ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (436 - 451) - J.K. SIVAN


कुशला कोमलाकारा
कुरुकुल्ला कुलेश्वरी ।
कुलकुण्डालया कौल-
मार्ग-तत्पर-सेविता ॥ ९३॥


Kusala Komalakara
Kuru kulla Kuleshwari
Kula kundalaya Kaula
marga that para sevitha


குசலா கோமலாகாரா
குருகுல்லா குலேச்வரீ |
குலகுண்டாலயாகௌல
மார்க தத்பர ஸேவிதா || 93


कुमार-गणनाथाम्बा तुष्टिः
पुष्टिर् मतिर् धृतिः ।
शान्तिः स्वस्तिमती कान्तिर्
नन्दिनी विघ्ननाशिनी ॥ ९४॥


Kumara gana nadambha
Thushti Pushti Mathi Dhrithi
Santhi Swasthimathi Kanthi
Nandhini Vigna nasini


குமார கணநாதாம்பா
துஷ்டி: புஷ்டிர்மதிர் த்ருதி: |
சாந்தி: ஸ்வஸ்திமதீ காந்திர்-
நந்திநீ விக்நநாசிநீ || 94


லலிதா ஸஹஸ்ரநாமம் - (436-451) அர்த்தம்


* 436 * குசலா - ஸ்ரீ லலிதாம்பிகையின் ஞானத்துக்கு எல்லையே இல்லை. சிருஷ்டி ஸ்திதி லயம் மூன்று காரியங்களையும் அபாரமாக உள்நின்று கையாள்பவள்.


*437* கோமலாகாரா -- என்ன ஒரு மென்மையான அழகு கொஞ்சும் தெய்வீக ஸ்வரூபம் அம்பாளுக்கு என்று வியக்கிறார் ஹயக்ரீவர். .


*438* குருகுல்லா -- அம்பாள் குருகுல்லா உருவில் காணப்படுகிறாள். குருகுல்லா யார் தெரியுமா? ஸ்ரீ சக்ரத்தில் பிரஞைக்கும் அஹம்பாவத்திற்கும் இடைப்பட்ட பிரதேச அதிபதி. பாவனோபநிஷத் வாராஹியை தந்தை, குருகுல்லாவை அம்மா என்று சொல்கிறது. "Vārāhi pitṛurūpā kurukullā balidevatā mātā (वाराहि पितृरूपा कुरुकुल्ला बलिदेवता माता). நமது உடல் ஐம்புலன்கள், ரத்தம், சதை கொண்டதால் ஆசைக்குட்பட்டது. ஆன்மீக பயணத்தில் இந்த ஆசை ஒரு பெரிய தடைக் கல். அதை தாண்டி செல்வது கடினம்.


*439* குலேஸ்வரீ -- குலத்துக்கு தெய்வமானவள். அறிவது, அறிபவன், அறியப்படுவது மூன்றும் இணைந்து ஒன்றானது. த்ரிபுடி என்று சொல்லப்படுவது. அது தான் ''நான் யார்'' அறியச்செய்வது. ஆத்ம விசாரத்துக்கு அடிகோலுவது.


*440* குலகுண்டாலயா -- குண்டலினி சக்தியான அம்பாள் -- குண்டலினியாக இருப்பவள் என்று உணர்த்தும் நாமம். கிறது. மூலாதார சக்ரத்தில் குலகுண்டா என்பது ஒரு ரஹஸ்ய இடம். அதில் அம்பாள் குடி கொண்டவள். ஒரு சர்ப்பமாக மூன்றரை சுற்று சுருண்டு உறங்குவது. விழித்து மேலே நகர்வது.


* 441 *கௌல மார்க தத்பர ஸேவிதா - கௌல மாதாவை வழிபடுபவர்கள் பணியும் அம்பாள் ஸ்ரீ லலிதை. கௌல மார்க்க வழிபாடு வித்தியாசமானது. சடங்குகள் வேறுபடும். மூன்று பிரதான வழிகள் சமயா, கௌலா , மிஸ்ரா என பெயர் கொண்டவை. சமயா வேதங்கள் சொல்வதை பின்பற்றுவது. தாந்த்ரீக சடங்குகளை பின்பற்றுவது கௌலா. இந்த வழிபாடு உன்னத நிலையை எட்டாதது. முத்ரா (கை ஜாடை), மத்ஸ்யா ( மீன்), மாம்ச (இறைச்சி) மடா (ஒரு போதையான பானம் ) ,மைதுன (புணர்ச்சி) இவை சம்பந்தப்பட்டதால் உன்னதமாக கருதப்படாத வழிபாடு. மிஸ்ரா வழிபாடு அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் சேர்ந்து கலந்து கட்டி.


* 442 *குமார கணநாதாம்பா -- அம்பாளை கணேசன் எனும் விநாயகருக்கும் சுப்பிரமணியன் எனும் குமரன், முருகனுக்கும் தாயாக அடையாளம் காட்டும் நாமம். மஹா பெரியவா அடிக்கடி சொல்வது ஞாபகம் வருகிறதா : ''எந்த கடவுளை வழிபடுவது உபாசிப்பது என்று எண்ணம் கொண்டாலும் முதலில் விக்னேஸ்வரனை கையெடுத்து கும்பிட்டு துவங்கினால் அவன் ஆசியோடு எண்ணம் ஈடேறும். தடைகள் விலகும்''


* 443 * துஷ்டி: சந்துஷ்டி என்று சொல்வது நல்லவிதமாக சந்தோஷத்தை அனுபவிப்பதை . ஆகவே துஷ்டி என்றால் மகிழ்ச்சி அளிப்பவள் என்று இங்கே பொருள். அம்பாளுக்கு இப்படி ஒரு அருமையான பெயர். சந்தோஷமோ மகிழ்ச்சியோ அது இதழ் வரும் தெரியுமா. திருப்தியால் மட்டுமே. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அவள் தருபவள் நாம் பெறுபவர்கள்.


* 444 * புஷ்டி - நல்ல திடகாத்திரமான, ஆரோக்யமான தேகம் அடைவதை புஷ்டி என்போம். அம்பாள் நமக்கு அதை அளிப்பவள். மனதையும் உடலையும் நிறைக்கும் மகிழ்ச்சி அம்பாள்.


* 445 * மதிர் -- மதி என்றால் நுட்பமான அறிவு. மனதில் ஆத்மாவை உணர்வது தான் ஆத்ம ஞானம். அது அம்பாளின் உருவம். சிவ பெருமானை மதி என்று சொல்வதற்கு காரணம் அவரது வேத தியான தவ ஞானம்.


* 446 * த்ருதி: தைர்யத்தின் உருவம் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை. உறுதியானவள். உயர்ந்த குணங்களின் பிறப்பிடம். பிரபஞ்ச நாயகி.


* 447 * சாந்தி: சாந்தம் அமைதி பொறுமை வாழ்வை நிம்மதியாக வாழ உதவுவது. நீண்ட ஆயுளை தருவது. இது தான் பதினாறு கலைகளில் கடைசியானது. எதையும் முடிப்பதற்கு முன்னாள் ஓம் சாந்தி சாந்தி என்று சொல்வது கூட எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக தான். அம்பாளின் பெயர் இதனால் தான் சாந்தி. ஆத்ம சுத்திக்கு சாந்தி மிக அவசியமானது. கர்மபலன்களை எதிர்கொள்ள உதவுவது சாந்தம் .


* 448 *ஸ்வஸ்திமதீ - எப்போதும் நலமாக உள்ளவள் அம்பாள் என்று இந்த நாமம் குறிக்கிறது. ஆரவாரமற்ற அமைதி. புலனடக்கத்தால் கிடைப்பது. மூக்கு நுனியிலிருந்து பதினைந்து அங்குலம் ஸஹஸ்ராரத்தை நோக்கி நகர்ந்தால் ஆத்ம பரிசுத்தத்தை உணரலாம். ஸத்யம் உருப்பெறும்.


* 449 * காந்திர்- ஒளியின் வெளிப்பாடு அம்பாள். இந்த ஒளி தான் ஆத்ம ஜோதி. ப்ரம்ம ஞானம். இந்த ஒளியின் ஒரு பகுதிதான் சூர்ய பிரகாசம். பிரபஞ்சத்தை ஒளிமயமாக்குவது.


* 450 * நந்திநீ -- காமதேனு எல்லாருக்கும் தெரியும். அதன் கன்றுக்குட்டி தான் நந்தினி. அம்மாவை விட சக்தி மிக்க இந்த கன்றுக் குட்டி எதை வேண்டினாலும் அல்ல நினைத்தாலும் கொடுக்கும். நந்தினி என்றால் கங்கை என்றும் ஒரு பெயர். கங்கை எதையும் புனிதமாக்குவது போல் நந்தினி நமது எண்ணங்களை தூய்மையாக்குபவள்.ஆகவே தான் ஸ்ரீ லலிதாம்பிகைக்கும் இப்படி ஒரு பெயர் என்கிறார் ஹயக்ரீவர்.


*451* விக்நநாசிநீ -- எல்லா தடைகளையும் பக்தர்களுக்கு விளக்கி அருள்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை. ப்ரம்ம ஞானம் பெற நல்ல தடையற்ற பாதையை காட்டுபவள் .


சக்தி பீடம்: கோலாப்பூர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஆலயம்


இது 108 சக்திபீடங்களில் ஒன்று. மஹாராஷ்டிராவில் கோடானு கோடி பக்தர்கள் தரிசிப்பது . சக்தி உபாசகர்கள் அதிகம் செல்லும் ஒரு ஆலயம். ஆறு முக்கிய சக்தி ஸ்தலங்களில் ஒன்று. ஆசா பாசங்களிலிருந்து விடுதலை பெற உதவும் அம்பாள் ஸ்தலம். பூனாவிலிருந்து 250 கி.மீ. தூரம். பஞ்சகங்கா நதிக்கரையில் உள்ளது. நான்கு கரங்கள் கொண்ட மஹாலக்ஷ்மி வைர வைடூர்ய ஆபரணங்கள் பூண்டவள். ஷட் (ஆறு) குணங்கள் கொண்ட சக்தி ஸ்வரூபிணி. அவற்றில் முக்கியம் வளமை, செல்வம் ஆத்மஞானம்.


40 கிலோ எடை கொண்ட நவரத்ன கற்களால் உருவான அம்பாள். 300 அடி உயர கருப்பு கல்லில் ஆன விக்ரஹம் ஸ்ரீ சக்ர யந்திரம் அம்பாள் விக்ரஹத்தின் பின்புற சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கிறது. அம்பாளுக்கு மேல் ஆதிசேஷன் படமெடுத்தபடி. வலது கீழ்ப்புற கரத்தில் ஒரு புளிப்பான பழம். வலது மேற் கரத்தில் கௌமோதகி, கதாயுதம் தரையை நோக்கியபடி. இடது மேற்கரத்தில் கேடயம். இடது கீழ்க்கரத்தில் ஒரு பாத்திரம். அம்பாள் மேற்கு நோக்கி இருப்பது அதிசயம். மேற்கு பக்க ஆலய சுவரில் ஒரு சிறு ஜன்னல், அதன் வழியாக அஸ்தமன சூரியன் மஹாலக்ஷ்மியின் திவ்ய வதனத்தில் ஒளி வீசுகிறான். தினமும் அல்ல. மார்ச் செப்டெம்பர் கடைசி வாரத்தில் மூன்று நாள் மட்டும். மஹாலக்ஷ்மியை தவிர ஆலயத்தில் நவகிரகம், மகிஷாசுரமர்த்தினி, சிவன், விஷ்ணு, துளஜா பவானி, விட்டால் ருக்மா பாய் எல்லோரும் கூட இருக்கிறார்கள். பத்து பதினோராம் நூற்றாண்டு ஆலயம். சிலர் ஏழாம் எட்டாம் நூற்றாண்டு என்கிறார்கள். அம்பாள் அநேக ராஜாக்களை சாம்ராஜ்யங்களை பார்த்திருக்கிறாள். ஆதி சங்கரர் விஜயம் செய்து மஹாலக்ஷ்மியை தரிசித்திருக்கிறார். ஒரு புராணம் என்ன சொல்கிறது என்றால் பிருகு காலால் உதைத்ததற்கு தக்க தண்டனை கொடுக்காத விஷ்ணு மேல் கோபம் கொண்டு மஹாலக்ஷ்மி கோலாப்பூர் வந்தாள் தவம் இருந்தாள் . அப்புறம் தெரிகிறது விஷ்ணு திருப்பதியில் வெங்கடேசனாக உருவெடுத்து மஹாலக்ஷ்மியின் ஒரு அவதாரமான பத்மாவதியை மணம் புரிந்துகொண்டது.
ஒரு முக்கிய செய்தி. சதியின் சடலத்தை சுமந்து சிவன் ருத்ர தாண்டவம் ஆடும்போது அவளது கண்கள் விழுந்த இடம் கோலாப்பூர்.