பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!
செப்., 5 கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திரத்தில், வசுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர்.
பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.
அதை ஏற்ற கிருஷ்ணர், சாதாரண குழந்தையாக உருமாறினார். அவரை பாலகிருஷ்ணர் என்று அழைத்தனர். வாழ்க்கைப் பாதைக்கு, ஒளி தரும் கீதையை அருள வந்த கண் போன்றவர் என்பதால், கண்ணன் என்றும் செல்லப் பெயரிட்டனர்.
'எங்கெல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் செய்வேன்...' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. பக்தர்களைக் காக்கவும், கொடியவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் அவர் அவதரித்தார்.
அதன்படி, கம்சன் மற்றும் கவுரவர்களை அழித்தார். தர்மத்தின் வழி நின்றாலும், செஞ்சோற்றுக் கடன் என்ற பெயரில், கவுரவர்களுடன் கை கோர்த்த பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் போன்றோரையும் அழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் கிருஷ்ணர். இதன் மூலம், கெட்டவர்களுடன் சேரக்கூடாது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.
ஒருமுறை, கிருஷ்ணர், நாரத மகரிஷிக்கு உபதேசிக்கும்போது, 'நாரதா... உண்மையில் நான் வைகுண்டத்தில் வசிப்பதில்லை; என் திருநாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் தூய பக்தர்களின் நெஞ்சிலே வாழ்கிறேன்...' என்றார்.
கிருஷ்ணரின் அருளைப் பெறுவது மிகவும் எளிதானது. நல்ல மனதுடன், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், கலிசந்தரன உபநிடதம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ; ராம ராம ஹரே ஹரே எனும் மந்திரத்தை, தினமும், 108 முறை கூறினால், அவரது அருள் பூரணமாகக் கிடைக்கும்.
மிகவும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம். மந்திரம் என்ற வார்த்தையை, மன்+திரம் என பிரித்து பொருள் காண வேண்டும். 'மன்' என்றால் மனம்; 'திரம்' என்றால், விடுவிப்பது. அனைத்து விதமான துன்பங்களில் இருந்து நம்மை விடுவிப்பதால், 'ஹரே கிருஷ்ண' மந்திரத்திற்கு, மகா மந்திரம் என்று பெயர்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று, இம்மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்குங்கள்; அந்த சின்னக் கண்ணன், நீங்கள் அழைக்கும் நேரத்தில் எல்லாம் வருவான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதி.செல்லப்பா