Srimad bhagavatam skandam1 adhyaya 8 in tamil
Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 8
அத்தியாயம் 8
திரௌபதியையும் பாண்டவர்களையும் தேற்றிவிட்டு த்வாரகை செல்ல கிருஷ்ணன் எத்தனிக்கும் சமயம் அபிமன்யுவின் மனைவி உத்தரை பயத்துடன் அவரை நோக்கி ஓடிவந்தாள். அவள் கூறினாள்,
பாஹி பாஹி மகாயோகின் தேவ தேவ ஜகத்பதே
நான்யம் த்வதன்யம் பச்யே யத்ர ம்ருத்யு: பரஸ்பரம்
"மகாயோகியே தேவதேவா உலக நாயகனே ஒருவருக்கொருவர் யமனாக உள்ள இந்த உலகத்தில் உன்னைத்தவிர வேறு கதி இல்லை (இது தற்கால உலகத்திற்கும் நன்கு பொருந்தும் )'
"பழுக்கக்காய்ந்த இரும்பு போல் பாணம் என்னை தஹிக்கிறது. நான் போனாலும் என் கர்ப்பம் அழியாமல் இருக்க வேண்டும் ." என்றாள்.
கிருஷ்ணர் இது அஸ்வத்தாமா விட்ட அஸ்திரம் என்பதறிந்து அவள் கர்பத்துள் புகுந்து சக்ராயுதத்தால் அந்த அஸ்திரத்தை அழித்து சிசுவைக் காப்பாற்றினார். இதை பாகவதம் கீழ்க் கண்டவாறு வர்ணிக்கிறது.
அந்தஸ்த: சர்வபூதானாம் ஆத்மா யோகேச்வரோ ஹரி:
ஸ்வமாயயா ஆவ்ருணோத் கர்ப்பம் வைராட்யா:குருதந்தவே
யோகேச்வரனான் கிருஷ்ணன் எல்லா ப்ராணிகளுடைய ஹ்ருதயத்திலும் பிரகாசிக்கும் ஆத்மாவானவர் உத்தரையினுள்ளும் இருந்துகொண்டு குருவம்சத்தை அழியாமல் காக்க தன் மாயாசக்தியால் கருவுக்கு கவசம் அளித்தார்.
உண்மையில் பகவான் கர்பத்தினுள் புகாமலேயே சிசுவைக் காப்பாற்ற இயலும் ஆனால் பரீக்ஷித்திற்கு அருள வேண்டி சங்கசக்கரத்துடன் அங்குஷ்டமாத்ரமாக சிசுவின் முன் தோன்றினான். அதனால் பரீக்ஷித் மிகச்சிறந்த பாகவதன் ஆனான். அந்த சிசு உயிர் பிழைத்தாலும் ப்ரம்மாஸ்திரத்தின் கடுமையால் கரிக்கட்டை போல் பிறந்தது. கிருஷ்ணர் தன் பாதத்தால் அதை வருடிய பின் அதற்கு உயிர் வந்தது. பிறந்ததும் அந்த சிசு தன் முன்னால் கர்பத்தில் தோன்றியவர் யார் எனத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்த்ததால் பரீக்ஷித் என்ற பெயர் ஏற்பட்டது.
பிறகு திரும்பவும் கிருஷ்ணர் த்வாரகை செல்ல ஆயத்தமானபோது குந்தி பாண்டவர்களுடனும் த்ரௌபதியுடனும் வந்து அவரை துதி செய்தால். அது குந்தி ஸ்துதி என்று கூறப்படும் ஒரு பொருள் நிறைந்த துதியாகும்.
அவள் கூறியதாவது ,
" நீ ஆதிபுருஷன். ஈஸ்வரன். ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவன். எல்லா ப்ராணிகளுக்கும் உள்ளே அவைகளுக்கே தெரியாமல் நீ உறைந்துள்ளாய். மாயை என்ற திரைக்குள் ஒரு கை தேர்ந்த நடிகனைப்போல் நீ மறைந்துள்ளாய். யோகிகளுக்கும் ஞாநிகளுக்குமே எட்டாத உன்னை எங்ஙநம் என்னைப்போன்ற ஸ்த்ரீகளால் அறிந்து கொள்ள இயலும்? "
பிரபல ஸ்லோகமான 'கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோ நம: ' இங்குதான் சொல்லப்பட்டது.
இதற்கு அடுத்த ஸ்லோகமும் மிகவும் அழகு வாய்ந்தது.
' நம: பங்கஜனாபாய நம: பங்கஜ மாலினே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜங்க்ரயே '
தாமரையை உந்தியில் உடையோனுக்கு , தாமரை மாலை அணிந்தோனுக்கு, தாமரைக்கண்ணனுக்கு , தாமரைப் பாதம் உடையோனுக்கு நமஸ்காரம் .
குந்தி மேலும் கூறலுற்றாள்.
"எப்போதெல்லாம் எங்களுக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் நீ வந்து காப்பாற்றுகிறாய். உன் தரிசனம் கிடைக்கும் என்றாகள் எங்களுக்கு ஆபத்து வந்து கொண்டே இருக்கட்டும். "
" நீ உன்னிடம் பக்தியைத் தவிர வேறு ஒன்றும் இல்லாதவர்க்கு நீ எளியன். செல்வம் , பதவி, பிறவி, கல்வி இவைகளால் பெருமிதம் கொண்டவர்க்கு நீ அரியன். "
குந்தி பிறகு கிருஷ்ணனுடைய பாலலீலைகளை நினைத்து ஆச்சரியத்துடன் கூறுகிறாள்.
"நீ பிறப்பற்றவன் செயலற்றவன். அப்படி இருக்கையில் உரலில் கட்டுவதற்கு யசோதை கயிற்றைக் கையில் எடுத்தபோது பயத்துடனும் கண்ணில் கண்ணீருடனும் நின்றாயே ! உனக்கேது பயம்? பயம் அல்லவா உன்னைக் கண்டு பயப்படும்? "
( இதைப் படிக்கும்போது நம்மாழ்வார் இந்த நிகழ்ச்சியை நினைந்து 'எத்திறம்,' என்று ஆறு மாதம் நினைவற்று இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது அல்லவா?)
" நீர்ப்பெருக்கை கடலில் சேர்க்கும் கங்கை போல் எனது புத்தியானது வேறு விஷயத்தில் நாட்டம் இல்லாமல் இடையறாத அன்புப்பெருக்கை உன்னிடம் கொண்டு சேர்க்கட்டும். என் பந்த பாசத்தை அறுத்துவிடுவாயாக."
சூதர் கூறினார், மந்தம் ஜஹாஸ வைகுண்ட: மோஹயன் இவ மாயயா.
இதைக்கேட்டு கிருஷ்ணர் எல்லோரயும் மயக்குபவர் போல மாயப்புன்னகை புரிந்தார்.
பிறகு த்வாரகை செல்ல சித்தமானார். அப்போது யுதிஷ்டிரர் அங்கு வந்து உயிர்வதைக்குக் காரணமாய் இருந்த பாவத்தை எண்ணி வருந்த கிருஷ்ணர் அவரை பீஷ்மரிடம் போகும்படிக் கூறினார். இதுவும் பீஷ்மரின் கடைசி காலத்தில் அவரை உய்விக்கவும் தர்ம உபதேசத்தையும் விஷ்ணுஸஹஸ்ர நாமத்தையும் அவர் வாயிலாக வரவழைப்பதற்காக கிருஷ்ணன் நடத்திய நாடகம்.
இது அடுத்த அத்தியாயம்