A Devotees experience

Dr. T.K.Subramanian is one of our readers and he has shared three precious experience

1985ம் ஆண்டு மதுரையில் மாநகரபஸ்ஸின் கீழ் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய நான் மீனாக்ஷிஅம்மன் கருணையால் பிழைத்து,கால்களும்,நடையும் இழக்காமல் படுத்திருந்த காலம்அது. அன்பால் உறவினரும், நண்பர்களும் பரிஹாரம், பூஜை, ஹோமங்கள் என்று என் நலனுக்காக நிறைய சொன்னார்கள்.

குழப்பத்தில் இருந்த எனக்கு மஹாபெரியவாளைக்கேட்கவேண்டும் என்ற ஆவல் வந்தது. அதுவரை அவரை நெருங்கியதில்லை. ஆனால் சாஸ்த்ர ஸம்ப்ரதாய அனுபவம் இல்லா எனக்கு “தெய்வத்தின் குரல்”தான் வேதம்,புராணம், இதிஹாசம் என் மனைவிக்கு மந்த்ரதீக்ஷைகுரு மூர்த்திசுவாமிகள் என்ற சென்னை பெரியவா பக்தர்.

அடிக்கடி காஞ்சிமடம் செல்பவர். அவருக்கு கடிதம் எழுதி எனக்காக பெரியவாளை மூன்று சிறுகேள்விகளை சமர்ப்பிக்கச்சொன்னோம்.


1.ஏன் இப்படி நிகழ்ந்தது? 2.என்ன பரிஹாரம்? 3.நான் தினம் என்ன பூஜை செய்யவேண்டும்?


அவர் பதிலில், இன்னும் ஒரு வாரத்தில் காஞ்சிபோய் பெரியவாளை கேட்பதாக எழுதினார்.ஆனால் அவர் பெரியவாளை தரிசித்தபோது கடிதத்தை கொண்டுபோகவில்லை,என் கேள்விகளும் நினைவிலில்லை (இது அவரே எங்களிடம் சொல்லும்போது ஒத்துக்கொண்டார்!) ஆனால் அவர் வணங்கி உட்கார்ந்த உடனே பெரியவா அவரை கேட்டது: “உன் சிஷ்யை குடும்பத்திலே ஒரு அசம்பாவிதம் நடந்துதே, நீ ஏன் அதைப்பத்தி எங்கிட்ட சொல்லலே?” தடுமாறி ஏதோ சமாதானம் சொல்ல முயர்ச்சித்தவருக்கு மிகசுருக்கமாக என் 3 கேள்விக்கும் அதே வரிசையில் பெரியவா பதில் அனுக்ரஹித்தாராம்


1.அது பூர்வஜன்மகர்மபலன் 2.பட்டதே போதும் பரிஹாரம் 3.[அவரை அம்பாள்தான் காப்பாத்தினா ஆத்மார்த்தபக்திக்கு] அவருக்கு என்ன தோண்றதோ பண்ணட்டும். தொடர்ந்தது அருளாசி: “இனி ஒண்ணும் இதனாலே கஷ்டம் இருக்காது” ஏதாவது கோவில்,ஜப மந்திரம்,பூஜை என்று உபதேசம் எதிர்நோக்கி இருந்த முட்டாள் எனக்கு குறைதான்!


{நான் பிழைத்ததும்,நடப்பதும் என் மருத்துவர்களே அதிசயப்பட்டாலும் பிறகு அறிவும்,பக்தியும் பெரியவா தரிசனங்களால் வந்தபின்தான் புரிந்தது:.. எனக்கு என்ன ’தோண்றதோ’ அது அவரை நினைத்தால் அவரால் வரும் என்ற சிற்றறிவு!


பெரியவா த்ரிகால ஞானம் பார்க்காத கடிதத்துக்கு பதிலுக்கு மேலும் தொடர்ந்தது:

“அவருக்கு இப்போ கேதுதசை,அப்போ இதுமாதிரி பாதிப்பு இருக்கும்.எனக்கே கேது தசையிலே பாதிப்பு இல்லையா?” அதுவரை தான் பார்க்காத கடிதத்தில் இருந்ததையும்

என் ஜாதகத்தையும் அவரறியாததில்லை..ஆனால்நினைத்தவர்களுக்கும் இவ்வளவு அனுக்ரஹமா! ..குருகருணை தெய்வத்துக்கு மேல்!


சில நாட்களுக்கு பிறகு குணமடைந்து வருகையில் பெரியவா குருகீதை, பாதுகாசரணம் என்ற இரு துதிப்பாடல்களை அதே மூர்த்திசுவாமிகள் மூல்ம் சமர்ப்பித்தேன்.பெரியவா ஆசியும் “பேஷ்” சொல்லோடு கிடைத்தது கேட்டேன். பிறகு பல ஆண்டுகள் சென்னைவாசத்தில் பலமுறை தரிசனபாக்யம் கிடைத்தது.


நெருங்கிய தொடர்பபில்லை..பார்க்கும்போது பேசமுடிவதில்லை!


சஷ்டிஅப்தபூர்த்திக்கு நான் வைதீககார்யங்கள் எதுவும் செய்துகொள்ளவில்லை. காஞ்சிக்கு நான் மனைவியுடன் சென்று கோவில்ககளுக்கு பின் மடத்தில் பெரியவா ஆசியை நாடிவந்தோம். உள்ளூர பயம்…வேதரக்ஷகர்.சனாதனதர்ம காவலர் என்ன கேட்பாரோ, என்ன சொல்வது என்று. நான் சொன்னதை சேவையாளர் சொன்னார் பெரியவாளிடம்: ”பெரியவா அனுக்ரஹம் இவாளுக்கு பரிபூர்ணமா இருக்காம். டாக்டரோட அறுபதுக்கு உங்ககிட்டே ஆசீர்வாததுக்கு வந்திருக்கா”

நடுங்கி நின்ற சிலவினாடிகளுக்குப்பின் பெரியவா கேள்வி:”அறுவது ஆரம்பமா, முடிஞ்சுதா?”[அவருக்கு தெரியாதா! எப்போது செய்வது என்று எனக்கு தெரிவிக்க!
60 முடிந்தது என்று நான் சொன்னேன்.

ஒரு மாம்பழத்தை எடுத்து அதன்மேல் மல்லிகைபூ செண்டை வைத்து இரண்டையும வலக்கைவிரல்களடியில் வைத்தார். சிறிது நேரம் கண்மூடி தியானம்..அவரையே பார்த்துநிற்க எங்கள் பாக்கியம்.


கணதிறந்து பழத்தைபூவோடு என்பக்கம் நதர்த்தினார்.வலதுகரம் உயர்த்தி ஆசிகள். நமஸ்கரித்து மனநிறைவுடன் விடைபெற்றோம். மறைமூர்த்தி ஆசிக்குபின் குறைஏது


பூவோடு மனைவி போக, ஆசிநினைவுடன் தொடர்கிறது என் பயணம்.பூத உடலை அதிஷ்டானத்தில் அடக்கி பரப்ரம்மமாய் வியாபித்து காக்கிறார் பெரியவா!