பத்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் கட்பீஸ் ஜவுளி வியாபாரி சங்க மருத்துவமனை
தினமலர் – News.
சென்னை: பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நோய் வந்தால் சேர்த்து வைத்த, சொத்து பத்தெல்லாம் பறந்து போய் விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அந்தளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பகல் கொள்ளையாக உள்ள நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் கடந்த 2010ல் சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பியாரிலால் ஜெயினின் உதவியுடன் ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சகுந்தலா என்பவரின் பெயரில் தொடங்கப்பட்டது தான் சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை. இம் மருத்துவமனை ரூ. மூன்று கோடி செலவில் பலரின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிப்பதில் பகுதி மக்களின் முதல் தேர்வாக இம்மருத்துவமனை உள்ளது.
இங்கு பிள்ளை பேறு பெறும் பெண்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளுடன், தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை அளிக்கின்றனர்.
இன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வந்தால் கூட, மருத்துவரை அணுகினால் குறைந்தபட்சம் மருத்துவருக்கு நூறு ரூபாய் அழ வேண்டியிருக்கும். ஆனால் இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சுகப்பிரசவத்திற்கு ஆயிரம் ரூபாயாகவும், அறுவை சிகிச்சைக்கு ஆறாயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டணங்கள் கூட, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரின் சம்பளத் தேவைக்காக தான் வாங்கப்படுகிறது என மருத்துவமனை செயலரும், கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினருமான மாரிமுத்து கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எண்ணியே இம்மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து ஓன்றரை ஆண்டாகி விட்டது. இதுவரை 827 பெண்களுக்கு சுகப்பிரசவமாகவும் அறுவைசிகிச்சை மூலமாகவும் மகப்பேறு வைத்தியம் பார்த்திருக்கிறோம்.
தினமும் வருகிற புறநோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை எண்பதாயிரத்தை தாண்டி விட்டது. இங்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட மகப்பேறுக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துள்ளோம். இம்மருத்துவமனைக்கு என்று இதுவரை விளம்பரம் கூட செய்தது கிடையாது. எல்லாம் மக்களின் பூரண நிம்மதியே எங்களுக்கு விளம்பரமாக அமைந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து கூட இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இயங்கும் இம்மருத்துமனையில் பெறப்படும் குறைந்த கட்டணங்கள் கூட மருத்துவர்களின் சம்பளத் தேவைக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. சிகிச்சையை பொறுத்தமட்டில் மக்களுக்கு இலவசம் என்றே சொல்லலாம். தமிழகத்திலேயே ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனை நடத்தப்படுவது இங்கு தான் உள்ளது என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks