அஞ்சனை மைந்தன், ஸ்ரீராமபிரானின் தூதனான ஸ்ரீஆஞ்சநேயர் பல்வேறு இடங்களில் அர்ச்சாரூபியாய் திருக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சென்னை, கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகில், எம்.கே.என். சாலையில் “மாங்குளம்’ என்று அழைக்கப்படும் மாங்குளத்துக்கரையில் அமைந்துள்ள திருக்கோயிலும் அவற்றில் ஒன்று. இங்குதான் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் அருள்புரிகிறார்.
இந்த விக்ரகம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீவியாஸராஜ மஹான் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு.

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் மேற்கு திசை நோக்கி திருமுக மண்டல தரிசனம் தருகிறார். வலது கரத்தில் அபய ஹஸ்தம் தாங்கியுள்ளார். இடது திருக்கரத்தில் சௌகந்திகா என்ற மலரைத் தாங்கியுள்ளார். இடுப்பில் சிறிய கத்தி உள்ளது. திருப்பாதங்கள் இரண்டும் தென்திசையை (இலங்கையை) நோக்கி அமைந்துள்ளன. வாலின் நுனியில் அழகிய சிறிய மணி அமைந்துள்ளது சிறப்பு.

இவரைத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வெற்றிலை மாலை சாற்றி, அணையா விளக்கில் நெய் செலுத்தி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட வேண்டும். ஒன்பதாவது வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று மாலை நேரத்தில் வடைமாலை சாற்றி, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட திருமணத் தடை நீங்கும்.
இவ்வாலயத்தில் வேணுகோபால ஸ்வாமி தனி சந்நிதியில் அருள்புரிகிறார். மிகச் சிறிய மூர்த்தியாய், குழலூதும் பாலகனாக, பின்புறம் பசுமாட்டுடன் காட்சி தருகிறார்.
மேலும் இத்தலத்தில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீஸுதர்ஸன நரஸிம்மர் ஸமேத ஸ்ரீசக்கரத்தாழ்வார். இவரை வழிபட மன நோய் தீரும். இவருக்குப் பின்புறம் நரசிம்மர் அருள் புரிகிறார்.
இத்திருத்தலத்தின் கன்னி மூலையில், ஸ்ரீவிநாயகப் பெருமான் மஹாவிஷ்ணுவின் அம்சமாக சங்கு சக்கரத்துடன் அருள்புரிவது சிறப்பு. இவருக்கு அருகில் ராகு – கேது இருவரும் தனித்துக் காட்சியளிக்கின்றனர்.
தகவலுக்கு: 99402 68210

Sourceinamani