Announcement

Collapse
No announcement yet.

Glory of parashakti -spiritual story

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Glory of parashakti -spiritual story

  ஶ்ரீ பராசக்தி மஹிமை:


  "ஏஷாஸா ஸாக்ஷிணீ சக்தி: சங்கரஸ்யாபி சங்கரீ
  சிவாபின்னா தயா ஹீந: சிவ: ஸாக்ஷாந்நிரர்த்தக:"


  "பரமேச்வரனுக்கும் ஸாக்ஷியாய் விளங்கக்கூடிய அம்பாள் மங்களத்தைக் கொடுக்கிறவள். சிவனை விட்டுப் பிரியாதவள். அவளைப் பிரிந்தால் சிவனும் ப்ரயோஜனமில்லாது ஆகிவிடுவார்".


  "அச்சுதா!! அச்சுதா!!" அசரீரியாக ஒரு குரல். "அம்மா!!" திடுக்கிட்டு விழித்தார் அச்சுதர்.


  "பயப்படாதே!! அச்சுதா!! ராஜராஜேச்வரியே நான்!!இந்த ஊரில் எனக்கு ஒரு கோவில் கட்டு!! இங்கு என் பெயர் தனேச்வரீ!! உனக்கு நான் காமாக்ஷீ!!"
  ஶ்ரீராஜராஜேச்வரீ அசரீரியாக உரைத்தாள்.


  கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பொழிய காமாக்ஷம்பாளின் கருணையை நினைத்து வியந்தார். ஊரில் இத்தனை மக்களிருக்க தன்னிடம் வந்து கோவில் கட்ட உத்தரவிட்ட பாக்யத்தை நினைத்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.


  ஹஸ்தினாபுரத்தின் அருகே 'அனுனை' எனும் ப்ரதேசத்தில் ஶ்ரீகாமாக்ஷிக்கு அழகான கோவில் எழுந்தது. "ஶ்ரீதனேச்வரீ" எனும் நாமமும் பரதேவதைக்கு சூட்டப்பட்டது. கோலாஹலமாக கும்பாபிஷேகமும் நடந்தது.


  "கோயில் வேணும்னு கேட்ட காமாட்சிக்கு, ஒரு குழந்தையை இவங்களுக்கு கொடுக்கனும்னு தோனல்லியே!! ஊரார் அச்சுதரின் காதுபடும் படியே பேசினர்.


  "அம்மா!! காமாக்ஷீ!! ஊர் வாயடைக்க ஒரு குழந்தையை மட்டும் கொடுத்துடுடீ!! உன் பேரைச் சொல்லி காலம் முழுக்க அன்னதானம் பண்றேன்!!" நீலாக்ஷியும் அச்சுதரும் காமாக்ஷியை ப்ரார்த்தித்துக் கொண்டனர்.


  தேவியின் கருணையால் நீலாக்ஷி கர்ப்பம் தரித்தாள். பத்தாவது மாதம் அழகான பெண் குழந்தையையும் பெற்றாள். ஸாக்ஷாத் காமாக்ஷியே பெண்ணாகப் பிறந்தாளோ எனும் படி தேஜஸ்ஸுடன் ஜ்வலித்தது குழந்தை. "ஞானம்" என குழந்தைக்கு பெயர் வைத்தனர்.


  ஒரு நாள் தவறாது காமாக்ஷி கோவிலுக்கு வரும் அடியாருக்கு அன்னதானம் இடப்பட்டது. வினையாலும், விதிப்பயனாலும் செல்வம் குறையத் தொடங்கியது. ஆனாலும் காமாக்ஷியின் மேல் பாரத்தைப் போட்டு அன்னமிட்டார்கள் அச்சுதரும் நீலாக்ஷியும். குறைந்தபக்ஷம் ஒருவருக்காவது நித்தமும் அன்னமிடவேண்டும் என்ற வைராக்யத்துடன் வாழ்ந்து வந்தார்கள் அச்சுதரும் நீலாக்ஷியும்.


  ஒரு நாள் அரிசிப்பானையில் குந்துமணி அரிசியில்லை. வயலில் கீழே சிந்திக்கிடக்கும் நெல்மணிகளை சேகரித்து நீலாக்ஷியிடம் கொடுத்தார் அச்சுதர்.


