"முதியவர் வெற்றிலை சீவலுக்காக ஏங்கிக்
கொண்டிருக்கிறார்' என்ற ரகசியமான உண்மை பெரியவாளுக்கு அரைக்கால் விநாடிப் பார்வையிலேயே எப்படித் தெரிந்தது?..


('எப்படித் தெரிந்தது?' நமக்கும் தான் புரியவில்லை!)


தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்


கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த ஒரு முதியவர்
ஸ்ரீமடத்து வாசலில் சோர்வுடன் உட்கார்ந்திருந்தார்.
ஸ்ரீ பெரியவாள் வாசற்பக்கம் எட்டிப் பார்க்கும்போது
அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள்.


பெரியவாள் அருகில் தரிசனத்துக்கு வந்திருந்த யாரோ ஒரு பக்தர் நின்று கொண்டிருந்தார்.


"நீ எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவியோ?"
என்று அவரைப் பார்த்துக் கேட்டார்கள் பெரியவா.


பக்தருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.


"உத்தரவு..." என்றார் குழைந்தபடி.


"நீ போய் எட்டணாவுக்கு வெற்றிலை சீவல் வாங்கிண்டு வந்து,வாசற்படியிலே உட்கார்ந்திருக்கிற கிழவர்கிட்டே
கொடு..."- பெரியவா


பக்தர் ஓட்டமாய் ஓடிப் போய் அருகிலிருந்த பெட்டிக்
கடையிலிருந்து வெற்றிலை, சீவல் வாங்கிக் கொண்டு வந்து,"இந்தாங்கோ,தாத்தா" என்று வயோதிகரிடம் நீட்டினார்.


முதியவருக்கு எல்லையில்லாத சந்தோஷம்.
ஒரு ராஜ்யத்தைக் கொடுத்திருந்தால் கூட, அவ்வளவு
சந்தோஷப்பட்டிருக்க மாட்டார் என்று தோன்றியது.


வாயெல்லாம் பல். (மீதமிருந்த பற்கள்)


"மகராஜனா இருக்கணும்...சௌக்கியமா தீர்க்காயுளா
இருக்கணும்...குழந்தை குட்டிகள் நன்றாக இருக்கணும்... காலையிலேர்ந்து வெத்திலை போடாமல் ரொம்பத் தவிச்சிண்டிருந்தேன். எழுந்து போக முடியல்லே.... காசும் இல்லே....நீ மகராஜனா இருக்கணும்" என்று மனதார வாழ்த்தினார்.


பக்தர் உள்ளே சென்று பெரியவாளிடம் உத்தரவு
நிறைவேற்றப்பட்டதைத் தெரிவித்தார்.


"கிழவர் என்ன சொன்னார்?"-பெரியவா.


"ரொம்ம்ம்ப சந்தோஷப்பட்டார்...நல்ல சமயத்திலே
வாங்கிக்கொடுத்தியேன்னு ஏராளமா ஆசீர்வாதம்
பண்ணினார்..."-பக்தர்.


"மகராஜனா இருன்னாரோ?"---பெரியவா.


"ஆமாம்"


"எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம் பார்...." என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்கள் பெரியவா


பக்தருக்கு ஒரு ரகசியம் புரியவில்லை.


'அந்த முதியவர் வெற்றிலை சீவலுக்காக ஏங்கிக்
கொண்டிருக்கிறார்' என்ற ரகசியமான உண்மை
பெரியவாளுக்கு அரைக்கால் விநாடிப் பார்வையிலேயே எப்படித் தெரிந்தது?....


'எப்படித் தெரிந்தது?' நமக்கும் தான் புரியவில்லை!