Announcement

Collapse
No announcement yet.

காவியத்தை ரசிப்பது எப்படி?

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • காவியத்தை ரசிப்பது எப்படி?

  காவியத்தை ரசிப்பது எப்படி?

  வடமொழி இலக்கியங்களில் முக்கியமாக இரு கோட்பாடுகள் பேசப் படுகின்றன. ஒன்று ரசம் மற்றது த்வநி. ஆதியில் எழுந்த காவியங்கள் ரசத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தன. ரசக் கோட்பாடை முதன் முதலில் முன்னிறுத்தியவர் என்று ஆதிகவியான வால்மீகியைக் கூறுவர். இவ்வாறு ரசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப் பட்ட காவியங்கள் கற்பனையும், உணர்ச்சி பெருக்குடன் அமைந்ததாகவும் இருக்கும். இதிலிருந்து பரிணாமம் அடைந்து வெறும் உணர்ச்சிகளைச் முன்வைப்பதோடு நின்று விடாமல் அதைத் தாண்டிச் செல்லுமாறு ஏற்பட்ட முறையே த்வநிக் கோட்பாடு ஆகும். வால்மீகியின் ராமாயணத்தில் கூட த்வநிக் கோட்பாட்டை உணரமுடியும் என்று பெரியோர் கூறுவர்.
  காவியரசனைக்கு த்வநி என்பது அவசியம், முக்கியம். த்வநி என்றால் என்ன?
  பொதுவாகப் பேசும் போது, குரலின் ஏற்ற இறக்கங்கள் சொல்கிற சொல்லுக்கு வெவ்வேறு விதமான பொருளைக் கொடுத்து விடும். உதாரணமாக உடம்பு எப்படி இருக்கிறது என்பதை கேட்கிற விதத்தில் நலமாக இருக்கிறீர்களா என்றோ, அடி உதை வேண்டுமா என்று மிரட்டுவதாகவோ மாறும். நீங்க எங்கள் வீட்டில் சாப்பிடமாட்டீர்கள் என்ற வாக்கியத்தில் எந்த வார்த்தையை அழுத்துகிறோமோ அதற்கு தகுந்தவாறு வித விதமாக அர்த்தம் வரும். எழுத்திலும் இவ்வாறு ஆவது உண்டு. ஒரு படைப்பில் மேம்போக்காக படிக்கும் போது அதில் பிரயோகிக்கப் படும் பதங்கள் தரும் சுவை ஒன்று. அந்த பதங்களின் அர்த்தத்தைக் காட்டிலும் தொனிக்கிற உட்பொருள் தரும் சுவையே வேறு. அந்த உட்பொருளே த்வனி (தொனி) என்று அழைக்கப் படுகிறது. காவியச் சுவை என்பது த்வநியாலேயே மிகுதியாகப் பெறப்படுகிறது.
  ஒரு கவிதையை (ஸ்லோகத்தை) புரிந்து கொள்ள சொற்களை கொண்டு, கூட்டி அமைத்துக் கொள்வது வழக்கம். இதற்கு அந்வயம் என்று பெயர். இவ்வாறு அந்வயம் செய்வதில் இரண்டு முறை உண்டு. தண்டாந்வயம், கண்டாந்வயம் என்று இரண்டு முறைகள் உண்டு. தண்டாந்வயம் என்பது ஒரு கோலை நீட்டியது போல சொற்களை அதன் வரிசையிலேயே படித்து அர்த்தம் சொல்வது. கண்டாந்வயம் என்பது சொற்களை வரிசை மாற்றி வெவ்வேறு இடத்தில் பொருத்தி பொருள் சொல்லும் முறை.
