*08/02/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி மேலும் தொடர்கிறார்.*


*அதாவது கர்ப்பாதானம் என்பது என்ன அதை எப்பொழுது எந்த நேரத்தில் எந்த தினத்தில் எந்த நட்சத்திரத்தில் செய்ய வேண்டும் என்பதைப் பார்த்தோம். வேதம் அந்த மந்திரங்களை கொடுக்கின்றது, ஸ்மிருதிகள் என்று சொல்லக்கூடிய தர்ம சாஸ்திரம், கர்ப்பாதானம் செய்ய வேண்டிய காலத்தையும் இடத்தையும் தெரிவிக்கின்றது. புராணங்கள் அதற்கான சரித்திரத்தை காண்பிக்கின்றன.*


*இந்த மூன்றையும் வைத்து நான் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வருகிறோம் அதில் இந்த கர்ப்பாதானம் என்பதை, எந்த இடத்தில் செய்யப்படவேண்டும் எப்பொழுது எங்கு செய்யக்கூடாது, என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*


*_இது விஷயமாக சொல்லும்பொழுது எப்போதெல்லாம் எங்கெல்லாம் கர்ப்பாதானம் கூடாது என்று சொல்கிறது. தன் சொந்த வீட்டில் தான் கர்ப்பாதானம் ஆனது செய்யப்படவேண்டும். நாம் எந்த வீட்டில் வாழ்கின்றோமோ, அந்த வீட்டில்தான் அது செய்யப்பட வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இன்னொருவர் வீட்டில் இடத்தில் போய் கர்ப்பாதானம் செய்யக்கூடாது._*


*ஏனென்றால் நாம் எந்த இடத்தில் அதை செய்கின்றோமோ, அதற்கு தகுந்தாற் போல் தான் நம்முடைய சந்ததிகள் அடுத்த தலைமுறை நமக்கு கிடைக்கும். வெளியிடங்களில் அதாவது நாம் கல்யாணம் செய்யக்கூடிய இடத்திலோ அல்லது மண்டபங்களிலும், நாம் கர்ப்பாதானம் செய்தால், அப்படி பிறக்கக்கூடிய குழந்தைகள் நம் அருகில் இருக்கமாட்டார்கள். எங்கேயோ தள்ளி போய் விடுவார்கள் நமக்கு உபயோகப்பட மாட்டார்கள். அதனால் சொந்த இடத்தில் அல்லது நாம் வசிக்கக்கூடிய இடத்தில்தான் கர்ப்பாதானம் செய்யப்படவேண்டும்._*


*_வேறு எங்கெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லும் பொழுது, நிறைய பெண்கள் கூடி இருக்கக்கூடிய இடங்களில் கர்ப்பாதானம் செய்யக்கூடாது. ஸ்ரார்த்த தினங்களில் (தாய்/தந்தை) கர்ப்பாதானம் செய்யக்கூடாது. பகலில் கூடாது. அதாவது தர்ப்பண/விரத (ஏகாதசி சிரவணம் கிருத்திகை சஷ்டி பிரதோஷம்) தினங்களிலும் கூடாது. தீக்ஷ்சையாக உள்ளவன் செய்யக்கூடாது. ஒரு நியமத்தில் இருக்கிறவன். ஒரு கட்டுப் பாடோடு ஒரு விரதத்தை கடைபிடித்து கொண்டிருக்கிறார் என்றால் அப்போது கூடாது. இப்படி தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது._*


*இந்நாட்களில் இவைகள் எல்லாம் மாறிப் போய்விட்டன எங்கு நாம் கல்யாணம் செய்கின்றோமோ, அது மண்டபமாக இருந்தாலும் மடமாக இருந்தாலும் கர்பா தானத்தை சேர்த்து அங்கேயே முடித்துக் கொண்டு வந்து விடுகிறோம். ஏனென்றால் உலகத்தில் அதுதான் வழக்கமாக இருக்கிறது என்று செய்து கொண்டு வருகிறோம். மேலும் இதைத் தொடர்ந்து ஹனிமூன் தேன்நிலவு என்று ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறோம்.*


*இது மேற்கத்திய கலாச்சாரம். அதை நாம் வழக்கத்தில் எடுத்துக் கொண்டு விட்டோம். வெள்ளைக்காரன் ஆட்சி செய்து இங்கிருந்து போகும் பொழுது நிறைய நல்ல விஷயங்களையும் கொடுத்துவிட்டு போனான். அதேபோல் சில கெட்ட விஷயங்களையும் நமக்கு பழக்கப்படுத்தி விட்டதினால், நம்மால் அதை தவிர்க்க முடியவில்லை. அதில் இந்த தேன் நிலவும் ஒன்று.*


