திருமால் திருக்கோயில்களில் நடக்கும் விழாக்களில் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுவது திரு அத்யயன உத்ஸவமாகும். இவ்விழா இருபது தினங்களில் நடைபெறுகிறது. மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு முன் பத்து தினங்கள் பகல் பத்து என்றும் திருமொழித் திருநாள் என்றும், ஏகாதசி தொடங்கி பத்து தினங்கள் இராப்பத்து என்றும் திருவாய்மொழித் திருநாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. பெருமாள் கோயில்களில் பகல்பத்து மண்டபம், இராப்பத்து மண்டபம் என்று விழா மண்டபங்கள் உள்ளன. இங்கு பெருமாளும் அவருக்கு இருபுறமும் ஆழ்வார்களும் எழுந்தருளியிருப்பார்கள். இருபது தினங்களிலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் நாலாயிர திவ்யப்ரபந்தம் முழுவதையும் விண்ணப்பம் செய்வார்கள்.
பகல்பத்தில் முதலாயிரமும் பெரிய திருமொழியும் ஸேவிப்பர். இராப்பத்தில் திருவாய்மொழியும் இயற்பாவும் ஸேவிப்பர். இராப்பத்து விழா திருமங்கை ஆழ்வாரால் திருவரங்கத்தில் தொடங்கப்பெற்றது. பகல்பத்து விழா நாதமுனிகளால் திருவரங்கத்தில் தொடங்கப்பட்டது. இவ்விழாக்கள் தொடங்கப்பெற்ற வரலாற்றை கோயிலொழுகு என்ற நு}ல் விரித்துரைக்கிறது. மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கிப் பத்து நாட்கள் திருவரங்கன் திருமுன்பு வேதங்களைப் பாராயணம் செய்யும் முறை முன்காலத்தில் இருந்தது. இதனைக் கண்ணுற்ற திருமங்கையாழ்வார் திருவாய்மொழியும் அவ்வாறே ஸ்ரீவைஷ்ணவர்களால் எம்பெருமான் திருமுன்பு ஸேவிக்கப்படவேண்டும் என்று விரும்பி எம்பெருமானைப் ப்ரார்த்திக்க, திருவரங்கனும் மிகவும் உகந்தருளி
அப்படியே வேதஸாம்யம் அநுக்ரஹித்தோம் அத்யயன உத்ஸவத்திலே வேத பாராயணத்தோடு திருவாய் மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள் என்று திருவாய் மலர்ந்தருளினார். திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வார் அர்ச்சைத் திருமேனியை மதுரகவிகள் மூலமாக எழுந்தருளச்செய்தார். திருவரங்கரும் ஆழ்வாரை நம்மாழ்வார் என்று திருநாமம் சார்த்திச் சிறப்பித்தார். மதுரகவிகளும் நம்மாழ்வாரின் ஸ்தானத்தில் திருவாய்மொழியைத் தொடங்கி தேவகானத்திலே இசையுடன் பாடி அபிநயத்துடன் விண்ணப்பம் செய்தார். மதுரகவிகளே திருவாய்மொழி விண்ணப்பம் செய்பவராக இருந்து அம்மரபினைத் தோற்றுவித்தார்.