மும்பை: மும்பை டெஸ்டில் அஷ்வின், சதம் அடித்து அசத்தினார். "சதத்தில் சதம்' அடிக்கு வாய்ப்பை, 6 ரன்களில் தவற விட்டார் சச்சின். வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்ற போதிலும், இன்று கடைசி நாள் என்பதால் போட்டி "டிரா'வில் முடிய அதிக வாய்ப்புள்ளது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. முக்கியத்துவமில்லாத மூன்றாவது டெஸ்ட் மும்பையில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 590 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது.
சச்சின் ஏமாற்றம்:
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. லட்சுமண் (32) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின் சச்சினுடன் விராத் கோஹ்லி இணைந்தார். ராம்பால் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய சச்சின், எட்வர்ட்ஸ் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். 94 ரன்கள் எடுத்த போது, ராம்பாலின் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயற்சிக்க, பந்து "பேட்டின்' விளிம்பில் பட்டு, "சிலிப்' பகுதியில் நின்றிருந்த சமியின் கையில் தஞ்சம் புகுந்தது. இதனால், மைதானத்தில் அமர்ந்திருந்த 15 ஆயிரம் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அஷ்வின் அசத்தல்:
அடுத்து கோஹ்லியுடன் இணைந்த அஷ்வின் அதிரடியாக ரன்கள் சேர்க்க, இந்திய அணி "பாலோ-ஆன்' அபாயத்தை தாண்டியது. யுவராஜ் சிங்கிற்கு பதில் இடம் பெற்ற இவர், டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதம் (52) கடந்து, வெளியேறினார். கேப்டன் தோனி (8) விரைவில் நடையை கட்டினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்வின், பிஷு பந்துகளை சிக்சர்களுக்கு அனுப்பி, சதத்தை நெருங்கினார். இஷாந்த் சர்மா (5), வருண் ஆரோன் (4) அடுத்தடுத்து அவுட்டாகினர். பின், ராம்பாலின் "பவுன்சரை' பவுண்டரிக்கு அனுப்பிய அஷ்வின், சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதல் சதம் அடித்தார். இவர் 103 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 482 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.
முன்னிலை பெற்றது:
108 ரன்கள் முன்னிலையுடன், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அட்ரியன் பரத் (3) ஏமாற்றம் தந்தார். கிர்க் எட்வர்ட்ஸ் (17) இம்முறை நிலைக்கவில்லை. பிராத்வைட், டேரன் பிராவோ இணைந்து, மேலு<ம் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து, 189 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பிராத்வைட் (34), டேரன் பிராவோ (27) அவுட்டாகாமல் இருந்தனர்.
டிராவை நோக்கி...
இன்று போட்டியின் கடைசி நாள். வெஸ்ட் இண்டீஸ் அணி அதிக முன்னிலை பெற்றிருந்த போதும், மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், ஆட்டம் "டிராவில்' முடிய அதிக வாய்ப்புள்ளது.
---
சச்சினை துரத்தும் துரதிருஷ்டம்
சச்சின் 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு நேற்றும் ஏமாற்றமே மிஞ்சியது. 94 ரன்கள் எடுத்த போது, ராம்பாலின் வேகத்தில், சமியிடம் பிடிபட்டு திரும்பினார். இவர், கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில் தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார். அதன்பின் சச்சின் பங்கேற்ற நான்கு ஒருநாள் (2, 53, 85, 18 ரன்கள்), ஏழு டெஸ்ட் (34, 12, 16, 56, 1, 40, 23, 91, 7, 76, 38, 94 ரன்கள்) என, 16 இன்னிங்சில், ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.
---
90களில் 10வது முறை
டெஸ்ட் அரங்கில் 10வது முறையாக 90 ரன்களில் அவுட்டான முதல் வீரர் என்ற வேதனையான சாதனை படைத்தார் சச்சின். டெஸ்ட் (10) மற்றும் ஒருநாள் (18) போட்டிகளில், மொத்தம் 28 முறை 90 அல்லது அதற்குமேல் எடுத்து அவுட்டாகியுள்ளார் சச்சின். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன் டிராவிட் (இந்தியா), சிலேட்டர் (ஆஸி.,) தலா 9, ஸ்டீவ் வாக் 8 முறை இதுபோல அவுட்டாகியுள்ளனர்.
---
49 ஆண்டுகளுக்குப் பின்...
டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் (156 ரன்களுக்கு, 5 விக்.,) வீழ்த்தி, சதமும் (103) அடித்த இந்திய பவுலர்கள் வரிசையில், அஷ்வின் மூன்றாவது இடம் பிடித்தார். 49 ஆண்டுகளுக்கு முன், 1962ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பாலி உம்ரிகர் (56, 172 ரன், 5/107, 0/17) மற்றும் வினோ மன்கட் (72, 184 ரன், 5/196, 0/35) இங்கிலாந்துக்கு எதிராக, 1952 ல் இந்த சாதனை படைத்து இருந்தனர்.
* ஒரே இன்னிங்சில் சதம் மற்றும் ஐந்து விக்கெட் எடுத்த "ஆல் ரவுண்டர்' என்ற பெருமை பெறும் முதல் இந்திய வீரர் அஷ்வின் ஆவார்.
* உலகளவில் ஒரே டெஸ்டில் இந்த இலக்கை எட்டிய 20வது வீரர் என்ற பெருமையும் கிடைத்தது. டெஸ்ட் வரலாற்றில் இதுபோல நடப்பது 27 வது முறையாகும். 2000ம் ஆண்டுக்குப் பின், முதன் முதலாக இப்போது தான் நடந்தது.
* எட்டாவது வீரராக களமிறங்கி சதம் அடித்த, 13வது இந்திய வீரராகி உள்ளார் அஷ்வின். உலகளவில் பாகிஸ்தான் (11) நியூசிலாந்து (10) அணி வீரர்கள் இதற்கு முன் அதிக சதம் அடித்துள்ளனர்.
* தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, எட்டாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில், தோனி (144), அஜய் ராத்ராவுக்குப் பின் (115*), மூன்றாவது இடம் அஷ்வினுக்கு கிடைத்தது.
---
11 அரைசதம்
டெஸ்ட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக அரைசதம் (11) அடிக்கப்பட்டது இதுவே முதன் முறை. இதற்கு முன், 6 வெவ்வேறு டெஸ்ட் போட்டிகளில் தலா 10 அரைசதம் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது