"வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
.வாழு மாந்தர் குலதெய்வம்"
(பெரியவாளுக்குத் தொழிலாளிகளிடமிருந்த
தாக்ஷிண்யப் பிரியம்) மூன்று சம்பவங்கள்.
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மதாசரணைகள் அறியாத ஒரு வெங்காய மண்டிக்காரர்
நாலு மூட்டை அந்த மடித்தப்புச் சரக்கை (வெங்காயம்)
ஸ்ரீமடத்துக்குக் கொண்டு வந்து விட்டு,விஷயமறிந்து
வெட்கித் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்ட
போது பெரியவாள், அந்த வியாபாரியின் கையாலேயே
ஸ்ரீமடத்துப் பாட்டாளிகளுக்குச் சரக்கை விநியோகிக்கச்
செய்து அவரை உச்சி குளிரச் செய்தார்,
இங்கெல்லாம் பெரியவாளுக்குத் தொழிலாளிகளிடமிருந்த
தாக்ஷிண்யப் பிரியமும்தானே வெளியாகிறது.
அப் பாட்டாளிகளுக்குப் பொங்கல் பண்டிகை ஒரு
குதூஹல விழா.பொங்கலன்று அவர்களுக்குக் காய்கறி,
கனி வர்க்கங்கள் நிறைய கொடுப்பது மடத்து வழக்கம்.
மறுநாள் மாட்டுப் பொங்கலன்றுதான் அவர்கள் 'எசமான்'
என்றே சொல்லும் பெரியவாளிடம் அணுகி வந்து
பணிவது, மடத்தில் அளித்த புத்தாடைகளைப் புனைந்து
வந்து, தாங்களும் எசமானக்கென்று வஸ்திரம்,சால்வை,
பழங்கள்,புஷ்ப மாலைகள், வெற்றிலை பாக்கு கொண்டு
வந்து ஸமர்ப்பித்து தண்டனிடுவார்கள்.
"பால் பொங்கித்தா!" என்று பெரியவாள் கேட்க,
"பொங்கித்து எசமான்" என்று ஒவ்வொருவரும்
சொல்வார்கள்.
பெரியவாள் சொல்லி அவர் முன்னிலையிலேயே
அவர்களுக்குச் சந்தனம்,கற்கண்டு,பழம்,தாம்பூலம்
வழங்கப்படும்.
தாமும் ஒரு பெரியவர் என்று - பெரியவாள் என்கிற
பெயரெடுத்தற்குக் காரணம் தமக்காகத் தொண்டு செய்த
பெரியவர்கள்தான் என்று ஒரு முறை நன்றி நெஞ்சுடன்
கூறினார் ஸ்ரீசரணர்.அப்போது அவ்வழி சென்று
கொண்டிருந்த ஒரு பாராக்காரரைக் காட்டி,
"அந்தப் பெரியவாள்ல ஒத்தர்" என்றார்.
ஒரு பூர்ணிமை தினம்.காலைப் பொழுதிலேயே
பூர்ண சந்திரனாக தரிசனம் சாதித்துக் கொண்டிருந்தார்
நம் சந்திரசேகரேந்திரர்.
ஒரு பக்தர் சவரன் நாணயம் சமர்ப்பித்தார்.
"இதெல்லாம் எனக்கு என்னத்துக்கு?" என்றார்
பெரியவாள்.அதை ஏற்க அவர் லஜ்ஜைப்படுவது
போலவே இருந்தது.மடத்தின் ஆதிபத்தியத்தை
முற்றிலும் தமது வாரிசுக்கே ஆக்கிய பிறகும்
பொன்னும் பொருளும் தம்மிடம் சேர்வதில் அவர்
கொண்ட லஜ்ஜையாகவே அது அவருக்கு ஓர்
எழில் சேர்த்தது.
அச் சமயம் காவேரிப்பாக்கத்திலிருந்து ஒரு
நாவிதர் வந்து பணிந்தார்.
"எடுத்துக்கோ!" என்று சவரன் தட்டை
அத்தொழிலாளிக்குப் பெரியவாள் காட்டினார்.
நாவிதர் உணர்ச்சிவசமானார்.
"மகளுக்குக் கண்ணாலம் நிச்சயம் பண்ணியிருக்குங்க
திருமாங்கல்யத்துக்குப் பெரியவங்ககிட்ட
கேக்கலாமான்னே வந்தேனுங்க. கேக்காமலே
பெரியவங்க கொடுத்தீட்டீங்க!" என்றார்.
"வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
.வாழு மாந்தர் குலதெய்வம்"
என்று பெரியவாளை நிச்சயம் கூறலாம். குலதெய்வம்
மட்டுமின்றி அவர்களுடன் மனத்தால் சகமானுடராகவும்
நிற்கும் அருளார் அவர்