" நீ சோழபுரம் போயிருக்கிறாயோ?"
(பலருக்கும் தெரியாத 'சேலம்' கதை)
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
சேலத்தைச் சேர்ந்த ஓர் அன்பர் மகானைத் தரிசிக்கப்
போயிருந்தபோது அவரிடம், " நீ சோழபுரம்
போயிருக்கிறாயோ?" என்று கேட்டார் மகா பெரியவா.
சேலத்துக்காரர் பதில் தெரியாமல் விழித்தார்.
மகான் சரித்திரத்தை லேசாகப் புரட்டினார்.
"ஔவையார், பாரியின் பெண்களான அங்கவை,
சங்கவை இருவருக்கும் திருமண முயற்சிகள்
செய்தாரில்லையா? அதற்காக மூவேந்தர்களையும்
அழைத்து, இந்தத் திருமணத்துக்கு உதவாவது
குறித்து அவர்களை நிந்தித்த பிறகு அவர்கள்
முன்னிலையிலேயே இந்தத் திருமணத்தை நடத்தி
வைத்தார்.அதுதான் உத்தமசோழபுரம். அந்த ஊரே
பிறகு சோழனின் பொறுப்பில் விடப்பட்டது.
சேரனுக்கு சேலம் என்னும் பெரிய கிராமம்.
பாண்டியனுக்கு வீரபாண்டி என்னும் ஊர்.
ஆக மூவேந்தர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த
ஊர்கள்தான் இன்று உத்தமசோழபுரம் என்றும்,
வீரபாண்டி என்றும், சேலம் என்றும்
அழைக்கப்படுகின்றன" என்று நீண்டதொரு
பிரசங்கமே நிகழ்த்தி விட்டார் மகான்.
பலருக்கும் தெரியாத உண்மை இது.
அவரின் பேச்சில்,சேலத்தைச் சுற்றியுள்ள
பல சிவஸ்தலங்களைப் பற்றியும் தகவல்கள்
வந்தன.சேலம் சுகவனேஸ்வரரின் மகிமையைப்
பற்றிப் பேசிய அவர், அந்தக் கோயிலின் முருகன்
சந்நிதிக்கு முன்னால் அருணகிரிநாதர் பாடிய
வரலாறும் உண்டு என்றார்.