த சித்தர் அகத்தியர். முருகனின் ஆணைக்கிணங்க அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றியவர். சித்தர்களுக்கெல்லாம் சித்தர்.


    ஆதிசங்கரர் தீராத வயிற்றுவலியால் துடித்தபோது திருச்செந்தூர் முருகனின் மீது சுப்ரமண்ய புஜங்கம் என்ற அருமையான தோத்திரத்தைப் பாட, அவரின் வயிற்றுவலி முருகன் அருளால் நீங்கியது.

    கடல் சூழ்ந்திருந்த அந்த தலத்தை, அவர் பாடிய சுப்ரமண்ய புஜங்கம்தான் சுனாமிப் பேரழிவிலிருந்து காத்தது என்று அப்பகுதி பக்தர்கள் இன்றும் நினைத்து ஆதிசங்கரருக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

    நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரர், தமிழ் மீதும் தமிழ்க்கடவுள் முருகன் மீதும் பற்றுடையவர். அவர் வெப்பு நோயால் பெரும் துன்பப்பட்டபோது, முருகனை திருமுருகாற்றுப்படை எனும் துதியால் துதித்தார். அதனால் மகிழ்ந்த முருகன் அவருக்கு தரிசனம் தந்து திருக்காளத்திக்குச் செல்ல பணித்தான். அவரும் அதன்படி அங்கு சென்று பொன்முகலியாற்றில் மூழ்கி எழுந்து, தன் நோய் நீங்கப் பெற்றார்.

    காஞ்சியம்பதியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு கந்தபுராணத்தை எழுதுவதற்கு ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என அடி எடுத்துத் தந்தது முருகப்பெருமானே! இதைப் பலரும் நம்பாததால் முருகனே ஒரு புலவர் வேடத்தில் வந்து தன்னை மெய்ப்பித்து கச்சியப்பரின் புகழை உலகறியச் செய்தார்.

    அருணகிரிநாதர் தீய வழியில் சென்று, அதன் விளைவுகளால் மனம் வருந்த, முருகன் அவரைத் தடுத்தாட்கொண்டு திருப்புகழ் பாடப்பணித்தார். அதுமட்டுமன்றி, ‘முத்து..’ என்ற முதற்சொல் கொடுத்து அவரைத் தொடரச் செய்தார். பகைவரின் சூழ்ச்சியால் கிளியாக மாறிய அருணகிரிநாதரின் புகழை உலகறியச் செய்ததுடன் மதுரை மீனாட்சியம்மனுடைய திருத்தோளில் அமரும் பாக்கியத்தையும் அவருக்கு முருகன் அருளினார்.

    பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை வாய் பேச இயலாதவராக இருந்தவர் குமரகுருபரர். அவர் திருச்செந்தூர் முருகனின் அருளால் பேசும் ஆற்றல் பெற்று, அதற்கு நன்றியறிதலாக கந்தர் கலி வெண்பா எனும் துதியைப் பாடி, அதுமுதல் கவி இயற்றும் திறமையையும் பெற்றார்.

    பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானின் மீது அளவற்ற பக்தி கொண்டவர். முருகனை அழைத்துத் தன்னுடன் அமர்ந்து பால் சோறு சாப்பிடச் செய்தவர்! இது அவருடைய பக்தியின் சிறப்பு!

    தன் வாழ்க்கையில் நேர்ந்த பல இன்னல்களை தான் இயற்றிய ஷண்முக கவசத்தைப் பாராயணம் செய்தே தீர்த்துக் கொண்டார் அவர்.

    முதுமைக் காலத்தில் அவர் கால் எலும்பு முறிய உடனே அவர் முருகனைப் பாட, எங்கிருந்தோ வந்த இரு மயில்கள் அவர் படுத்திருந்த மருத்துவமனை ஜன்னல் வழியே பறந்து வந்து அவர் காலை தம் தோகையால் வருட, மருத்துவர்களே வியந்து போற்றும்படி அவர் கால் எலும்புகள் ஒன்று சேர்ந்தன.

    ஔவையார் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, தனக்கிருந்த தமிழ் கர்வத்தை அடக்கிய முருகனின் தரிசனம் பெற்று அவன் அருளையும் பெற்றார்.

    போகர் பெரும் சித்தர். முருகப் பெருமான் திருவருளால் நவபாஷாணங்களினால் இவர் உருவாக்கிய முருகனின் திருவுருவமே இன்று பழநியில் மூலவர் முருகனாய் அருளொளி பரப்புகிறார்.

    வால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் ராம லட்சுமணர்களுக்குச் சொல்கிறார்: `குமார சம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தையும் கொடுக்கும். புண்ணியத்தையும் கொடுக்கும். இந்த பூலோகத்தில் மட்டும் ஒரு மனிதன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும், தீர்க்காயுள், புத்திர செல்வம், சௌபாக்கியம் எல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடும். முடிவிலோ கந்த லோகத்துக்கே போய் அவருடனேயே நித்திய வாசம் செய்யலாம்.” இப்படிச் சொல்கிறார்,


    Source: srinivassharmablog.wordpress


    This post is for sharing knowledge only no intention to violate any copy rights
Working...
X