  "நீலா!! சாதம் வடிச்சு உப்பையும் ஜலத்தையும் விட்டு கரைச்சு வை!! ஒரு தரம் ஓடிப்போய் காமாக்ஷியை பார்த்துட்டு வந்துடறேன்!!" கூறிவிட்டு அச்சுதர் கிளம்பினார் காமாக்ஷீ கோவிலிக்கு.


  அம்பாளை கண்குளிர தர்சித்தார் அச்சுதர். "கோடீச்வரனாக இருந்த நாம் இவ்வளவு வறிய நிலைக்கு வந்தோமே!! கோவிலையே கட்டின நமக்கு காமாக்ஷீ கருணையை புரியவில்லையே!!" எனும் எண்ணம் துளியளவும் இல்லை. "ஸர்வம் காமாக்ஷீ அர்ப்பணம்!!" எனும் மஹாபக்தியில் கரைந்துருகினார் அச்சுதர்.


  "காமாக்ஷீ!! காமாக்ஷீ!!" என்று அம்பாளின் திவ்யமங்கள நாமத்தை ஜபித்து வீட்டிற்குத் திரும்பினார். "அப்பா!! அப்பா!!" எனும் குரல். திரும்பினால் ஞானம்.


  "ஞானம்!! என்னம்மா!! இது!! இந்த படபடக்கற வெய்யில்ல கால் கொப்பளிக்க நடந்து வந்துருக்கியே!! அப்பா ஆத்துக்கு தானே வந்துண்ட்ருக்கேன்!!" அச்சுதர் குழந்தையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டார்.


  "அப்பா!! அம்மா பாவம்!! தூங்கறா!! ரொம்ப வேலை!! அவளை எழுப்ப மனசில்லே!! அதான் உன்னைத் தேடி வந்துட்டேன்!! பசிக்கறதுப்பா!! இப்போவே சாதம் போடு!! என்னால நகரவே முடியாது!!" குழந்தை அடம்பிடித்தது.


  "அம்மாடி!! தங்கமே!! நீ இங்கயே படுத்துக்கோ டா!! அப்பா உடனே ஆத்துக்குப்போய் அம்மா பிசைஞ்சு வைத்திருக்கற சாதத்தை எடுத்துண்டு வறேன்!!" காமாக்ஷீ கோவில் மண்டபத்தில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு வீட்டிற்கு விரைந்தார் அச்சுதர்.


  க்ருஹத்தில் நீலாக்ஷி பசிக்களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தாள். பாவம் என்று நினைத்த அச்சுதர் உப்பும் ஜலமும் பிசைந்த சாதத்தை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு விரைந்தார்.


  தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை எழுப்பி முகத்தில் ஜலத்தால் துடைத்து விடடார். "அம்மாடி!! இந்தாடா கண்ணு!!" தாயினும் சாலப் பரிந்து குழந்தைக்கு அன்னத்தை ஊட்டிவிட்டார். வெறும் உப்பும் ஜலமும் விட்டு பிசைந்த அன்னத்தை ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேச்வரியான காமாக்ஷீ பரதேவதைக்கு ஊட்டிவிட்டார்.


  ஆம்!! வந்திருப்பது ஸாக்ஷாத் காமாக்ஷியே தான்!! லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியே தான்!! அன்னபூரணியான பராசக்திக்கு அன்னத்தை ஊட்டிவிட்டார்!! என்ன பாக்யம்!! என்ன பாக்யம்!! ஹிமவானும் மேனையும் அடைந்து பாக்யம் இன்று அச்சுதருக்கு கிடைத்ததே!!


  முழு அன்னத்தையும் சாப்பிட்டு விட்டது குழந்தை. "அப்பா!! நேக்கு இன்னும் பசிக்கறது!! அம்மா இன்னொரு அடுக்குல சாதம் வடிச்சுருக்கா!! அதையும் எடுத்துண்டு வா!!" குழந்தை இல்லையில்லை ஸாக்ஷாத் காமாக்ஷீ அடம்பிடித்தாள்.


  "என்ன சொல்றா இவோ!! நான் ஒரு அடுக்து நெல் தான் கொடுத்தேன்!! சரி போய் பார்ப்போம்!!" என நினைத்து "ஞானம்!!! சமத்தா இங்கயே இரு!! நான் போய் சாதம் எடுத்துண்டு வரேன்!!" என்று அம்பாளை , ஜகதம்பாளை கொஞ்சிவிட்டு வீட்டிற்கு கிளம்பினார் அச்சுதர்.


  "நீலாக்ஷி!! ஞானம் கோவில்ல பசியோட இருக்கா!! அடுக்குல வைச்சிருந்த சாத்தைக் கொண்டு ஊட்டிட்டு வந்தேன்!!சாதம் இன்னொரு அடுக்கு வைச்சுருக்கியா என்ன!! கொடு அதை!!" அச்சுதர் பரபரப்புடன் கேட்டார்.


  "என்னண்ணா!! சொல்றேள்!! ஞானம் அங்க தூங்கிண்ட்ருக்கா பாருங்கோ!! அடுக்குல வைச்ச சாதம் அப்படியே அடுப்புல இருக்கே!! என்ன சொல்றேள் நீங்க!! நேக்கொன்னும் புரியல்லே!! பசிச்சாலும் குழந்தையால எப்படிண்ணா ஒரு அடுக்கு சாதத்தை சாப்பிட முடியும்!!" நீலாக்ஷி ஒன்றும் புரியாமல் கேட்டாள்.


  அச்சுதரின் தேகம் விதிர்விதிர்த்து விட்டது. "தாயே!! அம்மா!! காமாக்ஷீ!!" கோவிலை நோக்கி ஓடினார் அச்சுதர். ஒன்றும் புரியாமல் நீலாக்ஷியும் ஞானமும் விரைந்தனர் கோவிலுக்கு அச்சுதர் பின்னால்.மண்டபத்திற்கு சென்றால் குழந்தையைக் காணோம்!!

  "அச்சுதா!!" மருந்தினும் நயந்த சொல் அசரீரியாகக் கேட்டது. "அச்சுதா!! மகவு பசித்திருக்க தாய் உண்பது தருமமா!! மூன்று நாட்களாக நீயும் உன் மனைவியும் உண்ணாதிருந்து என் பக்தர்களுக்கு உணவு பாலிக்க, யான் உண்டிருக்கலாமோ!! நானும் மூன்று நாட்களாக பட்டினி!! இன்று என் பசிபொறுக்காது உன்னிடம் வந்து உணவு கேட்டேன்!! என் தந்தையான இமவான் கையால் அன்னம் ஊட்டப்பெற்ற நான், இன்று உன் கையால் அன்னம் ஊட்டப்பெற்று பசி நீங்கப்பெற்றேன்!! அச்சுதா!! பூர்வ கர்மாவினாலான வறுமை இன்றோடு ஒழிந்தது!! ஸகல ஸௌபாக்யமும் பெற்று, ஜன்மாந்தரத்தில் என் திருவடியில் உன் மனையாளடன் கலப்பாய்!!" ஸாக்ஷாத் ஶ்ரீகாமாக்ஷீ பராபட்டாரிகையே அசரீரியாக செப்பினாள்.


  "அம்மா!! காமாக்ஷீ!! தாயே!!" உனக்கா சாதம் ஊட்டினேன். "தாயே!! பவானீ!! லலிதே!! தனேச்வரீ!! திரிமூர்த்திகளுமே தர்சிக்க முடியாத ராஜராஜேச்வரியான உனக்கா நான் என் கையால அன்னம் ஊட்டினேன்!! அம்மா!! மஹாபாக்யம் தாயே!! மஹாபாக்யம்!!"


  அச்சுதர் அடைந்த பாக்யம் லோகத்தில் யாருக்காது கிடைக்குமா!! ஸகல ஸௌபாக்யமும் அடைந்து, தேவீ பக்தர்களுக்கு நித்யமும் அன்னமிட்டுப் பின் வாழ்நாளிறுதியில் ஶ்ரீலலிதேச்வரீயான காமாக்ஷியின் திருவடிளில் கலந்தார் அச்சுதர்.


  ஸதா காமாக்ஷியையே சரணமடைவாம்!!


  ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


  ஶ்ரீமாத்ரே நம:
  லலிதாம்பிகாயை நம:


  -- ஶ்ரீராமராகவன்
Working...
X