  இவ்வாறு அந்வயம் செய்யும் போது பதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து தெளிவான பொருளை அளிப்பதோடு நின்று விடுகின்றன. ஆனால் அவ்வாறு வெளியிடப்பட்ட கருத்து வேறொரு கருத்தை தெரிவிக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்து விட்டால், அவ்வாறு வெளிப்பட்ட கருத்தையே த்வநி என்கிறோம். இதுவே வ்யங்க்யம் என்றும் கூறுவர். உதாரணமாக வ்யங்க்யார்த்த பிரதானமானது ராமாயணம் என்று கூறுவார். அதாவது ராமாயணம் ஆழ்ந்த உட்பொருளைக் கொண்டது. இவ்வாறு விளங்கும் த்வநியே ஒரு காவியத்தின் ஜீவநாடி ஆகும்.
  ஒரு காவியத்தின் உட்பொருளான த்வநி என்பது அந்த காவியத்தில் உள்ள ஒரு சொல்லின் பிரயோகத்திலிருந்து வெளிப்படலாம். அல்லது காவியத்தில் காணப்படும் ஒரு கருத்திலும் வெளிப்படலாம்.
  இலக்கண ஆசிரியர்கள் த்வநியை மூன்று விதமாக பிரித்துள்ளனர். கோபம், காதல் முதலிய நவரசங்களாக வெளிப்படுவது ரசத்வநி என்றும், உவமை போன்ற அணிகளால் ஏற்படுவது அலங்காரத்வநி என்றும், காவியத்தில் ஒரு கட்டமாக நிகழும் சம்பவங்களில் வெளிப்படுவது வஸ்துத்வநி என்றும் அழைக்கப் படுகிறது. இதிலும் ரசத்வநியே சிறந்ததாக கூறப்படுகிறது. ஒரு காவியம் சிறந்த காவியமாக கருத ரசத்வநி நிறைந்திருப்பது ஒரு முக்கிய தகுதியாகக் கருதப் படுகிறது. இன்னொன்றும் கவனிக்க வேண்டும், ரசம் என்பது நாட்டியத்துக்கு மட்டும் அல்லாமல் கவிதைகளிலும் வெளிப்படுவதை வடமொழி நூலார் உணர்ந்துள்ளனர்; அதற்கு இலக்கணம் வகுத்துள்ளனர் என்பது சிறப்பு.
  சில உதாரணங்களைப் பார்ப்போம்,
  चञ्चद्भुज भ्रमित चण्डगदाभिघात सञ्चूर्णितोरु युगलस्य सुयोधनस्य ।
  स्त्यानावनद्ध घनशोणित शोणपाणिः उत्तंसयिष्यति कचांस्तव देवि भीमः ॥
  சஞ்சத்புஜ ப்ரமித சண்டதாபிகாத ஸஞ்சூர்ணிதோரு யுகலஸ்ய ஸுயோதனஸ்ய |
  ஸ்த்யானாவனத்னஶோணித ஶோணபாணி​: உத்தம்ʼஸயிஷ்யதி கசாம்ʼஸ்தவ தேவி பீம​: ||
  வேணி சம்ஹாரம் நாடகத்தில் ஒரு கட்டத்தில் பீமன் திரௌபதியிடம் சபதம் செய்கிறான். இந்த ஸ்லோகத்தின் நேரான அர்த்தம், விரைவில் இரு கைகளாலும் சுழற்றப்படும் கதாயுதத்தின் தாக்குதலால் நொறுங்கிய இரு தொடைகளும் கொண்ட துரியோதனனுடைய கொழுப்புடன் சேர்ந்த குருதியால் சிவந்த கைகளால் தேவீ, இந்த பீமன் உன் அவிழ்ந்து நிற்கும் கூந்தலுக்கு அணி சூட்டுவான்.
  இதில் கவி சில பதங்களை அர்த்த கனத்துடன் பிரயோகித்துள்ளார். முதலில் இந்த கவிதையை படித்தாலே கோபம் தெறிப்பது போன்ற உணர்வெழுச்சி ஏற்படும். ஸ்த்யான என்ற பதத்தில் காய்ந்த முடி போடாமல் இருப்பதால் பறந்த கூந்தல் என்று சொல்லும் போது திரௌபதியின் கோபம் பலநாள் ஆகியும் அடங்காமல் இருப்பது என்று குறிப்பிடுகிறார். துரியோதனின் குருதியில் நனைத்தபின்னே தான் முடிவேன் என்று அவள் இட்ட சபதத்தை நினைவு கூறுகிறார். தேவீ என்று பீம சேனன் அழைப்பதிலேயே, அவள் பெருமையும் அவள் அடைந்த இழிவுகளும் தொனிக்கிறது.
