*27/03/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நம்முடைய தர்மங்களை பார்த்துக்கொண்டு வருகின்ற வரிசையில் சீமந்தோநயனம் பற்றி மேலும் தொடர்கிறார்.*
*அதில் சீமந்தம் செய்யக்கூடிய முகூர்த்தத்தில் உள்ள மந்திரங்கள் எந்த தேவதையை பார்த்து என்ன விதமாக பிரார்த்தனை செய்கிறது என்பதைப் பார்க்க இருக்கிறோம்.*
*இதில் மூன்றாவது மந்திரம், ஹே இராகே, இராக்கா தேவி உன்னுடைய ரூபம் எண்ணம் இவையெல்லாம் எப்படி இருக்கிறது என்றால், இந்தப் பெண்ணும் அவள் பிரசவிக்க கூடிய குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு உள்ளவள் நீ. மேலும் அதற்கான ரூபத்தோடு நீ இருக்கிறாய்.*
*அனுபவ ஸ்தீரி போல் உள்ளது உன் ரூபம். தம்பதிகளான எங்கள் இருவருக்கும் மன ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணிற்கும் பிரசவம் என்பது மறு பிறவி. மற்றுமொரு ஜென்மா போல்.*
*இன்னும் ஒரு ஜீவனை இந்த உலகத்திற்கு அந்தப் பெண்ணானவள் கொடுக்கிறாள். இந்தப் பிரசவம் எந்த சிக்கலும் இல்லாமல் அமைய வேண்டும். உன்னால் அதை செய்ய முடியும்.*
*நமக்கு ஒரு தலைவலி வந்தது என்றால் உடனே பயம் வரும் அது எதனால் வந்தது, எவ்வளவு நாள் இருக்கும், என்ன பாதிப்பை இந்த தலைவலி காண்பிக்கின்றது, இது எல்லாம் தெரியவில்லை என்றால், மிகவும் பயமாக இருக்கும். எதனால் இப்படி ஆகிறது என்று மனசு பரபரப்பாக இருக்கும்.*
*அப்பொழுது நாம் வழக்கமாக பார்க்கக்கூடிய மருத்துவரை பார்த்தவுடன் ஓரளவு சரியாய் போனது போல் நம்முடைய மனசு தோன்றும். அந்த மருத்துவரை பார்க்கின்ற வரையிலும் நமக்கு மிகவும் கவலையாக இருக்கும். அவர் பார்த்த உடன் நமக்கு மிகுந்த நிம்மதியைக் கொடுக்கும்.*
*அதே போல் தான், பிரசவவலி எடுத்தவுடன், ஒரே பரபரப்பாக இருக்கும். இந்த பிரசவம் சுமூகமாக அமைய வேண்டுமே என்று ஒரு பரபரப்பு இருக்கும். வைராக்கியம் கூட தோன்றும். அந்த பிரசவம் பார்க்க கூடிய பெண் கண்ணில் பட்ட உடன், மிகுந்த நிம்மதியைக் கொடுக்கும். இந்த அம்மா வந்து விட்டாள் பிரசவம் ஆனது போல் தான் என்ற ஒரு நிம்மதியை கொடுக்கும்*
*எப்படி ஒரு மருத்துவரை பார்த்தவுடன் அந்த வியாதியானது குணமடைந்தது போல் நமக்குத் தோன்றுகிறதோ, அந்த பிரசவம் பார்க்க கூடிய பெண்ணை பார்த்தவுடன், ஒரு நிம்மதி நமக்கு கொடுக்கின்றதோ, அதுபோல் இந்த பிரசவ காலத்தில், எங்களுக்கு நிம்மதியை கொடுக்கக்கூடியவர் இராகா தேவியான நீதான். உன்னால் தான் கொடுக்க முடியும்.*
*அதற்காக பிரார்த்தனை செய்யக்கூடிய தான எங்களுக்கு உன்னால் நிம்மதியை கொடுக்க முடியும். நாங்களும் அந்த எண்ணத்தோடு கூட தான் உன்னை பிரார்த்தனை செய்கிறோம். ஐஸ்வர்யத்தை உன்னால் தான் கொடுக்க முடியும். ஐஸ்வர்யங்கள் என்றால் என்ன நகைகள் வீடு பணம் சொத்து இதுதான் ஐஸ்வர்யா மா என்றால், இவர்கள் மட்டுமல்ல முதல் ஐஸ்வர்யம் எது நமக்கு என்றால் நம்முடைய வாரிசு தான். நம்முடைய சந்ததிகள் தான் நமக்கு முதல் ஐஸ்வர்யம்.*
*அந்த முதலாவதான ஐஸ்வர்யத்தை நமக்கு அனுக்கிரகம் செய்யக் கூடியவள் இராகா தேவியான நீ தான். உன்னால் அனுகிரகம் செய்யமுடியும் எங்களுக்கு. அந்த எண்ணத்தோடு கூட, நல்ல மனது எங்கள் இடத்தில் வைத்து இந்த பிரசவ காலத்தில், எங்களுக்கு இந்த பிரசவத்தை நீ பார்த்துக் கொடுக்க வேண்டும்.*