*குழந்தைகள் கல்யாணமான பிறகு எங்காவது காடுகளுக்கு மலைகளுக்கு கடற்கரைக்கு எங்காவது அனுப்புவது என்று வழக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம். அது நம்முடைய தேச கலாச்சார வழக்கத்தில் கிடையாது. அது மேற்கத்திய கலாச்சாரம் அது அவர்களுக்குத் தேவைப்பட்டது. ஏனென்றால் அவர்களுக்கு ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) என்பது எப்போதுமே அதிகம். எல்லா விஷயங்களிலுமே அவர்களுக்கு நிம்மதி என்பது தேடி அலைய வேண்டும். நமக்கு அப்படி இல்லை. அந்தக் கலாச்சாரத்தை நாம் எடுத்துக் கொண்டால் தவிர்க்கமுடியவில்லை நம் குழந்தைகளுக்கு அதை சொல்லி புரிய வைக்கவும் முடியவில்லை.*


*இப்படி ஒரு சிக்கலில் நாம் தவிக்கிறோம். அதேபோல் இன்னும் ஒன்றும் நம்முடைய வழக்கத்தில் வந்துவிட்டது. கல்யாணம் ஆன பிறகு அந்த தம்பதிகள் எப்போது நினைக்கிறார்களோ அப்போது குழந்தையை பெற்றுக் கொள்வது என்றொரு வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது உடனே வேண்டாம். ரெண்டு வருஷம் மூணு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம் என்று தம்பதிகள் தீர்மானித்து வைத்துக் கொண்டுள்ளனர்.*


*_தர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது, குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்களோ

அப்போதுதான் கர்ப்பாதானம் செய்ய வேண்டும். ஏனென்றால் கர்ப்பாதானம் மந்திரங்கள் எல்லாம் நாம் சொல்லி, இப்பொழுது இவர்களுக்கு உற்பத்தி ஆகக்கூடிய குழந்தையானது, ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அந்த மந்திரமானது இப்படி பிரார்த்தனை செய்கிறது. எந்த ஒரு அங்கஹீனம்

இல்லாமல் அந்த குழந்தை உற்பத்தி ஆக வேண்டும். எந்த குறைபாடும் அந்த குழந்தைக்கு இருக்கக் கூடாது. அனைவரிடத்திலும் சகஜமாக அந்த குழந்தை பழக வேண்டும். நம்முடைய குல வழக்கப்படி அந்த குழந்தை வாழும் படியாக இருக்க வேண்டும். அதற்காக இப்படி ஒரு நல்ல நாளைப் பார்த்து நல்ல இடத்தை பார்த்து பெரியோர்கள் முன்னிலையில் இந்த கர்ப்ப காலத்தை செய்கிறேன் என்றுமந்திரங்கள் எல்லாம் சொல்லி தான் அந்த கர்ப்பா தானத்தை ஆரம்பிக்கிறார்.அப்படியே நடக்க வேண்டும் இல்லாவிடில் இந்த மந்திரமானது அதற்கான பலனை கொடுக்காமல் போய்விடும்._*



*அதனால் எப்போது இவர்கள் குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்கிறார்களோ அப்போதுதான் இந்த கர்ப்பாதானம் செய்யவேண்டும். அதுவரையில் அது சம்பந்தமான பேச்சே இருக்கக்கூடாது. இதை நம்முடைய குழந்தைகளுக்கு நாம் சொல்ல வேண்டும். அப்போது உடனே குழந்தை பெற்றுக்கொள்ள அவர்கள் தயாராகி விடுவார்கள். ஒரு வருடம் ஆகட்டும் என்று சொல்லமாட்டார்கள். இது எல்லாம் விளையாட்டல்ல நம் கையில் கிடையாது. நம்முடைய குழந்தைகளுக்கு இதை நாம் புரிய வைக்க வேண்டும். அந்த மந்திரங்கள் எல்லாம் அதர்வன மந்திரம் என்று பெயர்.

ஒரு முறை சொன்னால் போதும் ஆயுட்காலம் முடிய பலனைக் கொடுக்கக் கூடியது என்பதினால்தான், ஒரு தடவைதான் கர்ப்பாதானம் என்பது. ஒவ்வொரு குழந்தைக்கும் கர்ப்பாதானம் என்பது கிடையாது. முதல் குழந்தைக்கு செய்த அந்த மந்திரமே அடுத்தடுத்து பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கும் அத்தனையும் அந்த மந்திரம் அனுகிரகம் செய்கின்றது. அப்படி அற்புதமாக அந்த மந்திரங்கள் எல்லாம் பேசுகிறது. அற்புதமான ஒரு அனுஷ்டானம் என்பதை நம்முடைய குழந்தைகளுக்கு நாம் புரிய வைக்க வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*