  மேற்கண்ட சுலோகத்தில் சொற்கள் சற்று நீண்ட தொடராக அமைந்து ரௌத்திர ரசத்தை வெளிப்படுத்தி அழகூட்டுகின்றன. சிறு சிறு வார்த்தைகளாலும் இதே போன்ற உணர்வெழுச்சியை தெரிவிக்க முடியும் என்று இதே வேணி சம்ஹார நாடகத்தில் இன்னொரு பகுதியில் கவி காண்பிக்கிறார் அஸ்வத்தாமன் சொல்லும் வார்த்தைகள் இது:
  यो यः शस्त्रं बिभर्ति स्वभुजगुरुमदः पाण्डवीनां चमूनां
  यो यः पाञ्चालगोत्रे शिशुरधिकवया गर्भशय्यां गतो वा |
  यो यस्तत्कर्मसाक्षी चरति मयि रणे यश्च यश्च प्रतीपः
  क्रोधान्धस्तस्य तस्य स्वयमपि जगतामन्तकस्यान्तकोऽहं ॥
  யோ ய​: ஶஸ்த்ரம்ʼ பிர்தி ஸ்வபுஜகுருமத: பாண்டவீனாம்ʼ சமூனாம்ʼ
  யோ ய​: பாஞ்சாலகோத்ரே ஶிஶுரதிகவயா கர்பஶய்யாம்ʼ தோ வா |
  யோ யஸ்தத்கர்மஸாக்ஷீ சரதி மயி ரணே யஶ்ச யஶ்ச ப்ரதீப​:
  க்ரோதாந்தஸ்தஸ்ய தஸ்ய ஸ்வயமபி ஜகதாமந்தகஸ்யாந்தகோ(அ)ஹம்ʼ ||
  பாண்டவர் படையில் யார் யார் தன் தோள்வலிமை மிகுந்ததென்று திமிர் கொண்டு வருவானோ, அந்த பாஞ்சால வம்சத்தில் பிறந்த குழந்தையோ, முதியவனோ, ஏன் கருவில் கிடப்பவனோ, யார் யார் அந்த செயலுக்கு சாட்சியாக இருந்தானோ, நான் போரில் இறங்கி நடக்கும் போது யார் யார் என்னை எதிர்ப்பவனோ, அவனவனுக்கும் ஏன் உலகங்களுக்கு யமனானவனுக்கும், சினத்தால் குருடாகிவிட்ட நான் எமன் ஆவேன்
  இந்த ஸ்லோகத்தில் ஒவ்வொரு சொல்லிலும் சினத்தின் மிகுதி புலப்படும். அந்த செயல் என்று இங்கே குறிப்பிடுவது அஸ்வத்தாமன் தன் தந்தையை வஞ்சகமாக கொன்று அவருடைய தலையை காலால் தீண்டிய அந்த கொடுஞ்செயலை சொல்லால் கூறவும் முடியாமல் படும் வேதனை, சீற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மேலும் இதில் முதல் வரியில் அர்ச்சுனனையும் சாட்சியாக நின்றவர் என்று கர்ணனையும் சூசகமாக குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது.
  த்வநியை புரிந்து கொள்ள முடியாதவரை காவியத்தை முற்றாக ரசிக்க முடியாது. இதை புரிந்து கொள்ளும் நிலையிலேயே படைப்பாளியும், வாசகனும் மனதளவில் ஒன்று படுகிறார்கள். இந்நிலையில் காவிய இன்பத்தை உணர்ந்த ஒரு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. இதுவே காவியத்தின் பயன். வடமொழியில் த்வனி குறித்து பல நூல்கள் இயற்றப் பட்டுள்ளன அவற்றில் முக்கியமானது ஆனந்தவர்த்தனர் இயற்றிய த்வந்யாலோகம் என்கிற நூல். நூற்றி இருபது காரிகைகளுடன் உள்ள இந்நூல் காவியத்தில் த்வநி குறித்து விரிவாக அலசுகிறது. இந்நூல் அண்மையில் தமிழிலும் தொனிவிளக்கு என்ற பெயரில் சந்தியா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது.
Working...
X