மின்னணு இயந்திரத்தில் திடீர் கோளாறு : தென்காசியில் 362 ஓட்டுக்கள் எண்ணப்படவில்லை
தென்காசி : தென்காசி தொகுதியில், மின்னணு இயந்திரத்தில், திடீர் கோளாறு ஏற்பட்டதால், 362 ஓட்டுக்கள் எண்ணப்படாமலேயே, ஒரு மணிநேரம் தாமதமாக, முடிவு அறிவிக்கப்பட்டது.
தென்காசி(தனி)லோக்சபா தொகுதி ஓட்டுக்கள், சட்டசபை தொகுதி வாரியாக, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டன. மாலை 4 மணிக்கு, தென்காசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கீழச்சுரண்டை பேரின்பபுரம், 288வது ஓட்டுச்சாவடி, மின்னணு இயந்திரத்தில் பதிவான, 362 ஓட்டுக்களை எண்ண முற்பட்டபோது, அதில், திடீரென கோளாறு ஏற்பட்டதால், அது, இயங்கவில்லை. அதுகுறித்து, தொகுதி தேர்தல் அதிகாரி, நெல்லை டி.ஆர்.ஓ., உமாமகேஸ்வரி, தேர்தல் பார்வையாளர், தமிழக மற்றும் இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். 22 சுற்றுக்கள் முடிந்த நிலையில், இப்பிரச்னையால், முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், வெற்றிச்சான்றிதழ் வாங்க, அமைச்சர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகளோடு வந்திருந்த வேட்பாளர் வசந்தி முருகேசன், ஐந்து மணியில் இருந்து காத்திருந்தார். தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்று, ஒரு மணி நேரத்திற்குப்பின், மாலை 6 மணிக்கு, டி.ஆர்.ஓ., உமா மகேஸ்வரி, வசந்தி முருகேசனுக்கு சான்றிதழ் தந்தார். டி.ஆர்.ஓ., கூறுகையில்,""அந்த ஓட்டு இயந்திர கான்ட்ரோல் யூனிட், ஓட்டுப்பதிவின்போதே பழுதானது. பின்னர், அதை மாற்றி ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில், திடீரென பழுது ஏற்பட்டதால், அதில் இருந்த 362 ஓட்டுகளை எண்ண முடியவில்லை. அதுகுறித்து, தேர்தல் கமிஷனுக்கு, அதற்கான இணைப்பு படிவம் மூலம் தகவல் தெரிவித்தோம். 362 ஓட்டுக்களால், வெற்றி பெற்றவர், இரண்டாமிடம் பிடித்தர் ஓட்டு வித்யாசத்தில், எந்த பாதிப்பும் இல்லையென்றால், அந்த ஓட்டுக்களை, எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என, உயர் அதிகாரிகள், அறிவுரை வழங்கினர். அதன்படி, அந்த ஓட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல், இறுதி, முடிவு அறிவிக்கப்பட்டது,''என்றார்.