*ஹே சுபகே, கல்யாண ரூபம் உனக்கு. ஒரு வயதான சுமங்கலி அம்மாவின் ரூபம் உனக்கு. அப்படி அனுபவ வயதான அம்மாவின் ரூபமாக உள்ள நீ, அந்த பிரசவ காலத்தில் வந்து நீ வாழையடி வாழையாக அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் எங்களுக்கு வளர்ந்து கொண்டே வர வேண்டும்.*
*குழந்தைகளும் வாழையடி வாழையாக வளர வேண்டும், வீடு வாசல்களும் எங்களிடம் நிரந்தரமாக வாழையடி வாழையாக இருக்க வேண்டும், மன நிம்மதியும் எங்களுக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். இவ்வளவு அனு கிரகங்களையும் நீ செய்ய வேண்டும், ஏனென்றால் உன்னால் முடியும்.*
*நீ இந்த பிரசவ காலத்தில் வந்து, இந்த பிரசவத்தை சுகப்பிரசவமாக எங்களுக்கு நீ அமைத்துக் கொடுக்க வேண்டும். இப்படியாக இந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*
*இப்படி இந்த மூன்று மந்திரங்களைச் சொல்லி, இந்த சீமந்த முகூர்த்தத்தை செய்ய வேண்டும். அப்படி செய்த பிறகு, கையில் வைத்துக்கொண்டு இருப்பதான, முள்ளம்பன்றி முள், பேயத்தி என்கின்ற கிளை, தர்ப்பை இவை எல்லாவற்றையும், அந்தப் பெண்ணிற்கு பின்புறமாக போட வேண்டும். நாபியிலிருந்து ஆரம்பித்து அந்த ரேகையை மேல் நோக்கி கொண்டு வந்து, தலையில் எடுத்து இருக்கின்ற அந்த வகிடு வழியாக கொண்டு வந்து, பின்புறம் போடவேண்டும்.*
*அந்த தலையில் உள்ள வகிடு/கர்ப்பத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் பெண்கள் எல்லோரும் தலையில் வகிடு எடுத்து வார வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.*
*நம்முடைய பெண் குழந்தைகளுக்கு மூன்றாவது வயதில் இருந்தே தலையில் நேர் வகிடு எடுத்து வார்வதிற்க்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு ஓரமாக அல்லது வகிடு எடுக்காமல் தலைவாரிக் கொண்டால், கர்ப்பத்தில் தோஷங்கள் ஏற்படும். வகிட்டிலிருந்து ஆரம்பித்து கர்ப்பம் வரை சில நரம்புகள் தொடர்புகளை ஏற்படுத்துகின்றன.*
*அந்த வகிடில் சூரிய ஒளி நேரடியாக விழ வேண்டும். அதனால்தான் வகிடு எடுத்து வார வேண்டும் என்று நம் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். வகிடு எடுத்து தலை வாரி கொள்ளாமல் நாம் இருப்போமேயானால், கர்ப்பத்தில் தோஷங்கள் ஏற்படும். அதாவது கர்ப்பத்தில் குழந்தை தங்காது. கர்ப்பத்தில் கட்டி உருவாகும். கேன்சர் புற்று நோய் போன்ற வியாதிகள் வந்து அந்த கர்ப்பப்பை எடுக்க கூடிய நிலைகள் வரும்.*
*கர்ப்பப்பை ஒரு பெண்ணிற்கு எடுத்து விட்டால் அந்த பெண்ணிற்கு பலம் உடம்பில் போய்விடும். அதனால் இதையெல்லாம் நம் பெண் குழந்தைகளுக்கு சொல்லி வகிடு எடுத்து வாருவதற்க்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதனால் இந்த வகிடு கர்ப்பத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன.*
*அதனால் அந்த ரேகையை போடும்போது சிரசு வழியாக எடுத்துச் சென்று போட வேண்டும். அதன்பிறகு ஒரு மந்திரம் பிரார்த்திக்க வேண்டும். அது ஒரு முக்கியமான மந்திரம். இந்த மந்திரம் சீமந்தத்தில் மட்டும்தான் உபயோகப்பட கூடிய மந்திரம். இந்த மந்திரம் என்ன பிரார்த்தனை செய்கின்றது அதன் பலன் எதையெல்லாம் அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*