படித்ததில் வலித்தது !


விருந்துச் சாப்பாடு!


தொலை பேசி மணி ஒலித்தது
எடுத்தேன்


நண்பர் ஏடிஎஸ்


சார்!நாளைக்கு என் நண்பர் ஒருவருக்கு அறுபது நிறைவு விழாவுக்கு முன்னதான ஏகாதச ருத்ர ஜபம்;நம்ம குழுவிலிருந்து பதினோருபேர்.நீங்க கட்டாயமா நாளைக் காலை 7 மணிக்கு ராஜா கல்யாண மண்டபத்துக்கு வந்து விடுங்கள்


சரி
------------------
ராமனாத அய்யர் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விட்டார்.


அவருக்கு வயது 79 ஆகி விட்டது.வறுமையில் மெலிந்த சரீரம்.ஒட்டி உலர்ந்த வயிறு
என்னன்னா.அதுக்குள்ளே எழுந்திருந்துட்டேள்? மனைவி சாவித்ரியின் கேள்வி.


நேத்து வெளில போறச்சே பாத்தேன்,ராஜா கல்யாண மண்டபத்தில ஒரு ருத்ர ஜபம்.போய் ரித்விக்குகளோட சேர்ந்து ஜபிச்சுட்டு ஏதாவது சம்பாவனை கெடச்சா வாங்கிண்டு நல்ல சாப்பாடா சாப்பிட்டுட்டு வந்துடலாமேன்னுதான்


சாவித்ரிக்கு கண்களில் நீர் கசிந்தது.


முன்பெல்லாம் மூர்த்தி சாஸ்த்ரிகள் இவரை பிராமணார்த்தம் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்வார். சாவித்ரிக்கு அங்கு சமையல் வேலையும் கிடைக்கும்.சாஸ்த்ரிகள் பையனோடு தில்லிக்குப் போன பின் அது நின்று போய் விட்டது. சாவித்ரியாலும் தள்ளாமையினால் அதிகம் சமையல் வேலைக்குப் போக முடிவதில்லை.வயிறாரச் சாப்பிடுவது என்பது அரிதாகிப் போனது


அய்யர் ஸ்நானம் முடித்து விட்டு வந்து,கூடத்தின் மூலையிலிருந்த சிறிய தகரப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து நீர்க்காவி ஏறிய ஒன்பது முழம் வேஷ்டி,அங்கவஸ்திரத்தை எடுத்தார். அவரிடம் இருந்த ஒரே ஒரு சுமாரான வேஷ்டி அதுதான். எடுத்துப் பிரித்தார்


ஏன்னா! கிழிஞ்சிருக்கு போலிருக்கே?


ஒரு ஓரமாத்தான் இருக்கு.மடிப்பில மறைஞ்சிடும்


பஞ்சகச்சமாகக் கட்டிக் கொண்டார்.விபூதியைக் குழைத்துப் பூசிக் கொண்டார், அங்க வஸ்திரத்தை மேலே போட்டுக் கொண்டார்.சாமி கும்பிட்டார்.கையில் மஞ்சப் பையை எடுத்துக் கொண்டார்


போயிட்டு வரேண்டி


சரின்னா


ஈஸ்வராஎன்று சொல்லியவாறே புறப்பட்டார்
-----------
நான் மண்டபத்தை அடைந்தபோது மணி 6.45.ஏடிஎஸ்ஸும் ஓரிரு நன்பர்களும் ஏற்கனவே ஆஜர்.


காபி சாப்பிடுங்கோ


குடித்து விட்டு ஹாலில் சென்று அமர்ந்தோம்


அனைவரும் வந்து சேரந்தனர்


7 மனிக்குப் பாராயணம் ஆரம்பமாயிற்று


முதலில் மஹா நியாஸம்.


வேத ஒலி அங்கு நிறைந்தது


அரை மணி போயிருக்கும்.


அந்த வயதான அந்தணர் உள்ளே வந்தார்


எங்கள் குழுவோடு சேர்ந்து கடைசியில் அமர்ந்தார்.


எனக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.


எங்களோடு சேர்ந்து அவரும் ஜபிக்க ஆரம்பித்தார்


ஒன்பது மணிக்கு மஹாநியாஸம் முடிந்தது.


அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து வாங்கோ.டிஃபன் சாப்பிடப்போகலாம் என்று அழைத்தார்


வழக்கமாகக் கஞ்சிதான் குடிப்போம்;ஆனால் அன்று அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை போலும்


சாப்பாட்டுக் கூடம் நோக்கிப் புறப்பட்டோம்


அந்தப் பெரியவரும்தான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
எங்களோடு அமர்ந்து கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.


முடிந்ததும்,அமைப்பாளரிடம் ரொம்ப நன்னாருந்தது என்று சான்றிதழ் வழங்கினார்.


மணி 9.45


ருத்ர ஜபம் ஆரம்பமாயிற்று.


எங்களோடு சேர்ந்து அவரும்.


ஜபம் முடிந்து அபிஷேகங்கள் ஆனபின் சாப்பாடு.


மீண்டும் உணவுக்கூடம்


எங்களோடு அவரும்,பந்தியில் எனக்கு அருகில்


எல்லாம் பரிமாறப்பட்டதும், மஞ்சப்பையிலிருந்து,ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து, இலையிலிருந்த ஜாங்கிரி ,வடை இரண்டையும் அதில் போட்டார்ஆத்துக்காரிக்குப் பிடிக்கும் என்று என்னிடம் விளக்கம்


நான் இனிப்பு,வடை எல்லாம் சாப்பிடுவதில்லை என்று கூறி என் இலையில் போடப் பட்டவற்றை அவரிடம் கொடுத்தேன்.


மகிழ்ச்சியுடன் பையில் போட்டுக் கொண்டார்,


சாப்பிடத் தொடங்கினோம்.


அவர் சாப்பிடுவதைப் பார்த்தே என் வயிறு நிரம்பியது


திரும்ப விசேடம் நடக்கும் கூடத்துக்கு வந்தோம்


அடுத்தது சம்பாவனை


நாங்கள் அமர்ந்தவுடன் எங்களுடன் அவரும் அமர்ந்து கொண்டார்.


விழா நாயகர் அவரிடம்மாமா! நீங்க கொஞ்சம் தள்ளி உக்காருங்கோ என்றார்.


அவர் முகத்தைப் பார்த்த எனக்கு மனம் வலித்தது


எனது தட்சிணையை அவருக்குக் கொடுத்து விடலாம் எனத் தீர்மானித்தேன்


எங்கள் அனைவருக்கும் வேஷ்டி,அங்கவஸ்திரம்;உடன் கவரில் 300 ரூபாய்.


முடிந்தது


கடைசியில் அவருக்கும் நூறு ரூபாய் கொடுக்கப்பட்டது;அவர் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி!


புறப்பட்டோம்


வெளியே செல்லப் புறப்பட்டவரிடம் சொன்னேன்மாமா!வெளில போய்க் கொஞ்சம் காத்திண்டிருங்கோ;வந்துடறேன்


விடை பெற்றுக் கிளம்பினோம்.


முதலில் சாப்பாடுக்கூடம் சென்று நாலு ஜாங்கிரி ,வடை ஒரு பையில போட்டுக் குடுங்க!ஆத்துல குழந்தைகளுக்கு என்று வெட்கத்தை விட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.


வெளியே அவர் காத்திருந்தார்


அவரிடம் வேஷ்டி,அங்கவஸ்திரம் ,ரூபாய்க் கவர் ஆகியவற்றைக் கொடுத்தேன்;அவர் தயங்கினார்


வாங்கிக்குங்கோ!உங்களுக்குத்தான் இது அவசியம் தேவை


வாங்கிக் கொண்டார்


அப்புறம் இந்தாங்கோ,வடை,ஜாங்கிரி.மாமிக்குக் குடுத்து நீங்கள் சாப்பிடுங்கோ


அவர் கண்கள் பனித்தனக்ஷேமமா, ஸ்ரேயஸா,தீர்க்காயுசா இருங்கோ வாழ்த்தினார்


வேறென்ன வேண்டும்?


நன்றி: சென்னைப் பித்தன் அவர்களின் வலைத்தளம்.